வளர்ந்த நாடுகள் என்று அடையாளப்படுத்தப்படும் எல்லா நாடுகளிலும் உயர்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதால்தான் அந்த நாடுகள் வளர்ந்த நாடுகள் ஆகின. உயர்கல்வி என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடையது. நாட்டின் வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் இதெல்லாம் அந்த நாட்டின் உயர்கல்வியில் உள்ள முன்னேற்றத்தைப் பொறுத்துதான் இருக்கும். வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பொறுத்தே இருக்கிறது என்ற உண்மையை நாம் எந்த விவாதமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் உண்மை.
நிதி ஒதுக்கீடு
உலக அளவில் உயர்கல்வி பயிலுவோர் எண்ணிக்கையில் ஒப்பீட்டளவில் இந்தியா பின்தங்கியுள்ளது. உயர்கல்வியில் சேர்க்கை சதவீதம் உலக சராசரியில் நாம் கணக்கிடும் போது 40 ஆக இருக்கிறது. இந்தியாவில் உயர்கல்வி சேர்க்கை 28 சதவீதம் தான். அதுவும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. உயர்கல்வியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கேரளம் 2 ஆவது இடத்தில் இருக்கிறது. பிகார் கடைசி இடத்தில் உள்ளது.
அதே நேரம் கல்விக்காக நாம் செலவிடும் தொகை மிகவும் குறைவு. மத்திய அரசு சுமார் ரூ.50 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, அதில் கல்விக்காக வெறும் ரூ.ஒரு லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இது போதாது. மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தற்போது தனிநபர் சதவீதம் பல நாடுகளை விட மிக மிகக்குறைவு. ஒரு சரியான உதாரணம் என்று நாம் குறிப்பிட வேண்டும் என்றால், பொருளாதார கூட்டுறவு, வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி) நாடுகளில் சராசரியாக தனிநபர் உயர் கல்விக்கான செலவு சராசரியாக ரூ.14.50 லட்சமாக உள்ளது. அமெரிக்காவில் இதைவிட அதிகமாக உள்ளது.
மக்கள் தொகையில் நம்முடன் போட்டியிடும் சீனா சுமார் ரூ.2 லட்சம் செலவிடுகிறது. ஆனால் இந்தியாவோ வெறும் ரூ.21 ஆயிரம் மட்டுமே செலவிடுகிறது. உயர் கல்வியில் நாம் பின்தங்கி இருப்பதற்கு இதுவும் காரணம். இதை நாம் சரி செய்யவிட்டால் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய முடியாது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதம் செலவிட வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோத்தாரி ஆணையமும் இதையேதான் கூறியிருந்தது. ஆனாலும் இந்த இரு பரிந்துரைகளுமே கண்டுகொள்ளப்படவில்லை.
பொருளாதாரம் உயரும்
கல்விக்கான பொது செலவினங்களில் உலக அளவில் ஒரு தரவரிசை உள்ளது. இந்தத் தரவரிசையில் இந்தியா 190 நாடுகளில் 155 ஆவது இடத்தில் இருக்கிறது. அனைவருக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்றால் அது நம் கல்வியைப் பொருத்தே, குறிப்பாக உயர் கல்வியைப் பொருத்தே இருக்கும். ஒரு குடும்பத்தில் ஒருவர் உயர் கல்வி படித்திருந்தால் அவருக்கான வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும். உயர் கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம். இதன் மூலம் அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக வளம் பெறும்.
இப்படி ஒவ்வொரு குடும்பத்தில் இருப்பவர்களும் உயர்கல்வி கற்பவர்கள் எண்ணிக்கை அதிகமானால் நாட்டின் பொருளாதாரம் வளரும். இந்த அடிப்படை தத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
சர்ச்சைகள் கூடாது
கல்வி சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். கல்வி பற்றிய சர்ச்சை மத்திய, மாநில அரசுகளுக்கிடையே கூடவே கூடாது. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் இதுதான் அவசர தேவை. கல்வி என்பது வளர்ச்சி சம்பந்தப்பட்டது என்ற சிந்தனையோடு மத்திய, மாநில அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். குறிப்பாக பல்கலைக்கழகம் மானிய குழு வரைவு விதிமுறைகள் அந்த நோக்கத்தில் இருக்க வேண்டும். சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி மாற்றம் செய்திருக்கிறது
குழுவில் யுஜிசி சார்பாக ஒரு உறுப்பினர் மாநில ஆளுநர், பல்கலைக்கழகம் சார்பில் ஒரு பிரதிநிதி இடம்பெறுவார் எனவும் மாநில அரசின் சார்பில் இனி உறுப்பினர்கள் இடம்பெற மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதை தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் எதிர்க்கின்றன. இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் முன்பு யுஜிசி மாநில அரசுகளுடன் கலந்தாலோசிப்பது நல்லது.
கல்வித் தரம்: உலக நாடுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பல்வேறு துறைகளில் தவிர்க்க முடியாத முக்கியத்துவம் பெறுகிறார்கள். அதற்குக் காரணம் தமிழகத்தில் உள்ள உயர் கல்வியின் தரம்தான். நானே வெளிநாட்டில் பயணம் செய்யும்போது சில இளைஞர்கள் என்னிடம் அறிமுகம் செய்து கொண்டு நான் உங்கள் பல்கலைக்கழகத்தில் படித்தேன் என்று சொல்லி அந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் ஒரு முக்கிய பதவியில் இருப்பதைப் பற்றி பெருமையாக சொல்வார்கள். இதுதான் உயர் கல்வியின் சக்தி.
இதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். உயர் கல்வியின் தரம் மேலும் உயர்ந்தால் நாம் வளர்ந்த நாடு என்ற இலக்கை எளிதில் அடையும். தமிழகத்தைப் பொறுத்தவரை நமது உயர்கல்வி திறன், ஆராய்ச்சித் திறன் இவற்றிற்கு இணையாக நாம் இந்தியாவில் எந்த மாநிலத்தையும் ஒப்பிட முடியாது. தமிழக மாணவர்களின் ஆராய்ச்சித் திறன், கல்வித் திறன் உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு இருக்கிறது என்பதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.
உயர் கல்விக் கூடங்கள் தரமான கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் முறையான பயிற்சிகள் வழங்க வேண்டும். கிராமப்புற மாணவர்கள் உயர் கல்வி பயின்று வேலைக்குச் சென்று அவர்கள் ஈட்டும் வருமானம் அவர்களின் குடும்ப வருமானத்தைவிட 10லிருந்து 20 மடங்கு அதிகம். 2024 இல் இந்தியாவில் உயர் கல்வி பயின்று வெளிநாட்டில் வேலைபார்த்து சொந்த ஊருக்கு அவர்கள் அனுப்பிய தொகை சுமார் ரூ.11 லட்சம் கோடி என்று கூறுகிறார்கள்.
இதன் மூலம் அதிக வெளிநாட்டு வருமானத்தை பெறும் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. உயர் கல்வியால் மக்களுடைய அறிவுத் திறன் வளரும், விழிப்புணர்வு ஏற்படும். அதன் விளைவாக அந்த நாட்டில் மக்களாட்சி சிறந்து விளங்கும். உயர் கல்வி வீட்டையும் உயர்த்தும் நாட்டையும் உயர்த்தும்.
Summary
The country's higher education sector is on the rise!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உயர்வுக்கான பாதை உயர்கல்வி

உயர்வுக்கான பாதை உயர் கல்வி!

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்பாடுகள்
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி



