தருமபுரி: வெற்றியை நிர்ணயிக்கும் கூட்டணி முடிவுகள்

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளும் அதிக எண்ணிக்கையிலான வாக்கு வங்கியை கொண்டுள்ளன.
   தருமபுரியின் அடையாளமாகத் திகழும் அதியமான், ஔவையார் சிலைகள் 
   தருமபுரியின் அடையாளமாகத் திகழும் அதியமான், ஔவையார் சிலைகள் 

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி, சேலம் மாவட்டத்தையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் இணைக்கும் பிரதான தேசிய நெடுஞ்சாலையைத்  தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தத் தொகுதியில் தமிழ் மொழியோடு தெலுங்கு, கன்னடம், உருது மொழி பேசுவோரும் பரவலாக உள்ளனர்.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுயில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 2,67,980. ஆண்கள்:1,35,097. பெண்கள்: 1,32,774. மூன்றாம் பாலினம்: 109.

வரலாற்றுச் சிறப்பு:

தகடூர் நாட்டை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடுமான் அஞ்சி, தனது தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த நகரம் தருமபுரி. அவரது கோட்டை இருந்ததாகக் கூறப்படும் அதியமான்கோட்டை, அவர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சோமேஸ்வரர் கோயில், கால பைரவர் கோயில், விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட சென்றாயப் பெருமாள் கோயில் என பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

மனித ஆயுளை அதிகரிக்கும் தன்மை கொண்ட அற்புத நெல்லிக்கனியை தமிழ் மூதாட்டி ஔவைக்கு அதியமான் அளித்த வரலாற்று நிகழ்வுக்குச் சொந்தமானது தருமபுரி. அதன் நினைவாக, அதியமான்கோட்டையில் வள்ளல் அதியமான் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தருமபுரி நான்குமுனைச் சாலை சந்திப்பிலும் அதியமான், ஔவைக்கு நெல்லிக்கனி வழங்கும் சிலை நிறுப்பட்டுள்ளது.

மலைகளும் குன்றுகளும், வனப்பகுதியும், பெரும்பகுதி மேட்டு நிலங்களையும் கொண்டதாக தருமபுரி தொகுதியின் நில அமைப்பு உள்ளது.

சமூகம் மற்றும் தொழில்கள்:

இத்தொகுதியில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வன்னியர் சமூகத்தினர். இவர்களில் பெரும்பகுதியினர் பாமகவிலும், ஏனையோர் இரு திராவிடக் கட்சிகளிலும் உள்ளனர். இச்சமூகத்துக்கு அடுத்தபடியாக பட்டியல் இனத்தவர்கள், கொங்கு வேளாளக் கவுண்டர், முதலியார், நாயுடு, செட்டியார், குரும்பர் சமூகத்தினர் பரவலாக உள்ளனர். இவர்களோடு தருமபுரி நகரில் இஸ்லாமியர், கிறிஸ்தவர்களும் பரவலாகக் காணப்படுகின்றனர். 

வேளாண் தொழில், கால்நடை வளர்ப்பு, நெசவு, வணிகம் ஆகியவை இத் தொகுதி மக்களின் பிரதானத் தொழில்களாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: தருமபுரி நகராட்சிப் பகுதி (33 வார்டுகள்), தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 28 கிராம ஊராட்சிகளில் அதகப்பாடி, கடகத்தூர், சோகத்தூர், இலக்கியம்பட்டி,  ஏ.கொல்லஅள்ளி ஆகிய 5 கிராம ஊராட்சிகள், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 கிராம ஊராட்சிகள் ஆகியவை தருமபுரி பேரவைத் தொகுதியில் அடங்கியுள்ளன.

கட்சிகளின் செல்வாக்கு: தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளும் அதிக எண்ணிக்கையிலான வாக்கு வங்கியை வைத்துள்ளன. இவை தவிர, காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், இரு இடதுசாரிக் கட்சிகளுக்கு அமைப்புகள் உள்ளன.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் இதுவரை 15 பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில், கடந்த 2016-இல் நடைபெற்ற தேர்தல் உள்பட ஆறு முறை திமுக வென்றுள்ளது. அதிமுக, தேமுதிக, ஜனதா கட்சி ஆகியவை தலா ஒரு முறையும், பாமக, காங்கிரஸ் ஆகியவை தலா இரு முறையும், கடந்த 1952 மற்றும் 1962 ஆகிய இரு முறை சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 1965-இல் ஒரு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில், தருமபுரி நகராட்சிப் பகுதியிலுள்ள அதிக அளவிலான அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர் அதிக அளவில் உள்ளதால், இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிக முறை வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தற்போதைய சூழலில் திமுகவுக்கு கூட்டணி வலுவாக உள்ளது. இருப்பினும், பாமகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அதிமுக கூட்டணிக்கும் பலமான வாக்கு வங்கி உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு மற்றும் கூட்டணி முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றி வாய்ப்பு அமையும்.

அடிப்படைப் பிரச்னைகள்: உயர்கல்வி முடித்தவுடன் வேலைவாய்ப்புத் தேடி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்குச் செல்லும் நிலையைத் தடுத்து, உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்; பெரும்பகுதி நிலங்கள் கிணறு, ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம், மழையை மட்டுமே நம்பி உள்ளதால், நீர்ப்பாசனத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும் ஆகியவை தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளன.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: குடிமராமத்துத் திட்டத்தில் சில ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. பாளையம்புதூர் ஜகநாதன் கோம்பை தடுப்பணை புனரமைக்கப்பட்டுள்ளது. நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் பல்வேறு சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. குக்கிராமங்களுக்கும் சாலைகள், சிறு பாலங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்: கடந்த 2011-இல் அறிவிக்கப்பட்ட தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டைத் திட்டம், ராணுவ ஆராய்ச்சி நிலையம், சனத்குமார நதியைத் தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைக்கும் திட்டம், தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையை விபத்துகளற்ற சாலையாக மாற்றும் திட்டம், தருமபுரியிலிருந்து மொரப்பூர் ரயில் பாதை அமைக்கும் திட்டம், தருமபுரி நகராட்சியுடன் இலக்கியம்பட்டி, செட்டிக்கரை, சோகத்தூர், ஏ.ஜெட்டிஅள்ளி,  தடங்கம், அதியமான்கோட்டை ஆகிய ஊராட்சிகளை இணைத்து நகராட்சியை விரிவுபடுத்தும் திட்டம், வெண்ணாம்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பாரதிபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

மக்களின் எதிர்பார்ப்பு: தருமபுரி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த நேதாஜி புறவழிச்சாலையை அகலப்படுத்த வேண்டும். தருமபுரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை புறநகருக்கு இடம் மாற்ற வேண்டும். தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையை வளைவுகளற்ற சாலையாக மாற்ற வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை தொடங்க வேண்டும். ஒரு சில ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் இயங்கி வருவதால், அவற்றை ஊக்குவிக்கும் வகையில் தருமபுரியில் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும். தருமபுரி நகருக்கு மீண்டும் பஞ்சப்பள்ளி குடிநீரை விநியோகிக்க வேண்டும். அனைத்துப் பகுதிகளுக்கும் தட்டுபாடின்றி ஒகேனக்கல் குடிநீரை விநியோகிக்க வேண்டும். நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வேளாண் தொழிலை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்டவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளன.

தற்போதைய நிலவரம்: தருமபுரி தொகுதியைப் பொருத்தவரையில் திமுக கூட்டணியில் திமுகவே களம் காண அதிக வாய்ப்புகள் உள்ளன. இதேபோல, அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு தருமபுரி பேரவைத் தொகுதியை ஒதுக்குமாறு கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016 தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இத்தேர்தலில் திமுக சார்பில் தடங்கம் பெ.சுப்ரமணி போட்டியிட்டு 71,056 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் பு.தா.இளங்கோவன் போட்டியிட்டார். இவர் 61,380 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். பாமக சார்பில் போட்டியிட்ட இரா.செந்தில், 56,727 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட வி.இளங்கோவன் 9,348 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஆறுமுகம் 1,606 வாக்குகளும் பெற்றனர். கடந்த தேர்தலில் 82.39 சதவீதம் வாக்குகள் பதிவாயின. இதில், திமுக 34.25 சதவீதமும், அதிமுக 29.58 சதவீதமும் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com