
தமிழ்நாட்டைப் பொருத்தவரை வெற்றியும் தோல்வியும் இரண்டு அணிகளுக்கு உள்ளேதான்; மூன்றாவதாக ஓர் அணிக்கு மக்கள் இடம் தந்ததில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த 1967-க்குப் பிறகு நடந்த அனைத்து மக்களவைத் தேர்தல்களிலும் அப்படிதான் இருந்திருக்கிறது. அடுத்து எம்.ஜி.ஆர். தலைமையில் புதிய திராவிட கட்சியான அதிமுக தோன்றிய பின் போட்டி என்பது எப்போதும் திமுக – அதிமுக அணிகளுக்கு இடையிலானதாக மட்டுமே இருந்து வந்திருக்கிறது.
பிற மாநிலங்களைப் போல அல்லாமல் மக்களவைக்கான உறுப்பினர்களையும் பெரும்பாலும் இந்த இரு அணிகளுக்கு இடையிலிருந்துதான் தேர்ந்தெடுத்து வந்திருக்கின்றனர். மூன்றாவது அணியிலிருந்தோ அல்லது சுயேச்சையாக ஒரு வேட்பாளரோ எப்போதும் வெற்றி பெற்றதில்லை.
தமிழ்நாட்டைப் போலவே இரு முனைப் போட்டி நிலவும் மாநிலங்களான கேரளம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்றவற்றில்கூட அவ்வப்போது பிரதானமான இரு அணிகளைத் தவிர்த்து மூன்றாவது அணியிலிருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
1967 முதல் அனைத்து தேர்தல்களிலுமே ஏதேனும் ஓர் அணி மட்டுமே அதிக – பெருமளவிலான எண்ணிக்கையிலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 1998, 1999, 2009 தேர்தல்களில் மட்டும் எதிரணியால் கூடுதல் இடங்களைப் பெற முடிந்திருக்கிறது. ஆனாலும்கூட மூன்றிலொரு பங்கைத் தாண்டியதில்லை.
2014 மக்களவைக்கான லேடியா?, மோடியா? தேர்தலில் மட்டும் சின்னதாக ஒரு மாற்றம். அதிமுக அணி 37 தொகுதிகளை வென்றது. எதிர்த்துப் போட்டியிட்ட திமுக தலைமையிலான அணி துடைத்துப் போடப்பட்ட நிலையில், கன்னியாகுமரி, தருமபுரி ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இந்தத் தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவியது. அதிமுக தனித்துப் போட்டியிட்டது. தேமுதிக, பாமகவுடன் பாரதிய ஜனதா கட்சி இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியாக போட்டியிட்டது. திமுகவும் காங்கிரஸும் இடதுசாரிகளும் தனித்தனியே போட்டியிட்டனர்.
1996, 1998, 1999, 2009 தேர்தல்களில் எல்லாம் மதிமுக, தமாகா, தேமுதிக போன்றவற்றின் தலைமையில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் வெற்றி பெறவில்லை.
1967 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் இரு அணிகளேதான் தொடர்ந்து வெற்றி பெற்றுவந்திருக்கின்றன. 14 முறை நடந்த தேர்தல்களில் 10 தேர்தல்களில் ஏதாவதோர் அணிதான் ஒட்டுமொத்தமாகப் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி வந்துள்ளது.
இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டியாக திமுக அணியும் அதிமுக அணியும் மூன்றாவதாக பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் போட்டியிடுகின்றன. நாலாவதாக நாம் தமிழர் கட்சியும் பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் காட்டும் வரலாறு இதுவரையிலும் இரண்டில் ஒன்று என்றுதான் சொல்கிறது. ஒருவேளை இந்தத் தேர்தலில் ஏதாவது மாற்றம் நேரிட்டால் வரலாற்றில் இடம் பெறக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். பொறுத்திருக்கலாம், ஜூன் 4-க்காக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.