புதிய மக்களவையில் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

மாறிவரும் சூழ்நிலையில் மக்களவையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பற்றி...
தொழுகையில் முஸ்லிம்கள்...
தொழுகையில் முஸ்லிம்கள்...ஏ.பி.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள மக்களவையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை எந்த அளவில் இருக்கும் எனத் தெரியவில்லை. 1980-களில் தொடங்கி மக்களவையில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்திருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாக மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்துவரும் நிலையில் அந்தக் கட்சியிலும் சரி, எதிர்க்கட்சிகளிலும்கூட முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கிறது.

2014 ஆம் ஆண்டில் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்றார். அதற்கு  முந்தைய மக்களவையில் 30 முஸ்லிம்கள் எம்.பிக்களாக இருந்தார்கள்; பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஒருவரும் இருந்தார்.

ஏ.பி.

ஆனால், தற்போதைய (முடிவுக்கு வரும்) மக்களவையில் 543 இடங்களில் 25 முஸ்லிம்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியில் ஒருவர்கூட இல்லை.

1980-களின் மத்தியில் இந்திய மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 11 சதவிகிதம்; மக்களவையில் 9 சதவிகித இடங்களைப் பெற்றிருந்தனர். தற்போது மக்கள்தொகையில் 14 சதவிகிதம், ஆனால், 5 சதவிகிதத்துக்கும் குறைவான இடங்களையே பெற்றிருக்கின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் வாக்குச் சாவடி அருகே வாக்காளர் அடையாளச்  சீட்டுகளைச் சரிபார்க்கும் முஸ்லிம்கள்
உத்தரப் பிரதேசத்தில் வாக்குச் சாவடி அருகே வாக்காளர் அடையாளச் சீட்டுகளைச் சரிபார்க்கும் முஸ்லிம்கள்ஏ.பி.

சுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 80 சதவிகிதத்தினர் ஹிந்துக்கள். மக்களவையில் 10 உறுப்பினர்களில் 9 பேர் ஹிந்துக்கள்.

இதைவிடவும் மாநிலங்களில் நிலைமை சற்றுப் பரவாயில்லை. நாட்டில் 28 மாநிலங்களில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பிரதிநிதிகளில் சுமார் 6 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள்.

தற்போதைய மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில், மக்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவை உள்பட ஹிந்து – முஸ்லிம் பிரச்சினைகளும் பேசப்படுகின்றன.

தொழுகையில் முஸ்லிம்கள்...
தில்லியில் உத்தரவாதம் வழங்களில் போட்டிபோடும் கட்சிகள்!

நாட்டிலுள்ள 28 மாநிலங்களில் ஒன்றில்கூட முஸ்லிம்கள் யாரும் முதல்வராக இல்லை. 19 மாநிலங்களில் பாரதிய ஜனதா, அதன் கூட்டணிக் கட்சிகளின் முதல்வர்கள் இருக்கிறார்கள்.

மக்கள்தொகை அதிகமுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 16 சதவிகிதம் என்றபோதிலும் சட்டப்பேரவையில் 7 சதவிகிதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள்.

ஆளும் பாரதிய ஜனதா கட்சியானது ஹிந்துத்துவத்தை முன்னிறுத்துவதாக இருந்தபோதிலும் கடந்த சில தேர்தல்களாக எதிர்க்கட்சிகளிலும்கூட  குறிப்பிடும்படியான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதில்லை.

2014, 2019 மக்களவைத் தேர்தல்கள் இரண்டிலுமாக 13 முஸ்லிம்களை வேட்பாளர்களாக பாரதிய ஜனதா நிறுத்தியது. ஆனால், ஒருவர்கூட வெற்றி பெறவில்லை.

மலப்புரம் தொகுதி பிரசாரத்தில் பா.ஜ.க. வேட்பாளர் சலாம் (இடமிருந்து 3-வது)...
மலப்புரம் தொகுதி பிரசாரத்தில் பா.ஜ.க. வேட்பாளர் சலாம் (இடமிருந்து 3-வது)...ஏ.பி.

முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமும் காட்டுவதில்லை என்றே பாரதிய ஜனதா கட்சி குறிப்பிட்டுவருகிறது.

ஹிந்துக்கள் மட்டுமல்ல, அனைத்துப் பிரிவு மக்களையும்தான் பாரதிய ஜனதா கட்சி அரவணைக்கிறது என்று குறிப்பிடுகிறார், இந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் சுமார் 430 வேட்பாளர்களில் ஒரே ஒரு முஸ்லிமான எம். அப்துல் சலாம்.

தொழுகையில் முஸ்லிம்கள்...
வணிகப் பின்னணி வேட்பாளா்கள் களம் காணும் சாந்தினி சௌக்!

கேரளத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள மலப்புரம் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சலாம். இந்தத் தேர்தலில் இவர் வெற்றி பெற்றால், 2014-க்குப் பிறகு மக்களவைக்கு பாரதிய ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் என்ற பெருமையைப் பெறுவார்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி.யாக இருந்த எஸ்.டி. ஹசனுக்கு இந்த முறை போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வேறொரு ஹிந்து போட்டியிடுகிறார்.

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது ஜனநாயகத்துக்கு நல்லது, ஆனால், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் படிப்படியாக நெருக்கப்படுகின்றனர் என்று குறிப்பிடுகிறார் ஹசன்.

இந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பிற கட்சிகளில் எத்தனை முஸ்லிம்கள் போட்டியிடுகிறார்கள்? எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? உறுதியாக எதுவும் தெரியவில்லை.

மக்களவையில் முஸ்லிம்களே இல்லாவிட்டால் எங்களுக்காக யார் குரல் கொடுப்பார்கள்? என்பது எளிய முஸ்லிம் ஒருவரின் கேள்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com