முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்!

ஸ்ரீவைகுண்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் பற்றி...

News image

ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல் காந்தி - YT | INC

Updated On :20 ஏப்ரல் 2026, 3:46 pm IST

வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இறுதிக்கட்டப் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு தமிழ்நாட்டுக்கு இன்று வருகைதந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, குளைச்சல், நான்குநேரியைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்தில் பேசினார்.

சிவகாசி தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து தனது பேச்சை ராகுல் காந்தி தொடங்கினார்.

அவர் பேசியதாவது:

”இந்திய அரசியல் சாசனச் சட்டம், மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா என்பதை வரையறுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி வரலாறு, பண்பாடு இருக்கிறது என்பதை நமது அரசியல் சாசனச் சட்டம் அங்கீகரிக்கிறது. அனைத்து மாநிலங்களும் சமமானவை, சம உரிமை உண்டு. மாநிலங்களின் சுயமரியாதையை முழுமையாக காக்க அரசியல் சாசன சட்டம் உறுதிபூண்டுள்ளது.

இந்த தேர்தல் தத்துவத்துக்கு இடையேயான தேர்தல். ஒருபுறம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அணி, மறுபுறம் அதிமுக - பாஜக அணி. ஆர்எஸ்எஸ் கொள்கை அடிப்படையிலேயே திராவிடத்துக்கு எதிரானது. இந்தியா என்பது ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே மொழி என நினைக்கிறார்கள். அனைத்து மாநில வரலாறுகளும் அனைத்து மொழிகளும் அனைத்து கலாசாரங்களும் அவர்களிடம் மண்டியிட வேண்டும் என நினைக்கிறார்கள்.

அதிமுகவுக்கு பெரிய வரலாறு உண்டு. அவர்கள் ஒரு காலத்தில் தமிழக மக்களுக்கு சேவைகளை செய்திருக்கிறார்கள் என்பதையும், தமிழர்களை பிரதிபலித்த தலைவர்கள் இருந்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. அந்த அதிமுக தற்போது இறந்துவிட்டது, அவர்கள் வரலாறு மறைந்துவிட்டது. ஊழல் காரணமாக பாஜகவிடம் அதிமுக சரணடைந்துவிட்டது.

தங்களை முழுமையாக அர்ப்பணித்த அதிமுக தொண்டர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனால், மோடியும், அமித் ஷாவும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். பிகாரைப் பாருங்கள், நிதீஷ் குமார் நீக்கப்பட்டு பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராக்கப்பட்டுள்ளார். இதை எதிர்த்து மறு வார்த்தை கூறாமல் எம்பியாகியுள்ளார். அதைதான் தமிழ்நாட்டிலும் செய்ய நினைக்கிறார்கள். தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள அரசையும் முதல்வரையும் பணியமர்த்த ஆசைப்படுகிறார்கள். அதை காங்கிரஸ் ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம்.

தமிழ்நாட்டு மக்களையும் அரசையும் ஒருநாளும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர பாஜகவை அனுமதிக்க மாட்டோம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் பிரதமர் மோடி. அவர் குதிக்கச் சொன்னால் உடனடியாக மோடி குதித்துவிடுவார்.

டிரம்ப்பிடம் மோடி நடந்துகொள்வது போல, தமிழ்நாடு முதல்வர் அவரிடம் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார். ஆனால், தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் ஒருநாளும் மோடியைப் பார்த்தவுடன் எழுந்து நின்று ’சார்’ என்றழைத்து பணிய மாட்டார்.

நாட்டுக்கே சமூக நீதியை தமிழ்நாடுதான் சொல்லிக் கொடுக்கிறது. அனைத்து சமூகத்தினரையும் எப்படி முன்னேற்ற வேண்டும் என்பதை தமிழ்நாடு கற்றுக் கொடுத்துள்ளது. இதுதான் தமிழ்நாட்டின் கலாசாரம். அதை தொடர்ந்து செய்வோம்.

சமூக நீதித் தத்துவத்துக்கு அடித்தளம் அமைத்தவர் காமராஜர். மாநிலத்தின் பொதுக் கல்வித் திட்டத்தை ஏற்படுத்தியவர் காமராஜர். மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்து நாட்டுக்கே வழிகாட்டியவர். இதை உள்வாங்கிதான் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்கினோம்.” எனத் தெரிவித்தார்.

Summary

The historic AIADMK is dead! Rahul Gandhi in Srivaikuntam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.