பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
/

நெல்லையில் பாடையுடன் வேட்புமனு தாக்கல் செய்த அதிசய பாண்டியன்!

நெல்லையில் பிணம் போல் நடித்த நபரை பாடையில் சுமந்தபடி வேட்புமனு தாக்கல் செய்த நபரால் பரபரப்பு..

News image

அதிசய பாண்டியன் - DPS

Updated On :30 மார்ச் 2026, 8:14 am

நெல்லையில் பிணம் போல் நடித்த நபரைப் பாடையில் சுமந்தபடி வேட்புமனு தாக்கல் செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கி வரும் ஆறாம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே, இன்று முதல் நாளே பல்வேறு மாவட்டங்களில் வேட்பாளர்கள் ஆர்வமுடன் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட முதலமைச்சர் வேட்பாளர்களும் முதல் நாளான இன்றே மனுத் தாக்கல் செய்தனர். அதேபோல் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களும் சிறு சிறு இயக்கங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் பலர் வழக்கம்போல் வித்தியாசமான முறையில் தங்கள் மனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நெல்லையில் மிகவும் நூதனமாகத் தனது ஆதரவாளரைப் பாடையில் பிணமாகச் சுமந்தபடி மனுத் தாக்கல் செய்ய வந்த வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது. கருஞ்சிறுத்தை மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அதிசய பாண்டியன் நெல்லை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதையொட்டி இன்று தனது ஆதரவாளர்கள் உடன் அவர் கொக்கிரகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வந்தார். முன்னதாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மக்கள் விரோத ஆட்சி நடைபெறுவதாகவும் திமுக அரசைக் குற்றம் சாட்டி மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாடையுடன் அவர் மனு தாக்கல் செய்ய வந்தார்.

இதற்காக கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தத்தில் தனது ஆதரவாளர் ஒருவரை பிணம் போல் நடிக்க வைத்தார். அந்த நபர் பேருந்து நிலையத்தில் இருந்த இருக்கையில் பிணமாகப் படுத்தபடி நடித்தார். அவருக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெற்றது குறிப்பாக அங்கிருந்த பெண்கள் அந்த நபரை சுற்றி வந்து ஒப்பாரி வைத்தபடி இறுதி மரியாதை செய்தனர். பின்னர் அனைவரும் அதன் அவரை பாடையில் தூக்குவதைப் போன்று தோளில் சுமந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றனர்.

ஆனால், அருகில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பாடையோடு உள்ளே செல்ல அனுமதி இல்லை எனக் கூறி அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து வேட்பாளர் அதிசய பாண்டியன் உள்பட ஐந்து பேரை மட்டும் மனுதாக்கல் செய்ய போலீஸார் அனுமதித்தனர். மற்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மனுத்தாக்கல் செய்ய பாடையுடன் வந்த நபரால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Summary

In Nellai, a sensation was created when a candidate filed his nomination papers while carrying a man—who was pretending to be a corpse—on a funeral bier.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.