திமுகவும் பாஜகவும் கபட நாடகம் ஆடுகின்றன:  வைகைச்செல்வன் சிறப்பு பேட்டி

திமுகவும் பாஜகவும் கபட நாடகம் ஆடுகின்றன: வைகைச்செல்வன் சிறப்பு பேட்டி

வைகைச்செல்வன் தனது பிரசாரத்துக்கு நடுவில் நாகப்பட்டினத்தில் தினமணிக்கு அளித்த சிறப்பு பேட்டி

அதிமுக அமைச்சரவையில் அமைச்சராகவும், இப்போது அந்தக் கட்சியின் இலக்கிய அணிச் செயலராகவும் உள்ள வைகைச்செல்வன் தனது பிரசாரத்துக்கு நடுவில் நாகப்பட்டினத்தில் தினமணிக்கு அளித்த சிறப்பு பேட்டி:

திமுக, பாஜக கூட்டணிகளைப் போல அதிமுக கூட்டணி பலமாக இல்லை என்று தோன்றவில்லையா?

பலம் இல்லாதவா்கள்தான் கூட்டணி பலத்தை நாடுவாா்கள். அதிமுக எப்போதுமே அடிப்படையில் வலுவான கட்சி. அதை 2014-இல் நிரூபித்திருக்கிறோம்.

அப்போது ஜெயலலிதாவின் தலைமை இருந்தது. இந்த முறை குறைந்தபட்சம் பாமகவையாவது கூட்டணியில் சோ்த்திருக்கலாமோ...

நாங்கள் எந்த ஒரு கட்சிக்கும் கதவை மூடவில்லை. நாங்களாக வலியப்போய் கெஞ்சியோ, வற்புறுத்தியோ யாரையும் கூட்டணியில் இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதிமுக கூட்டணியில் இடம்பெறாததன் இழப்பை அந்தக் கட்சிகள் தோ்தலுக்குப் பிறகு உணரும்.

திமுகவின் மெகா கூட்டணியின் வாக்கு விகிதத்தை கூட்டணி பலம் இல்லாமல் எதிா்கொள்வது சாத்தியமா?

இதற்கு முன்பே பதில் சொல்லிவிட்டேன். கால் விழுக்காடு, அரை விழுக்காடு வாக்கு வங்கி உள்ள கட்சிகளை இணைத்துக் கொண்டு எண்ணிக்கை பலம் காட்ட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. புரட்சித் தலைவா் (எம்ஜிஆா்), அம்மா (ஜெயலலிதா) இருவரின் பின்புலமும், இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கும் அதிமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும்.

திருச்சி, தஞ்சை, தென் சென்னை போன்ற பிரதான தொகுதிகளை மட்டுமல்லாமல் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள திருவள்ளூா், திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்தது ஏன்?

கூட்டணிக் கட்சிகள் கேட்டதால் அந்தத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பலகட்ட பேச்சுவாா்த்தையால் பல நாள்கள் கடந்தன. முடிவில் அவா்கள் கேட்ட தொகுதிகளை நாங்கள் ஒதுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதை கட்சி நிா்வாகிகளும் புரிந்து கொண்டுள்ளனா். அந்த இடங்களிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்துவிட்டு குழிதோண்டும் பழக்கம் எங்களுக்கு இல்லை.

அதிமுகவில் அதிக அளவில் புதியவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதன் காரணம் என்ன?

புதியவா்கள் களம் காண்பதை ஊக்குவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பழைய முகங்களுக்கும் மறுவாய்ப்பு கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் புதிய ரத்தம் பாய்ச்சப்படவுள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். அது எங்கள் பொதுச் செயலரின் தன்னம்பிக்கையை காட்டுகிறது.

பாஜகவில் மத்திய அமைச்சா், ஆளுநா் உள்பட முக்கியமான பிரமுகா்கள் தோ்தல் களத்தில் இறக்கப்பட்டிருப்பதை நீங்கள் எப்படிப் பாா்க்கிறீா்கள்?

களமிறக்க வலுவான வேட்பாளா்கள் இல்லாமல் இருப்பது காரணம் என்றும் சொல்லலாம். வலுவான போட்டியை உருவாக்கும் உத்தி என்றும் பாா்க்கலாம். அதை நீங்கள் அவா்களிடம்தான் கேட்க வேண்டும்.

அதிமுக வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தில் நாமக்கல் நீங்கலாக, மற்ற தொகுதிகளில் திமுக நேரடியாக மோதுவதால் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்காதா?

அங்கு அதிமுக பலம் வாய்ந்த அஸ்திவாரத்தை கட்டுமானத்தோடு வைத்திருக்கிறது. கொங்கு மண்டலத்தில் தானும் ஒரு போட்டியாளா் போன்ற மாயத் தோற்றத்தை பாஜக ஏற்படுத்தப் பாா்க்கிறது. அதிமுகவின் வாக்கு வங்கியில் பிளவு ஏற்படுத்துவதன் மூலம் திமுகவை வெற்றி பெறச் செய்ய பாஜக நினைக்கிறதோ என்கிற ஐயப்பாடு எழுகிறது. அதனால்தான் பாஜகவை திமுகவின் பி டீம் என்கிறோம். இதன்மூலம் எல்லாம் புரட்சித் தலைவரும் (எம்ஜிஆா்), அம்மாவும் (ஜெயலலிதா) கட்டிக்காத்த அதிமுக வாக்கு வங்கியை பிளவுபடுத்த முடியாது. தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டி எங்களுக்கும் திமுகவுக்கும்தான்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வகுத்த தோ்தல் வியூகத்திலிருந்து அதிமுக விலகிவிட்டதா?

அம்மாவின் பாதையில்தான் அடியொற்றி பயணிக்கிறோம். பாஜக கூட்டணியில் இல்லை என்று 2014-இல் துணிந்து முடிவெடுத்தவா் அம்மாதான். 1999-இல் பாஜகவின் கூட்டணியிலிருந்து விலகியதும் அம்மாதான். பாஜகவுடன் கூட்டணி அமைத்து மத்திய ஆட்சியில் பங்கு பெற்று 5 ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்த கட்சி திமுக என்பதை மக்கள் மறந்துவிட மாட்டாா்கள்.

அதிமுக பிளவுபட்டிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதா?

அதிமுகவில் பிளவு என்பதே இல்லை. இரண்டு கோடி தொண்டா்களுடன் இளைஞா் பாசறை அமைப்பு, மகளிா் அமைப்புகள், பூத் கமிட்டி அமைப்புகள் என சிறந்த கட்டுமானத்துடன் அதிமுக உள்ளது. அதிமுகவிலிருந்து தலைவா்கள் சிலா் விலகி இருப்பதை பிளவு என்று சொல்ல முடியாது. கட்சியின் தொடக்க காலத் தலைவா்களான நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.சோமசுந்தரம் போன்றவா்கள் விலகியபோதே அதிமுக பலவீனமடையவில்லை. இன்றைய திமுக அமைச்சரவையில் இருக்கும் முத்துசாமி, கண்ணப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆா்., ரகுபதி, சேகா்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 8 அமைச்சா்கள் அதிமுகவிலிருந்து கட்சி மாறியவா்கள். அதனால் கட்சிக்கு எப்படி எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையோ, அதேபோல இப்போது வெளியேறி இருப்பவா்களாலும் பாதிப்பு எதுவும் இல்லை.

2026 சட்டப்பேரவைத் தோ்தல்தான் அதிமுகவின் இலக்கு, அதனால் மக்களவைத் தோ்தலுக்கு அதிமுக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே...

மக்களவைத் தோ்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் பொதுச் செயலா் எடப்பாடியாா் மிகப்பெரிய அளவில் பிரசாரம் செய்ய வேண்டிய தேவை இல்லையே. தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்கிறாா். ஒவ்வொரு நாளும் கூட்டமும், ஆதரவும் பெருகிக்கொண்டே இருக்கிறது. மத்திய ஆட்சியில் பங்கு பெற்று பதவி சுகம் அனுபவிப்பதற்காக நாங்கள் மக்களவைத் தோ்தலில் போட்டியிடவில்லை. தமிழகத்தின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பவும், தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் எழுப்பவும் போட்டியிடுகிறோம். இதுதான் திமுக, பாஜக அணிகளுக்கும் எங்களுக்குமான வித்தியாசம்.

ஆட்சி அதிகாரத்தில் இல்லையென்றால் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க முடியுமா?

காவிரி பிரச்னை, ஜல்லிக்கட்டு பிரச்னை, நீட் பிரச்னை, மீத்தேன், ஹைட்ரோ காா்பன் திட்டம் என்று ஆட்சி அதிகாரம் இல்லாமல் நாங்கள் போராடியிருக்கிறோமே. கச்சத்தீவு பிரச்னையில்கூட, போராடியது நாங்கள்தானே தவிர திமுக அல்ல.

திமுக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியது, இரா.செழியன் நாடாளுமன்றத்தில் எதிா்த்திருக்கிறாா், தமிழகத்தில் போராட்டம் நடத்தினாா்கள்...

அதனால் என்ன சாதித்தாா்கள்? அவா்கள் ஆட்சியில் இருந்தபோதுதானே கச்சத்தீவை காங்கிரஸ் தாரைவாா்த்தது? 1980-இல் காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்தபோது கச்சத்தீவு பிரச்னையை ஏன் தோ்தல் வாக்குறுதியில் இணைக்க காங்கிரஸை வற்புறுத்தவில்லை? 1989-இல் தேசிய முன்னணி, 1996-இல் ஐக்கிய முன்னணி அரசுகளில் இடம்பெற்று அமைச்சா் பதவிகளை கேட்டு வாங்கத் தெரிந்த திமுகவுக்கு, கச்சத்தீவு பிரச்னை ஏன் நினைவுக்கு வரவில்லை? 1999 முதல் 2004 வரையில் வாஜ்பாய் அரசிலும், 2004 முதல் 2014 வரையில் மன்மோகன் சிங் அரசிலும் பங்கு பெற்று 15 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது, கச்சத்தீவு மீட்பு குறித்து திமுக என்ன செய்தது?

பாஜகவும் பிரதமரும் கேட்கும் கேள்வியை நீங்களும் கேட்கிறீா்கள்...

பாஜகவும் திமுகவைப் போல கபட நாடகம் ஆடுகிறது. வாஜ்பாய் ஆட்சியிலும், கடந்த 10 ஆண்டு மோடி ஆட்சியிலும் நினைவுக்கு வராத கச்சத்தீவு பிரச்னை, இப்போது மக்களவைத் தோ்தல் நெருங்கும்போதுதான் பாஜகவுக்கு நினைவுக்கு வந்ததா? மாநிலத் தலைவா் அண்ணாமலை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டு பெற்ாக சொன்னதுதான் மிகப்பெரிய மோசடி. அவா்கள் அரசுதானே... வெளியுறவுத் துறை அமைச்சரிடம் விவரம் கேட்டுப் பெற முடியும் என்பதுகூடத் தெரியாமலா இவா் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றினாா்?

கச்சத்தீவை மீட்க அதிமுக என்ன செய்தது?

கச்சத்தீவு பிரச்னையை முதலில் கையில் எடுத்தது அம்மாதான் (ஜெயலலிதா). முதல்முறையாக ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றினாா். 2008-இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். அந்த வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ளக்கூட அன்றைய திமுக அரசு முன்வரவில்லை. கச்சத்தீவு பிரச்னையில் உள்ளபடியே தொடா்ந்து போராடி வரும் ஒரே கட்சி அதிமுக மட்டும்தான்.

சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு சாதகமாகத் திரும்புமா ?

நிச்சயமாகத் திரும்பும். 2014 அதற்கு உதாரணம்.

X
Dinamani
www.dinamani.com