மும்முனை சவாலை சந்திக்கும் ஓபிஎஸ்!

மக்களவைத் தேர்தலில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மும்முனை சவாலை சந்திக்கும் ஓபிஎஸ்!
dinmani online

மக்களவைத் தேர்தலில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழகத்தில் மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் இந்தத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

தமிழகத்தின் கடலோர மற்றும் பின்தங்கிய மாவட்டமாக உள்ள ராமநாதபுரத்தில் மீன்பிடி தொழிலும், விவசாயமும் முக்கியமானவை. இங்கு ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 1957 முதல் இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், அதிமுக 4 , திமுக 3, தமாகா, பார்வர்டு பிளாக், சுயேச்சை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில், தற்போதைய மக்களவை உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவருமான கே. நவாஸ்கனி மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாக ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சார்பில் பி.ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திரபிரபா உள்பட 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருந்தாலும் நவாஸ்கனி, ஜெயபெருமாள், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனிக்கு தொகுதிவாசிகளிடையே நல்ல அறிமுகம் உள்ளது. இதனால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், அவரது மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்ட பணிகள் ஆகியவற்றைக் கூறி, வாக்குகள் சேகரித்து வருகிறார்.

இவருக்கு ஆதரவாக திமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஆயிரம் மாணவ, மாணவிகளின் கல்விச் செலவுகளை ஏற்றுக்கொள்வது, தனது குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது, தொகுதி மக்கள் இவரை எளிதாக சந்திக்க முடிவது போன்ற செயல்பாடுகள் கூடுதல் பலம்.

மேலும், அதிமுக வாக்குகளை அந்தக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜெயபெருமாளும், ஓ. பன்னீர்செல்வமும் பிரிப்பது இவருக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.

பாஜக கூட்டணி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் மூன்று முறை முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவி வகித்தவர். இவர் முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு பெற்றவராக இவர் இருந்தாலும், அவரது சின்னமான பலாப்பழத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதும், இவரது பெயரிலேயே மேலும் 5 வேட்பாளர்கள் போட்டியிடுவதும் இவருக்கு பெரிய சவாலாக உள்ளது. இவர் மத்திய பாஜக அரசின் சாதனைகளைக் கூறி வாக்குகள் சேகரித்து வருவதோடு, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியை பிரதமர் நரேந்திர மோடி தனக்காக விட்டுக் கொடுத்துள்ளதாகவும் கூறி வருகிறார்.

அதிமுக சார்பில் போட்டியிடும் பி. ஜெயபெருமாள் விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்தவர். முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இவருக்கு இரட்டை இலை சின்னம் பலம்.

அதிமுக வாக்குகள் எந்த அளவுக்கு சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துக்கு மடை மாறும் என்பதும் பாஜகவை கைவிட்டு தனித்துப் போட்டியிடும் அதிமுகவுக்கு எந்த அளவுக்கு சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் என்பதும் தேர்தல் முடிவில் பிரதிபலிக்கும். முக்குலத்தோர் சமுதாயத்தின் வாக்குகளை ஓ பன்னீர்செல்வம் பிரித்தால் அது திமுக கூட்டணியின் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கும் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் சந்திரபிரபா போட்டியிடுகிறார்.

முன்னாள் முதல்வர் ஒருவர் சுயேச்சை சின்னத்தில் களமிறங்கி இருப்பதால் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கிறது. ராமநாதபுரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிரசாரத்துக்கு போகாமலே வெற்றி பெற்று வந்த தொகுதி இது.

dinmani online

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com