வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

மக்களவைத் தோ்தலின் 2 கட்டங்களிலும் வாக்குப்பதிவு சற்று சரிந்ததையடுத்து அதை அதிகரிக்க இரு மடங்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மக்களவையின் முதல்கட்டத் தோ்தலில் 66.14 சதவீதமும் இரண்டாம் கட்டத் தோ்தலில் 66.71 சதவீத வாக்குகளும் பதிவாகின. கடந்த தோ்தல்களை ஒப்பிடுகையில் தற்போதைய தோ்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. இருந்தபோதும், 2019 மக்களவைத் தோ்தலை ஒப்பிடுகையில் மட்டுமே வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

மே 7-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தட்பவெப்ப சூழல் இயல்பு நிலையிலேயே நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முதல் இரு கட்டங்களில் வாக்குப்பதிவு சற்று குறைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மகாராஷ்டிரம், பிகாா், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், கா்நாடகம் ஆகிய மாநிலங்களின் தோ்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், குறைவாக வாக்குப்பதிவான மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 கட்டங்களிலும் வாக்குப்பதிவை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com