தமிழ்நாட்டில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துக்காக 2026-27 நிதிநிலை அறிக்கையின்போது ரூ. 29,800 கோடி ஒதுக்கப்படுவதாக தவெக அரசு அறிவித்தது. இதில் தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியத்துக்கு ரூ.340 கோடி ஒதுக்கி, குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிக்காக வழங்கியது.
உள்ளாட்சிகளில் அமலாகும் குடிநீர்த் திட்டங்கள் பலவும் உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியில்தான் நடைபெறுகின்றன. இந்த நிதியைப் பெறும் உள்ளாட்சிகள் எவ்வாறு?, எத்தனை ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்?, அதற்கான குடிநீர்க் கட்டணத்தை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும்? என்று கடன் கொடுக்கும் நிறுவனங்களே ஆலோசனை சொல்கின்றன.
குடிநீர்க் கட்டணத்தை உயர்த்த வேண்டும், ஒவ்வொரு குடிநீர் இணைப்புக்கும் மீட்டர் பொருத்தி, பயன்படுத்தப்படும் நீரின் அளவைக் கணக்கிட வேண்டும் ஆகியவை உள்பட பல ஆலோசனைகள் (நிபந்தனைகள்?) வழங்கப்படுகின்றன. இந்த ஆலோசனைகளை அமல்படுத்த முற்பட்டால் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிவிடுகிறது. அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்க எதிர்க்கட்சிகள் அதைப் பயன்படுத்துகின்றன. இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல.
குடிநீர்க் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.100 உயர்த்தலாம் என நகர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டால் அதற்கு எல்லா கவுன்சிலர்களும் கடும் எதிர்ப்புதெரிவிக்கிறார்கள். குடிநீர் கட்டண உயர்வுக்கு இந்த அளவுக்கு எதிர்ப்பு காணப்படும் தமிழ்நாட்டில், பாட்டில் குடிநீர் விற்பனை ஆண்டுக்கு ரூ 3,000 கோடியாக இருக்கிறது என்பதுதான் வேடிக்கை.
சென்னையில் மட்டும் 2 கோடி லிட்டர் பாட்டில் குடிநீர் தினமும் விற்பனையாகிறது. சென்னை மக்கள் 20 லிட்டர் குடிநீர் கேன் வாங்குவதற்காக ஒரு நாளைக்கு ரூ. 4 கோடி வரை செலவிடுகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குடிநீர் இணைப்பு பெற்றுள்ள ஒரு குடும்பம், மாதந்தோறும் சராசரியாக ரூ. 553 குடிநீருக்கு செலவிடுகிறது என்று ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கு, உள்ளாட்சிகள் விநியோகம் செய்யும் குடிநீர் தரமானதாக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக இல்லை என்பது முக்கியக் காரணம். தரமாக இல்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட புதை குழாய்கள் உடைந்து அவற்றில் மழை நீர் கலப்பதும், சில வேளைகளில் சாக்கடை நீரும் சேர்ந்துவிடுவதும் வழக்கமாகவே மாறியிருக்கிறது.
குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கழுவப்படுவதாக கணக்கு காட்டுவது மட்டுமே நடக்கிறது; உண்மையில் எதுவும் நடப்பதில்லை. உள்ளாட்சி விநியோகம் செய்யும் நீரை குளிக்க, துணி துவைக்க, செடிக்கு தண்ணீர் ஊற்றப் பயன்படுத்திக் கொண்டு, குடிக்கவும் சமையலுக்கும் தனியாரிடம் கேன்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வாங்குவது நகர வாழ்க்கையாக மாறிவிட்டது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆர்ஓ வாட்டர் வசதியை உருவாக்கி, நிலத்தடி நீரைச் சுத்திகரித்து குடிநீராக வீடுகளுக்கு விநியோகம் செய்கிறார்கள். பல வீடுகளில் ஆர்ஓ கருவிகள் பொருத்தி, சமையலுக்கும் குடிக்கவும் அந்த நீரைப் பயன்படுத்துகிறார்கள். அப்படியானால், குடிநீர் விநியோகத்துக்காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீட்டுக்கான அவசியம் என்ன? குடிநீர் விநியோகமா அல்லது பொதுப்பயன்பாட்டுக்கான தண்ணீர் விநியோகமா என்கிற கேள்வியும் எழுகிறது.
பொதுப்பணித் துறையை இரண்டாகப் பிரித்து, கட்டுமானங்களுக்கு ஒரு பிரிவும் நீர்வளத் துறையை தனியாகவும் பிரிக்க வேண்டிய சூழ்நிலை உருவானதுபோல, இப்போது பொதுப் பயன்பாட்டுக்கு தண்ணீர் விநியோகம், சமையல் மற்றும் குடிநீருக்காக தனியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் எனத் தனியாக இரு பிரிவுகள் ஏற்படுத்துவதுதான் இதற்குத் தீர்வாக இருக்கும்.
சிங்கப்பூர் போன்ற சில நகரங்களில் இத்தகைய இரு வகை குழாய்கள் நடைமுறையில் உள்ளன. ஒரு குழாயில் வரும் நீர் குடிநீராகவும், மற்றொரு குழாயில் வரும் நீர் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய மாற்றங்களை தமிழ்நாட்டில் கொண்டுவருவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றாலும், குடிநீர் விநியோகத்தை ஏதாவது ஒரு வகையில் முறைப்படுத்தியாக வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறிப்பிட்ட அளவுக்கான தண்ணீரை உள்ளாட்சி அமைப்புகள் லாரிகளில் இலவசமாக வழங்குவது இப்போதைக்கு மிக எளிய மாற்றாக அமையும். அவ்வாறு செய்தால் நடுத்தர மக்கள் குடிநீருக்காக ஒரு தொகையை மாதந்தோறும் செலவிடும் அவலம் நேராது.
எந்தவித தரக்கட்டுப்பாடும் இல்லாமல், குடிநீர் கேன் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் மக்களைச் சுரண்டிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழக அரசு தனது குடிநீர் விநியோக முறையை மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். ஜெயலலிதா ஆட்சியில் குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட "அம்மா'குடிநீர் பாட்டில்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது நினைவுக்கு வருகிறது.
பெண்களுக்கு அனைத்து அரசுப் பேருந்துகளிலும் இலவசப் பயணம்; மாதந்தோறும் உரிமைத் தொகையாக ரூ. 1,000 அரசு வழங்கும் நிலையில் பொதுமக்கள் அடிப்படைத் தேவையான குடிநீரை விலை கொடுத்து வாங்குவது என்ன நியாயம்? தண்ணீர் வேறு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வேறு. குடிநீருக்காக நடுத்தர வருவாய்க் குடும்பம் செலவு செய்வது, மக்கள் நல அரசின் நல்ல நிர்வாகத்துக்கு அழகு அல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


