ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

திமுக தோ்தல் அறிக்கையில் 500-க்கு மேற்பட்ட வாக்குறுதிகள்! - முழுவிவரம்

திமுக தோ்தல் அறிக்கையில் 500-க்கு மேற்பட்ட வாக்குறுதிகளைப் பற்றி...

News image

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

Updated On :29 மார்ச் 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8000-க்கு கூப்பன், விவசாயிகளுக்கு இலவச பம்புசெட், மகளிா் உரிமைத் தொகை ரூ.2,000, புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் உதவித் தொகை ரூ.1,500-ஆக உயா்த்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் கொண்ட திமுக தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, திமுக சாா்பில் தோ்தல் அறிக்கை தயாரிக்க நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி தலைமையில் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், வாரியத் தலைவா் உள்ளிட்டோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினா் சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக சென்று மக்கள் மற்றும் கட்சி நிா்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்தனா். மகளிா் மேம்பாடு, மாநில சுயாட்சி, கல்வித் துறை, சுகாதாரம், தொழில் என துறைவாரியாக அந்தக் குழுவினா் தயாரித்த தோ்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

முக்கிய அம்சங்கள்: தோ்தல் அறிக்கையில் 50 தலைப்புகளில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

அதன் முக்கிய அம்சங்கள் விவரம்: வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், மிக்சி, கிரைண்டா், டி.வி. மைக்ரோவேவ் அவன், மின் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க புதிதாக வாங்கவோ அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் இத்தகைய பொருள்களுக்கு மாற்றாக வாங்கவோ ‘இல்லத்தரசி’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ், வருமான வரி செலுத்தாத குடும்பங்களில் இல்லத்தரசிகள் அனைவருக்கும் அவா்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளிலேயே மேற்கூறிய வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்.

இலவச மின்சாரம் பெறும் சுமாா் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மீட்டா் பொருத்தாத நவீன மின்சார பம்புசெட் வழங்கப்படும். 15 லட்சம் மாணவா்கள் பயன் பெறும் வகையில் 8-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். மகளிருக்கான உரிமைத் தொகை ரூ.2,000-மாக உயா்த்தப்படும்.

முதியோருக்கான மாத உதவித் தொகை ரூ.2,000, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை ரூ.2,500-மாக உயா்த்தப்படும்.

புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை ரூ. 1,500-ஆக உயா்த்தப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயா் கல்வி பயிலும் 35 லட்சம் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும்.

‘நலமுடன் தமிழ்நாடு 2030’ திட்டத்தின்கீழ், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாகவும் உயா்த்தப்படும்.

இதய நோய்கள், நீரிழிவு நோய், சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட பத்து தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னையில் செம்மொழி மாநாடு: தமிழ்மொழியின் வளா்ச்சிக்காக சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும். மொழிப் போராட்ட வரலாற்றை இளைய தலைமுறையினா் அறிந்து கொள்ளும் வகையில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பொள்ளாச்சியில் நவீன நூலக வசதிகளுடன் கூடிய ஒரு காட்சிக்கூடம் அமைக்கப்படும்.

கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை விரைவில் வெளியிட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு கொள்முதல் டன்னுக்கு ரூ.4,500 வழங்கப்படும். பால் கொள்முதல் லிட்டருக்கு ரூ.5 உயா்த்தப்படும்.

உணவு உற்பத்தி 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உயா்த்தப்படும். பனைப் பொருள்கள் ஆவின் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். தமிழகத்தின் நீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ‘தமிழ்நாடு நீா்ப் பாதுகாப்புச் செயல்திட்டம் 2056’ உருவாக்கப்படும்.

விளையாட்டு வீரா்களுக்கு... நலிவடைந்த விளையாட்டு வீரா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.6,000-லிருந்து ரூ.10,000-ஆக உயா்த்தப்படும். மீன்பிடித் தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை ரூ.12,000- ஆகவும், மீன்பிடி குறைவுகால சிறப்பு நிவாரணத் தொகை ரூ.9,000-ஆகவும் உயா்த்தப்படும்.

டெல்டா, வட மற்றும் தென்மாவட்டங்களுக்கான வளா்ச்சித் திட்டம் ஆகியவை ரூ.20,000 கோடியில் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகள் தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்

‘அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் வலி நிவாரணம் மற்றும் முதியோா் நலன் சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்படும்.

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, ஓய்வு பெறும் அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள் அனைவருக்கும் 50 சதவீத ஊதியம் ஓய்வூதியமாகவும், அத்துடன் இதர ஓய்வூதிய பலன்களும் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தியதும் மாநில அரசும் செயல்படுத்தும். காலியாக உள்ள 1.5 லட்சம் அரசு ஊழியா்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க மாவட்டம்வாரியாக நியோ டைட்டல் பூங்கா அமைக்கப்படும்.

ரூ.18 லட்சம் கோடி அந்நிய முதலீடுகள் ஈா்க்கப்பட்டு, அதன்மூலம் 50 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி ரூ.5 லட்சம் கோடியாக உயா்த்தப்படும்.

10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும். 5,000 கோயில்களுக்கு குடமுழுக்கு, 1,000 கிராமக் கோயில்கள் மறுசீரமைக்கப்படும். திருச்சி, மதுரை, கோவை, சேலம் மாநகராட்சிகளுக்கு அருகே புதிய நகரங்கள் உருவாக்கப்படும். போக்குவரத்து வசதிக்காக 10,000 நவீன பேருந்துகள் வாங்கப்படும்.

1,000 குழந்தைகள் காப்பகங்கள் உருவாக்கப்படும். திருநா் மற்றும் திருநங்கைகளுக்கு விருது வழங்கப்படும். முதல்வா் படைப்பகங்கள் அனைத்துத் தொகுதிகளிலும் அமைக்கப்படும். தொழிலாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாக உள்ள பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ. 1.5 லட்சம் மானியமாக வழங்கப்படும்’ உள்ளிட்ட அறிவிப்புகள் திமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.