பிரசார பீரங்கி "வாட்ஸ்ஆப்'

பிரசார பீரங்கி "வாட்ஸ்ஆப்'

இந்தியாவில் உள்ள சுமார் 120 கோடி கைப்பேசி பயன்படுத்துபவர்களில் சுமார் 60 கோடி பேர் அறிதிறன்பேசிகளைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் சுமார் 54 கோடி பேர் பயன்படுத்தக் கூடிய ஒரு செய்தி பரிமாற்ற செயலியாக வாட்ஸ்ஆப் உள்ளது. இதில், ஒரு குறிப்பிட்ட தகவல், புகைப்படம், விடியோவை குறிப்பிட்ட தனி நபருடனோ அல்லது ஒரு குழுவினருடனோ உடனடியாக பகிர்ந்து கொள்ள முடிகிறது.

யாரும் யாருக்கும் எந்தவித ரகசியமான தகவலையும் வாட்ஸ்ஆப்பில் அனுப்ப முடியும் என்பதால், இது மற்ற ஊடகங்களுடன் ஒப்பிடும்போது தனித்துக் காணப்படுகிறது.

தனது கட்சியின் திட்டங்கள், செயல்பாடுகள், எதிர்க்கட்சியினர் மீது குற்றச்சாட்டுகள், ஊழல்கள் போன்றவற்றை அடுத்த நொடியில் மிகப் பெரிய எண்ணிக்கையிலான வாக்காளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு வாட்ஸ்ஆப் பயன்படுகிறது. ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களிலும் இதுபோன்ற பிரசாரங்களை மேற்கொள்ள வாய்ப்பு இருந்தாலும் அவற்றில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஃபேஸ்புக் ஆளுங்கட்சியை விமர்சித்து பதிவிட்டால் அது அதிகப்படியானவர்களுக்கு காட்டப்படாமல் மறைக்கப்படுவதாகவும் அந்த ஊடகங்களை ஆளுங்கட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன. அதிகப்படியான நபர்களைச் சொற்ப செலவில் (அச்சு, காட்சி ஊடகங்கள், பிற விளம்பர வழிமுறைகளுடன் ஒப்பிடும்போது) சென்றடைவதால் அரசியல் கட்சிகள் வாட்ஸ்ஆப் போன்ற மின்னணு ஊடகங்களைத் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கின்றன. (தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பாஜக சார்பில் வாட்ஸ்ஆப்பில் அரசின் சாதனைகள் பற்றிய தகவல் வாக்காளர்களுக்கு அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்).

வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிரப்படும் தகவல்கள் வாக்காளர்களை மற்ற எந்த ஊடகங்களைக் காட்டிலும் வெகு விரைவில் சென்றடைகின்றன. தவிர அது அந்தத் தகவலைப் பெறுபவர்கள் தாங்களும் ஒரு செய்தித் தொடர்பாளராக மாறி "ஃபார்வர்டு' செய்வதால் எண்ணிலடங்காத வாக்காளர்களை அந்தத் தகவல் உடனடியாக சென்றடைகிறது. இதை வாட்ஸ்ஆப்பின் சிறப்பம்சம் என்று கூறும் அதேநேரம், அதுவே பல நேரங்களில் வாட்ஸ்ஆப்பின் பலவீனமாகவும் மாறியதற்கான வரலாறும் உள்ளது.

அதேநேரம் தங்களது செயலி அரசியல் கட்சிகளின் பிரசாரங்களுக்கானது இல்லை என்றே வாட்ஸ்ஆப்பின் தனியுரிமை கூறுகிறது. வணிகத்துக்கான வாட்ஸ்ஆப் பயன்பாடு அரசியல் கட்சிகளின் பிரசாரங்களுக்கு இல்லை. தேர்தல் பிரசார செய்திகளை அனுப்பும் நிலையில் அவர்களின் கணக்குகள் தடை செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆனால், வாட்ஸ்ஆப்பை பொருத்தவரை அதில் பகிரப்படும் தகவல்கள் ஒருவரில் இருந்து இன்னொருவர் என்ற அடிப்படையில் மட்டுமே இருப்பதால் அவற்றைக் கண்காணிப்பது அத்தனை எளிதானது அல்ல. சமூக ஊடகங்களை முழுமையாக கண்காணிப்பதற்கு இந்தியாவில் தனியான அமைப்பு இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

அதிகாரபூர்வமற்ற வகையில் வாட்ஸ்ஆப் செயலி தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டாலும், எல்லா அரசியல் கட்சிகளுக்கும், சுயேச்சைகள் முதலான எல்லா வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பை வழங்கும் ஒரு தளமாக அது இருப்பதை மறுக்க முடியாது. அதிகாரம், பணம், செல்வாக்கு போன்றவை மற்ற பிரசார தளங்களில் ஆதிக்கம் செலுத்தினாலும் இன்றைய தினம் வரையிலும் வாட்ஸ்ஆப் எல்லோருக்குமான தளமாகவே உள்ளது.

ஒருவரின் தனியுரிமையை மீறும் வகையிலான புகைப்படங்கள், விடியோக்களை பகிரக்கூடாது. தேர்தலின்போது உண்மையான தகவல்களை மட்டுமே பகிர வேண்டும். தவறான பிரசாரம் செய்யக் கூடாது. போலியான செய்திகள் பற்றி புகார் அளிக்க வேண்டும்.

வாட்ஸ்ஆப் குழுக்களை நிர்வகிக்கும் அட்மின்கள் தேர்தல் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் வாட்ஸ்ஆப் எச்சரிக்கை விடுத்தாலும் அவை பெயரளவுக்கானதாகவே இருக்கும் என்பதும் இந்தத் தேர்தலிலும் வாட்ஸ்ஆப், வாக்காளர்களிடையே கருத்து உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பைச் செய்யும் என்பதும் உண்மை.

-க. தங்கராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com