மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும், தமிழ்நாட்டில் கட்சியைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நடிகர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று வெற்றி பெற்றதும், மூன்றாவது முறையாக அஸ்ஸாமில் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. எல்லை மாநிலமான அஸ்ஸாமில் தனது செல்வாக்கை பாஜக தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருப்பதை அசிரத்தையாகக் கடந்து போக முடியாது.
அஸ்ஸாம் பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி 126 இடங்களில் 102 இடங்களைப் பெற்று சட்டப்பேரவையில் ஐந்தில் நான்கு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் அமைந்த "அஸ்ஸாம் சொன்மிலித்தோ மோர்ச்சா' என்கிற பல கட்சிக் கூட்டணி வெறும் 21 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி இரண்டு இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் ஒரே ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன.
பாஜக கூட்டணி 48.27% வாக்குகளையும், காங்கிரஸ் கூட்டணி 35.4% வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. போட்டியிட்ட 90 இடங்களில் பாஜக 82 இடங்களை வென்றது என்றால், அதன் கூட்டணிக் கட்சியான போடோ மக்கள் முன்னணி போட்டியிட்ட 11 இடங்களில் 10 இடங்களை வென்றிருக்கிறது. அஸ்ஸாம் கண பரிஷத் 10 இடங்களில் வென்றிருக்கிறது.
இன்னொருபுறம், காங்கிரஸ் கூட்டணியில் 99 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 19 இடங்களிலும், 13 இடங்களில் போட்டியிட்ட ராய்ஜோர் தள் வெறும் 2 இடங்களிலும் வென்றிருக்கின்றன. காங்கிரஸ் கூட்டணியின் இன்னொரு கட்சியான அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் 10 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. எந்த அளவுக்கு எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்திருக்கின்றன என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
அஸ்ஸாம் மாநிலத்தை மேல் பகுதி (அப்பர் அஸ்ஸாம்), கீழ்ப் பகுதி (லோயர் அஸ்ஸாம்), பராக் பள்ளத்தாக்கு என்று மூன்றாகப் பிரிக்கலாம். மேல் பகுதியிலும், கீழ்ப் பகுதியிலும் பாஜகவும் கூட்டணிக் கட்சிகளும் மிகுந்த செல்வாக்குடன் திகழ்கின்றன. பராக் பள்ளத்தாக்கு என்பது வங்கதேசத்தை ஒட்டிய பகுதி. இங்கு அதிக அளவில் வங்க மொழி பேசும் முஸ்லிம்களும், ஹிந்துக்களும் இருக்கிறார்கள். அங்குதான் காங்கிரஸ் கூட்டணி செல்வாக்கு பெற்றிருக்கிறது.
மலைப்பிரதேசமான அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிரம்மபுத்ரா நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்த தேயிலைத் தோட்டப் பகுதியில் ஆதிவாசித் தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். அஸ்ஸாமின் மொத்த மக்கள்தொகையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஐந்தில் ஒரு பகுதியினர்; "டீ பெல்ட்' என்று அழைக்கப்படும்அந்தப் பகுதியில் உள்ள 45 தொகுதிகளில் 43 தொகுதிகளை பாஜக கூட்டணி வென்றிருக்கிறது.
அதிகரித்த கூலி, நிலப்பட்டா, ஆதிவாசிகளான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகள் 15 ஆண்டுகளாக அஸ்ஸாமில் ஆட்சி செய்த தருண் கோகோய் அரசால் நிறைவேற்றப்படவில்லை. பாஜக அரசு முதல் இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி, பழங்குடியினர் அந்தஸ்தை வழங்குவதாக உறுதி அளித்திருப்பதுதான் அதன் செல்வாக்கு அதிகரித்திருப்பதற்குக் காரணம்.
அதேபோல, அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 45 பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 43 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. பட்டியல் இன மக்கள் மத்தியில் வங்கதேசத்தினரின் சட்டவிரோதக் குடியேற்றமும், அதிகரித்துவரும் மத மாற்றமும் மிகப் பெரிய பிரச்னையாக உருவாகி இருக்கின்றன. அது பாஜகவுக்கு சாதகமாகத் திரும்பி இருப்பதில் வியப்பில்லை.
பாஜகவின் வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்கின்றன. ஹிமந்த விஸ்வ சர்மா அரசின் "ஒருணோதாய்' (அருணோதயம்) மகளிர் உரிமைத் தொகைத் திட்டமும், நிலப்பட்டாக்களை எண்மப்படுத்தி நில உரிமையை உறுதிப்படுத்தும் "வசுந்தரா' திட்டமும் மிகப் பெரிய அளவில் பாஜக அரசின் செல்வாக்கை அதிகரித்திருக்கின்றன. கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க "இரட்டை என்ஜின் சர்க்கார்'தான் காரணம் என்கிற கருத்து வலுப்பெற்றிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி, தனது மதச்சார்பின்மையை இழந்து முஸ்லிம் சிறுபான்மையிருக்கான கட்சி என்கிற தோற்றம் ஏற்பட்டிருப்பது அதன் தோல்விக்கு முக்கியமான காரணம். வெற்றி பெற்றிருக்கும் 19 காங்கிரஸ் உறுப்பினர்களில் 18 பேர் முஸ்லிம்கள். அந்தக் கட்சியின் செல்வாக்கு முஸ்லிம்கள் அதிகம் வாழும் பராக் பள்ளத்தாக்கில் மட்டுமே என்கிற அளவில் சுருங்கிவிட்டது.
சுதந்திரம் அடைந்த பிறகு 1970-கள் வரையில் காங்கிரஸின் செல்வாக்கு அஸ்ஸாமில் கொடிகட்டிப் பறந்தது. 1971-இல் வங்கதேசம் உருவானதைத் தொடர்ந்து அஸ்ஸாமில் நுழைந்த வங்கதேச சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிரான மாணவர் போராட்டம் அஸ்ஸாம் கண பரிஷத் என்கிற மாநிலக் கட்சியின் ஆட்சிக்கு வழிகோலியது. இந்த நூற்றாண்டின் முதல் 15 ஆண்டுகள் மீண்டும் காங்கிரஸ் செல்வாக்குப் பெற்றது.
2016 முதல் பாஜகவின் காலம் தொடங்கியது. ஹிமந்த விஸ்வ சர்மாவின் தலைமையிலான பாஜகவின் ஆதிக்கத்தை அகற்றுவது எளிதாக இருக்கப் போவதில்லை. பாஜகவின் அஸ்ஸாம் தொடர் வெற்றிக்கு இரட்டை என்ஜின் சர்க்கார், தொகுதி மறுசீரமைப்பு, வங்கதேசக் குடியேறிகளை அகற்றிய எஸ்ஐஆர் முன்னெடுப்பு மட்டுமல்லாமல், மத ரீதியான ஒருங்கிணைப்பும் மிக முக்கியமான காரணம்.
நாள்தோறும் நாடுக மன்னன், வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு.
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால், மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
திருக்குறள் (எண் 520) அதிகாரம்: தெரிந்து வினையாடல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவின் ‘ஹாட்ரிக்’ வெற்றி!

அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சா்மா மீண்டும் தோ்வு! நாளை பதவியேற்பு!!

அஸ்ஸாமில் மூன்றாவது முறையாக பாஜக வெற்றி!

அஸ்ஸாமில் பாஜக அமோக வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
