தஞ்சாவூர்: வெற்றி வாய்ப்பு யாருக்கு?

தொகுதியைத் தக்க வைப்பதில் திமுக முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. தற்போதைய எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் உள்பட பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்து தலைமையிடத்தில் மனு அளித்துள்ளனர்.
தஞ்சாவூர் பெரிய கோயில்.
தஞ்சாவூர் பெரிய கோயில்.
Published on
Updated on
2 min read

மாநகரமும், கிராமங்களும் கலந்த தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய உலகப் புகழ் வாய்ந்த பெருவுடையார் கோயில் (பெரிய கோயில்), சரசுவதி மகால் நூலகம், அரண்மனை, தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை உள்ளன.

நில அமைப்பு:

இந்தத் தொகுதி தஞ்சாவூர் வட்டத்தின் ஒரு பகுதியைக் கொண்டது. இதில், தஞ்சாவூர் மாநகராட்சியும், வல்லம் பேரூராட்சியும் இடம்பெற்றுள்ளன. புதுப்பட்டினம், ராவுசாகிப் தோட்டம், கடகடப்பை, மேல சித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு, பிள்ளையார்பட்டி, நீலகிரி, நாஞ்சிக்கோட்டை ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது இத்தொகுதி.

சமூக நிலவரம்: 

கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில் ஆதிதிராவிடர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சமூகத்தினரும் கணிசமான அளவில் உள்ளனர்.

வெற்றி பெற்ற பிரமுகர்கள்:

இத்தொகுதியில் 1962 ஆம் ஆண்டில், மறைந்த முதல்வர் மு. கருணாநிதி போட்டியிட்டு தொடர்ந்து இரண்டாவது முறையாகச் சட்டப்பேரவை உறுப்பினரானார். மேலும், அமைச்சர்களாக இருந்த எஸ்.டி. சோமசுந்தரம், சி.நா.மீ. உபயதுல்லா உள்ளிட்டோர் இத்தொகுதியில் வெற்றி பெற்றவர்களே.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

கடந்த 5 ஆண்டுகளில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 150 கோடி மதிப்பில் பல்நோக்கு உயர் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்துக்குப் புதிய கட்டடம், சாந்தபிள்ளை கேட் மேம்பாலம் திறப்பு, அம்ருட் திட்டத்தின் கீழ் 13 இடங்களில் புதிய பூங்காக்கள், வறட்சியான பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய ஆழ்குழாய்க் கிணறு மற்றும் குடிநீர் திட்டப் பணிகள், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் அய்யங்குளம், சாமாந்தான் குளம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்கள், சந்தைகள், மாநகராட்சி வணிக வளாகங்கள் புதுப்பிக்கும் பணி, குடிநீர் அபிவிருத்தி, சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் 16 வகையான திட்டங்கள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரச்னைகள்:

தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே ஜபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கு கோடை காலத்தில் அடிக்கடி தீ விபத்துக்குள்ளாகிறது. இதனால், அப்பகுதி மட்டுமல்லாமல், சுற்றுப்புறப் பகுதி மக்களும் புகை மூட்டத்தால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.

மாநகரில் 51 குளங்கள் இருந்தாலும், அவற்றுக்கான நீர் ஆதாரத்துக்கு வழி இல்லாததால், சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இதனால், கோடை காலத்தில் குடிநீர் பிரச்னையால் மக்கள் அவதிப்படுகின்றனர். இப்போது, பொலிவுறு நகரத் திட்டத்தில் அகழியைச் சீரமைக்கும் பணியும் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

எதிர்பார்ப்புகள்:

மாநகரில் சிறு வணிகம் பரவலாக இருந்தாலும், கிராமங்களில் வேளாண் தொழிலே முதன்மையாக இருக்கிறது. விரிவாக்கப் பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், சுற்றுப்புற கிராமங்களின் வேளாண்மையை நம்பியே மாநகர வர்த்தகம் உள்ளது.

இச்சூழ்நிலையில், சுற்றியுள்ள கிராமங்களில் வேளாண் சார்ந்த தொழில்கள் இல்லை. குறிப்பாக, மதிப்புக் கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆலைகள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் போன்றவை இல்லாதது இந்தத் தொகுதியின் மிகப் பெரிய குறையாக இருக்கின்றன. சுற்றுலா மையமாக்குவதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தாலும், அதற்கான மேம்பாட்டுப் பணிகள் முழு வீச்சில் இல்லை என்ற புகார் மக்களிடையே நிலவுகிறது.

யாருக்கு வாய்ப்பு?

சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்ற இத்தொகுதியில் மறைந்த முதல்வர் மு. கருணாநிதி 1962 ஆம் ஆண்டில் வென்றார். அப்போது முதல் இத்தொகுதி திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. ஆனால், 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியை அதிமுக கைப்பற்றியது. தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி, மக்களவைத் தொகுதி எனப் படிப்படியாக திமுக இழந்தது. அவற்றையெல்லாம் கைப்பற்றிய அதிமுக, 2016 ஆம் ஆண்டு தேர்தலிலும் இத்தொகுதியைத் தக்க வைத்தது.

ஆனால், 2017 ஆம் ஆண்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களில் எம். ரெங்கசாமியும் ஒருவர் என்பதால், இத்தொகுதியில் 2019 ஆம் ஆண்டில் இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவைப் பொதுத் தேர்தலுடன் நடைபெற்ற இத்தேர்தலில் ஒரே நேரத்தில் மக்களவையையும், சட்டப்பேரவையையும் திமுக கைப்பற்றியது. இத்தொகுதி இதுவரை இரு இடைத்தேர்தல்கள் உள்பட மொத்தம் 17 சட்டப்பேரவைத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 9 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

அரசியல் கட்சிகளின் நிலை: 

இம்முறையும் தொகுதியைத் தக்க வைப்பதில் திமுக முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. இப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் உள்பட பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்து தலைமையிடத்தில் மனு அளித்துள்ளனர். எனவே, இத்தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு டி.கே.ஜி. நீலமேகத்துக்கா? அல்லது வேறு யாருக்குமா? என்ற குழப்பம் தொண்டர்கள் மத்தியில் நீடிக்கிறது.

இதேபோல, கடந்த தேர்தலில் இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவும் உள்ளது. எனவே, அதிமுக சார்பில் போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். என்றாலும், வேட்பாளராகும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்ற குழப்பம் அதிமுகவிலும் நிலவுகிறது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இத்தொகுதியைப் பெறுவதற்கு பாஜகவும் முயன்று வருகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு மற்ற தொகுதிகளை விட தஞ்சாவூர் தொகுதியில் பாஜக முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. எனவே, அதிமுக கூட்டணியில் இத்தொகுதி யாருக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

இதுவரை வென்றவர்கள்:

1952 - (இரட்டை உறுப்பினர்கள்):
          எம். மாரிமுத்து (காங்கிரஸ்)
          எஸ். ராமலிங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
1957 - ஏ.ஒய்.எஸ். பரிசுத்த நாடார் (காங்கிரஸ்)
1962 - மு. கருணாநிதி (திமுக)
1967 - ஏ.ஒய்.எஸ். பரிசுத்தநாடார் (காங்கிரஸ்)
1971 - எஸ். நடராஜன் (திமுக)
1977 -  எஸ். நடராஜன் (திமுக)
1980 - எஸ். நடராஜன் (திமுக)
1984 - (இடைத்தேர்தல்) கி. அய்யாறு வாண்டையார் (காங்கிரஸ்)
1984 - துரை. கிருஷ்ணமூர்த்தி (காங்கிரஸ்)
1989 - சி.நா.மீ. உபயதுல்லா (திமுக)
1991 - எஸ்.டி. சோமசுந்தரம் (அதிமுக)
1996 - சி.நா.மீ. உபயதுல்லா (திமுக)
2001 - சி.நா.மீ. உபயதுல்லா (திமுக)
2006 - சி.நா.மீ. உபயதுல்லா (திமுக)
2011 - எம். ரெங்கசாமி (அதிமுக)
2016 - எம். ரெங்கசாமி (அதிமுக)
2019 - டி.கே.ஜி. நீலமேகம் (திமுக)

வாக்காளர்கள் விவரம்:

ஆண்கள்: 1,38,166
பெண்கள்: 1,50,678
திருநங்கைகள்: 56
மொத்த வாக்காளர்கள்: 2,88,900 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com