‘இங்கு வாக்குக்குப் பணம் பெற மாட்டோம்’ : கிராம மக்கள்!

நேர்மையை நோக்கி ஒரு கிராமம்: மாணவர்களின் விழிப்புணர்வு முயற்சி
பெருந்தலையூர் கிராம மக்கள்
பெருந்தலையூர் கிராம மக்கள்

தேர்தலில் வாக்களிப்பதற்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் சட்டத்துக்குப் புறம்பானது. ‘சட்டத்துக்கு மட்டுமல்ல; எங்களுக்கும்தான்’ என ஒரு ஊரே திரண்டு சொல்ல வைத்திருக்கிறார்கள், கல்லூரி மாணவர்கள்.

திருப்பூர் மாவட்டம், பெருந்தலையூர் கிராம ஊராட்சியில் அரசுசாரா தன்னார்வ அமைப்பான யான் அறக்கட்டளையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மக்களிடம் நேர்மையான தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

‘வாக்குக்குப் பணம் பெற மாட்டோம்; வேட்பாளரை அறிவோம்’ என்கிற இரு கொள்கைகளை மையமாகக் கொண்டு மக்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்துப் பேசிவருகின்றனர்.

‘நேர்மையான தேர்தல்’ பிரசாரத்தில் மாணவர்கள்
‘நேர்மையான தேர்தல்’ பிரசாரத்தில் மாணவர்கள்

‘இந்த வீட்டில் வாக்குக்கு லஞ்சம் பெற மாட்டோம்’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கதவுகளும் ‘இந்தப் பகுதியில் வாக்களிக்கப் பணம் பெற மாட்டோம்’ என்கிற பதாகைகள் தாங்கிய தெருக்களும் ‘மக்கள் எத்தகையரோ ஆள்பவர் அத்தகையர்’ என்ற பெரிய பதாகையையும் பெருந்தலையூர் கிராமத்தில் காண முடிகிறது.

மக்கள் சொன்னபடி பணம் பெறாமல் இருந்தால் தன்னார்வ அமைப்பு அவர்களின் சில தேவைகளை நிறைவேற்றித் தருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், ஊரின் வாயிலில் ‘நேர்மையான பெருந்தலையூர்’ என்று பதிக்கப்பட்ட உலோக அலங்கார வளைவு ஒன்றையும் அமைத்துத் தரவுள்ளார்கள். வளைவின் பகுதியைத் தேர்தலுக்கு முன்பே பொருத்துகிறார்கள்.

‘70 சதவீதத்துக்கு அதிகமான மக்கள் வாக்குக்குப் பணம் பெறவில்லை என்பது உறுதியானால் மற்றொரு பாதி வளைவும் பொருத்தித் தரப்படும். இல்லையெனில், பொருத்திய பகுதியும் எடுத்துச் செல்லப்படும்’ என மக்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும் மாணவர்களிடம் தினமணி சார்பில் பேசினோம். 

கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள பாதகை
கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள பாதகை

ஈரோடு கோபி அரசுக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் சிபி பேசினார்,  “யான் அறக்கட்டளை நடத்தும் அறக்கல்வி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்கள் நாங்கள். வகுப்புகளின்போதே எங்களுக்கு மக்களோடு பணியாற்றும் களச்செயல்பாடுகள் கொடுக்கப்படும். வகுப்பு நிறைவுற்றதும் நாங்கள் பெருந்தலையூர் கிராமத்தை முன்மாதிரியாக மாற்ற செயல்பட்டோம். தூய்மையாக்குதல் உள்ளிட்ட பணிகளை செய்ய தொடங்கினோம். தேர்தல் அறிவிப்பு வந்தபோது கிராமம் பார்வைக்கு மட்டும் அழகாக இருந்தால் போதாது, இங்கிருக்கும் மக்களிடமும் தூய்மையைக் கொண்டுவர வேண்டும் என நேர்மையான தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கினோம். மக்களை ஒரு முறை சந்திப்பது பலன் தராது என தெரிந்தபோது தொடர்ச்சியாக சந்திக்க ஆரம்பித்தோம். வாக்குக்கு பணம் பெறுவதால் அவர்கள் இழக்கும் ஜனநாயக உரிமையை புரிய வைத்தோம். ஆரம்பத்தில் சில தடைகள் இருந்தாலும் மக்களிடம் நாங்களே எதிர்பார்க்காத வரவேற்பு கிடைத்தது” என பேசினார்.

அதே அமைப்பின் அனு என்கிற மாணவி பேசும்போது,  ”மக்களின் கவனத்தை ஈர்க்க அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து பேசுவது மட்டுமின்றி கோலப்போட்டி, மெளன ஊர்வலம் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்தோம். நாங்கள் செய்கிற பணியினால் உண்டாகிற மாற்றத்தை நேரடியாக பார்க்கும்போது நம்பிக்கை உருவாகிறது. ஒரு கிராமம் மாறினால் நாளைக்கு சமூகத்துக்கே அது முன் உதாரணமாக இருக்கும். எங்களுக்கு தனிப்பட்ட விதத்தில் ஆளுமை பண்பு வளர்வதுடன் சமூகத்தின் மீதான அக்கறையையும் வெளிப்படுத்த முடிவது நிறைவாக இருக்கிறது” என்றார்.

மக்களை சந்திக்கும் மாணவர்கள்
மக்களை சந்திக்கும் மாணவர்கள்

யான் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான வழக்குரைஞர் கிருஷ்ணன், ”15 ஆண்டுகளாக சமூகப் பணியில் தனித்தும் நண்பர்களுடன் இணைந்து அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறேன்.  இந்த அனுபவத்தில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பேச செல்லும்போது அவர்கள் எப்படி பதிலளிப்பார்கள் என முன்பே தெரியும். ஆகவே அவர்களிடம் பேசுவதற்கு வேண்டியதை முன்னரே தயார் செய்து கொண்டோம். அதனால் மக்களின் எந்த சமாளிப்புக்கும் இடமில்லாமல் போய்விட்டது. பணம் பெறுவது தவறான ஒன்று என்பதைத் தாண்டி, பணம் பெற்றுவிட்டால் வேட்பாளரை கேள்வி கேட்கும் உரிமை பறிபோவதையும் சொல்ல விரும்பினோம். வேட்பாளர் வெற்றி பெற்றுவந்தால் அவர்கள் ஊழல் செய்ய மக்களே அனுமதியை கொடுப்பது போல அமைவதையும் உணர்த்தினோம். இதுவொரு சோதனை முயற்சிதான். மக்கள் பணத்தை தாண்டி வெற்றி பெறுவார்கள் என நம்புகிறோம். இந்த பிரசாரத்தின் இன்னொரு நோக்கம், மக்கள் தாமாகவே வேட்பாளரை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரை பற்றிய தகவல்களை மக்களுக்கு தாளில் அச்சிட்டு அளிக்கவுள்ளோம். அரசியல் கட்சியின் வேட்பாளர்களிடமும் பணம் தர வேண்டாம் என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளோம் ” எனத் தெரிவித்தார்.

நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட கிராமத்தின் தேவைகளை நிறைவேற்றித் தரவிருக்கிறது யான் அறக்கட்டளை.

மிகச் சரியான ஜனநாயகம் என்பது தனிமனிதனின் சுதந்திரத்தில் இருந்து தொடங்குவதாக காந்தி எழுதுகிறார்.

தனிமனிதன் தன்னை ஆளும் பிரதிநிதியைப் பணம் உள்ளிட்ட எதன் அடிப்படையிலுமில்லாது சுதந்திரமாகத் தேர்வு செய்ய வேண்டும். இந்த இலக்கை நோக்கி முதல் அடியை பெருந்தலையூர் கிராமம் எடுத்து வைத்துள்ளது. இதில் மக்கள் வெற்றி பெற்றார்களா என்பது தேர்தலுக்குப் பின்னரே தெரியக் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com