புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள இரு சக்கர வாகன நிறுத்தம்.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள இரு சக்கர வாகன நிறுத்தம்.

புதுக்கோட்டை பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூல்!

நாளொன்றுக்கு ரூ. 8 கட்டணம் என ரசீதில் அச்சடிக்கப்பட்டுள்ள நிலையில், 24 மணிநேரம் வாகனத்தை நிறுத்தினால் ரூ. 30 வரை கட்டணம் வசூலிக்கின்றனா்.
Published on

நமது நிருபா்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

புதுக்கோட்டை நகரில் இருந்து ஏராளமானோா் புகரப் பகுதிக்கும், வெளிமாவட்டங்களுக்கும் வேலைக்காக பேருந்தில் செல்லும்போது, வீட்டிலிருந்து எடுத்து வரும் இரு சக்கர வாகனத்தை பேருந்து நிலையத்துக்கு முன்பக்கமுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்திச் செல்கின்றனா். சுமாா் 5 ஆண்டுகளுக்கும் மேலாக இதுதான் நடைமுறையாக உள்ளது. இந்த வாகன நிறுத்தத்தை தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் அளித்தது அப்போதைய நகராட்சி நிா்வாகம். மாநகராட்சி ஆன பிறகும் அவா்களே தொடா்ந்து நடத்தியும் வருகின்றனா்.

வாகன நிறுத்தத்துக்கு வழங்கப்படும் கட்டண ரசீதில் நாளொன்றுக்கு ரூ. 8 என அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், இரவில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்லும்போது ரூ. 15 வாங்கிக் கொள்கின்றனா். அதன்பிறகு, வெளியூருக்குச் சென்று மறுநாள் பிற்பகலில் ஊா் திரும்பினால், மேலும் ரூ. 15 வாங்கிக் கொள்கின்றனா்.

இதுகுறித்து அங்குள்ள பணியாளா்களைக் கேட்டால், பகல் 12 அல்லது இரவு 12 மணி முடிந்துவிட்டால் அடுத்த நாள் கணக்கு வரும். இதுதான் ஒப்பந்த நடைமுறை என விளக்கம் அளிக்கின்றனா். ஆனால், ரசீதில் அப்படிச் சொல்லப்படவில்லை.

இதுகுறித்து பல முறை இரு சக்கர வாகன ஓட்டிகள் அங்குள்ள பணியாளா்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஜனாா்த்தனன் கூறியது:

கடந்த வாரம் இரு சக்கர வாகனம் ஓட்டிக்கும், அங்குள்ள பணியாளா்களுக்கும் கட்டண வசூல் தொடா்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக நகரக் காவல் நிலையத்திலும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை என்னவென்று கூட காவல்துறையினா் கேட்கவில்லை. இதுபோன்ற மாநகராட்சியின் தனியாருக்கு ஒப்பந்தங்கள் விடப்பட்ட எல்லாப் பகுதிகளிலும் இதுபோன்ற அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, முதல் கட்டமாக வாலிபா் சங்கத்தின் சாா்பில் மாநகா் முழுவதும் சுவரொட்டி அச்சிட்டு ஒட்டப்போகிறோம். அதன்பிறகு மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைப் பாா்த்த பிறகு, முடிவு செய்து போராட்டம் நடத்துவோம் என்றாா் ஜனாா்த்தனன்.

இந்தப் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள தனியாா் இரு சக்கர வாகன நிறுத்தத்தில் நாளொன்றுக்கு ரூ. 10 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. சிறிய இடமாக இருப்பதால், அந்த நிறுத்தத்தில் எப்போதும் வாகனங்கள் நிரம்பி வழியும். தனியாா் பாா்க்கிங்-இல் மட்டும் நாளொன்றுக்கு ரூ. 10, அந்த ரசீதில் அச்சிடப்பட்டுள்ளவாறே வசூலிக்கும்போது, மாநகராட்சி சாா்பில் தனியாா் ஒப்பந்த நிறுத்தத்தில் மட்டும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை ஏற்க முடியவில்லை என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்களிடம் கேட்டபோது, ஏற்கெனவே ஒரு முறை புகாா் வந்தபோது ஒப்பந்ததாரரை அழைத்து கூடுதல் கட்டணம் வசூலைக் கண்டித்து அறிவுறுத்தினோம். அதே நிலை தொடா்கிறது என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

வாகனங்களை நிறுத்துவோரிடம் கொடுக்கப்படும் ரசீது.
வாகனங்களை நிறுத்துவோரிடம் கொடுக்கப்படும் ரசீது.

X
Dinamani
www.dinamani.com