கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

சுயநல வல்லரசுகள்!

தைவானுக்கு 11 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யப்போவதாக கடந்த டிசம்பரில் அமெரிக்கா அறிவித்தது.

News image

சீனாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் - AP/PTI

Updated On :21 நிமிடங்கள் முன்பு

சீனாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் கடந்த வாரத்தில் உலகின் கவனத்தை ஈர்த்த அம்சங்களில் முக்கிய இடம்பெற்றது. குறிப்பாக சீனா மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு விவகாரத்தால் உறவில் ஏற்பட்ட விரிசல், மேற்காசிய போர்ச்சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு மத்தியில் அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.

அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனச் சந்தையை விரிவுபடுத்துவதுதான் டிரம்ப் பயணத்தின் முக்கிய நோக்கம். ஈரானுடனான போரால் அமெரிக்காவில் நிலவும் பணவீக்கம் மற்றும் உள்நாட்டு அரசியல் அழுத்தத்தை சமாளிக்க சீனப் பயணத்தை டிரம்ப் பயன்படுத்த முனைந்தார் என்பதுதான் உண்மை. அதனால் டிரம்ப்புடன் எலான் மஸ்க், என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங், ஆப்பிள் சிஇஓ டிம் குக் உள்ளிட்ட பல முன்னணி தொழிலதிபர்களும் பங்கேற்றனர். இதற்கு பலனும் கிடைத்தது.

டிரம்ப் பயணத்தின்போது அமெரிக்க நிறுவனங்கள்}சீனா இடையே பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. அதில், உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் முக்கியமானது. இந்த ஒப்பந்தத்தின்படி 200 விமானங்களை போயிங் நிறுவனத்திடம் வாங்குவதற்கு சீனா ஒப்புக்கொண்டது.

அமெரிக்க உற்பத்தித் துறைக்கு போயிங் நிறுவனம் மூலம் புத்துயிர் கொடுக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவரும் டிரம்ப்புக்கு இது ஒரு வெற்றிதான். ஆனால், முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த 500 விமானங்களை சீனா வாங்காதது அவர்களுக்கு ஏமாற்றம்.

இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற பின்னர் 2025 மே மாதம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கத்தார் நாட்டின் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் போயிங் நிறுவனத்திடம் 210 விமானங்களையும், சவூதி அரேபியா 20 போயிங் விமானங்களையும் வாங்க ஒப்புக்கொண்டன. அதே ஆண்டு ஜூலை மாதம் 103 போயிங் விமானங்களை வாங்க தென் கொரியா ஒப்புதல் தெரிவித்தது. தென் கொரியா மீதான அமெரிக்காவின் 15% வரிவிதிப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள தென்கொரிய அதிபர் லீ ஜா மியூங், வாஷிங்டனில் டிரம்ப்பை சந்தித்தபோது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

உலகளாவிய பதற்றம், பொருளாதார சூழலுக்கு இடையிலும் தனது வர்த்தகத்துக்குத்தான் அமெரிக்கா முக்கியத்துவம் தருகிறது. அதற்கு அமெரிக்காவின் எந்த அதிபரும் விதிவிலக்கு அல்லர். சீன பயணத்தை நிறைவு செய்தபோதுகூட, தானும் சீன அதிபர் ஜின்பிங்கும் மற்றவர்களால் தீர்க்க இயலாத பலவிதமான பிரச்னைகளைத் தீர்த்து வைத்ததாகத் தெரிவித்தார். ஆனால், அவை எந்தவிதமான பிரச்னை, அதனால் யாருக்குப் பயன் என்பதை டிரம்ப் விளக்கவில்லை.

இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில், உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்குக் காரணமாக உள்ள மேற்காசிய போர்ச்சூழல் முக்கிய இடம்பெற்றது. அதற்கு அடுத்தபடியாக பேச்சுவார்த்தையில் முக்கிய இடத்தைப் பிடித்தது தைவான் விவகாரம்.

நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள "ஒரே சீனா' கொள்கையின்கீழ், சீனாவின் ஒரு பகுதி தைவான் என்ற சீனாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறது. ஆனால், தன்னாட்சி பெற்ற, ஜனநாயக நாடான தைவான் மீது சீனா கோரும் இறையாண்மையை அமெரிக்கா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. அதேபோன்று, தைவானுடன் அதிகாரபூர்வமற்ற வலுவான உறவை அமெரிக்கா பேணி வருகிறது. மேலும், தைவானுக்கு தற்காப்பு நோக்கத்துக்காக ஆயுதங்களையும் விற்பனை செய்து வருகிறது.

தைவானுக்கான அமெரிக்காவின் ஆதரவு குறித்து டிரம்ப்பிடம் நேரடியாகக் குறிப்பிட்ட ஜின்பிங், "சீனா-அமெரிக்கா உறவில் தைவான் விவகாரமே மிகவும் முக்கியமானது. இதைச் சரியாகக் கையாண்டால் மட்டுமே இருதரப்பு உறவில் நிலைத்தன்மை நீடிக்கும். தவறும் சூழலில், கடுமையான மோதல்கள் வெடிக்கக்கூடும். அது ஒட்டுமொத்த சர்வதேச அமைதியையும் பாதிக்கும்' என்று வெளிப்படையாகவே சுட்டிக்காட்டினார். சீனாவின் எச்சரிக்கைக்குப் பிறகும், தைவான் மீதான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. ஆனால், அதில் சிறிய சமரசம் செய்துகொள்வது குறித்து அமெரிக்கா யோசிக்கிறது என்பதே உண்மை.

தைவானுக்கு 11 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யப்போவதாக கடந்த டிசம்பரில் அமெரிக்கா அறிவித்தது. இப்போது ஜின்பிங்கின் நேரடி எச்சரிக்கையைத் தொடர்ந்து, "தைவானுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்வது தொடர்பான விவகாரத்தில், அமெரிக்கா இன்னும் உறுதியான இறுதி முடிவை எடுக்கவில்லை' என்று டிரம்ப் தெரிவித்திருப்பதன்மூலம் தைவானுக்கான நம்பிக்கையை டிரம்ப் குலைத்துவிட்டதாகவே பார்க்க முடிகிறது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதும் டிரம்ப்பின் சீன பயணத்துக்கான மற்றொரு நோக்கம். வல்லரசான அமெரிக்காவே தனது உறவை நாடுகிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி, உள்கட்சிக் குழப்பங்களையும், தனக்கு எதிரான மனநிலையையும் மாற்ற முனைந்த அளவில் அதிபர் ஜின்பிங்குக்கு வெற்றி. அமெரிக்காவின்பலவீனத்தைப் பயன்படுத்தி, தைவானை பலவீனப்படுத்தும் தனது கொள்கையையும் உறுதிப்படுத்தியிருக்கிறது சீனா!

முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா

வஞ்சரை அஞ்சப் படும்.

முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புக் கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.

திருக்குறள் (எண் 824) அதிகாரம்: கூடா நட்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.