தூத்துக்குடியில் நான்குமுனைப் போட்டி: ஆனால்...

தூத்துக்குடியில் நான்குமுனைப் போட்டி: ஆனால்...

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தொழில் நகரமாகவும், தமிழகத்தின் 2-ஆவது துறைமுக நகரமாகவும் விளங்கி வருகிறது. இது சாலை, ரயில், விமானம், கப்பல் என நான்கு வகை போக்குவரத்து கொண்டதாகவும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் நிறைந்த பூமியாகவும், நவதிருப்பதி, நவகைலாயம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் போன்ற பல புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களைக் கொண்டதாகவும் விளங்குகிறது.

இந்த மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 6 பேரவைத் தொகுதிகளையும் ஒருங்கிணைத்து மறுசீரமைப்புக்குப் பின்னர் கடந்த 2009, 2014, 2019 என 3 மக்களவைத் தேர்தலை இத்தொகுதி எதிர்கொண்டது.

இதில், 2009 தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை, அதிமுக வேட்பாளர் சிந்தியா பாண்டியனை விட 76,649 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமியை விட 1 லட்சத்து 24,002 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2019-இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டு, தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார். திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி களமிறக்கப்பட்டதால் இந்தத் தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றது. இதில் தமிழிசை சௌந்தரராஜனை விட 3 லட்சத்து 47,209 வாக்குகள் அதிகம் பெற்று கனிமொழி வெற்றி பெற்றார்.

தற்போதைய மக்களவைத் தேர்தலில் (2024) திமுக, அதிமுக, பாஜக ஆகிய பிரதான கட்சிகள் தனித்தனி அணிகளை அமைத்து களம் காண்கின்றன. மற்ற தொகுதிகளில் உள்ளது போல நாம் தமிழர் கட்சியும் தனித்துக் களம் காண்கிறது.

மதம், ஜாதி வாக்குகள்: இத்தொகுதியில் ஹிந்துக்கள் சுமார் 72 சதவீதம், கிறிஸ்தவர்கள் 21 சதவீதம், முஸ்லிம்கள் 7 சதவீதம் உள்ளனர். நாடார் சமூகத்தினர், பட்டியலினத்தவர்கள் அதிக அளவிலும், பிற சமுதாயத்தினர் பரவலாகவும் உள்ளனர். குறிப்பாக, ஓட்டபிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி பேரவைத் தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு நாயுடு சமூகத்தினர் கணிசமாக உள்ளனர்.

கள நிலவரம்: தற்போது தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், "இந்தியா' கூட்டணியில் உள்ள திமுக சார்பில் ஏற்கெனவே கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஆர். சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில் உள்ள தமாகா சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜா.ரொவினா ரூத் ஜேன் ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக: திமுகவைப் பொருத்தவரை, கடந்த மழை வெள்ள பாதிப்பின்போது கனிமொழி எம்.பி.யின் செயல்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் குறை கூறின.

ஆனாலும் மக்களை சந்தித்து அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவியை அளிக்க அவர் காட்டிய ஆர்வம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் அமைச்சர்களான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பெ.கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதிமுக: அதிமுக வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள மங்களபுரத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அதிமுகவினர் இங்கு முதலாவதாக வந்து வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினர்.

தமாகா: பாஜக கூட்டணியின் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், முதன்முதலாக மக்களவைத் தேர்தலை சந்திக்கிறார்.

வேட்பாளர் புதியவர் என்றாலும், அவர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது பிரதமர் மோடியின் தமிழக வருகை, மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் என்ற யாத்திரை ஆகியவை காரணமாக தூத்துக்குடியில் முன்பைவிட பாஜகவுக்கு ஆதரவு தென்படுகிறது.

நாம் தமிழர் கட்சி : நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக இந்த முறை பல் மருத்துவர் ஜா.ரொவினா ரூத் ஜேன் களமிறக்கப்பட்டுள்ளார். மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தல் களத்தைச் சந்திப்பதாக அந்தக் கட்சியினர் தெரிவித்தனர்.

தூத்துக்குடி தொகுதியில் பாஜக நேரடியாக மீண்டும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணிக் கட்சியான தமாகாவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. கடந்த முறை பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக, தற்போது

தனி அணி அமைத்து களம் காண்கிறது.

தூத்துக்குடியில் ஆளும் திமுகவுக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட கால கோரிக்கைகள்

தூத்துக்குடியில் இருந்து பிற நகரங்களுக்கு ரயில் சேவை அதிகரிப்பு, தூத்துக்குடி - விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு ரயில் பாதை பணிகளை விரைவுபடுத்துவது, சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகளை புதிதாக தொடங்க அனுமதிப்பது, தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, 1-ஆம் ரயில்வே கேட், 2-ஆம் கேட் பகுதியில் மேம்பாலம் அல்லது சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்துவது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள வி.வி.டி. சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்வது உள்ளிட்டவை தூத்துக்குடி மக்களின் பிரதான கோரிக்கைகள்.

கோவில்பட்டியை தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும்; தீப்பெட்டி தொழிற்சாலைக்கான மூலப்பொருள்களை சிட்கோ மூலம் வழங்க வேண்டும்; அங்கு புதிய பேருந்து நிலையம் சீராக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். எட்டயபுரத்தில் உள்ள நான்குவழிச் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

விளாத்திகுளத்தில் புதிய தொழிற்சாலைகள், கீழவைப்பாறு கடற்கரை கிராமத்தில் தூண்டில் வளைவு அமைப்பது, பம்பை- அச்சன்கோயில்- வைப்பாறு இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்தி கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் தேவையைப் பூர்த்தி செய்வது உள்ளிட்டவையும் உள்ளூர் மக்களின் கோரிக்கைகள்.

ஆன்மிகத் தலமான திருச்செந்தூர் பேரவைத் தொகுதியில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த வேண்டும். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தூர்வாரி, தாமிரவருணி பாசனத்தில் உள்ள 53 குளங்களையும் தூர்வாரி விவசாயத்துக்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் உள்ளன.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்காளர்கள்

ஆண்கள் : 7,13,388 பெண்கள்: 7,44,826 மூன்றாம் பாலினத்தவர் : 216 மொத்தம் : 14,58,430

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com