காங்கயம்: போட்டியிட யாருக்கு வாய்ப்பு?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆர்.எம்.வீரப்பன் போன்றோர் போட்டியிட்ட தொகுதி திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதி.
காங்கயம் காளை
காங்கயம் காளை

திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் தொகுதி அமைந்துள்ளது. 1957 ஆம் ஆண்டு முதல் இத்தொகுதி செயல்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது வெள்ளக்கோவில் தொகுதி நீக்கப்பட்டு, அதன் 80 சதவீத பகுதிகள் காங்கயம் தொகுதியில் இணைக்கப்பட்டன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆர்.எம்.வீரப்பன் போன்றோர் போட்டியிட்ட தொகுதி காங்கயம்.

தொழில்: தேங்காய் பருப்பு உற்பத்தி, தேங்காய் எண்ணெய் தொழில், தேங்காய் தொட்டி கார்பன் உற்பத்தி, தென்னை நார்த் தொழில், அரிசி ஆலைகள், வெள்ளக்கோவிலில் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள், சமைய‌ல் எண்ணெய் ரீஃபைனரீஸ், நிதி நிறுவனங்கள், குறிப்பிட்ட அளவில் விசைத்தறி தொழிற்சாலைகள், செங்கல், ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முக்கிய தொழில்களாகும். வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் மழையை நம்பி விவசாயமும் நடைபெற்று வருகிறது.

சிறப்புகள்: பழமை வாய்ந்த புகழ்பெற்ற சிவன்மலை முருகன் கோயில், மயில்ரங்கம், வெள்ளக்கோவில் ஈஸ்வரன் கோயில், வீரக்குமார சுவாமி, முத்தூர் குப்பயண்ண சுவாமி, மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயில்கள் சிறப்பு வாய்ந்தவைகளாகும். 

நில அமைப்பு பெருமளவு மேட்டாங்காட்டுப் பகுதியாக அமைந்துள்ளது. 10 சதவீத அளவுக்கு கீழ்பவானி வாய்க்கால் பாயும் நன்செய் பூமி உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு இல்லை. குடிநீர் தேவைக்கு பயன்படும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வசதி உள்ளது.

சாதி- சமூகம்: கொங்கு வேளாள கவுண்டர்கள் அதிகளவிலும், அடுத்தபடியாக முதலியார், ஆதி திராவிடர் இன மக்கள் உள்ளனர். கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகள் குறைவு. சாதி, சமூகக் கட்டுப்பாடுகள் கிடையாது.

 இதுவரை வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர்கள்

1957 - கே.ஜி.பழனிசாமி கவுண்டர் (காங்.)
1962 - கே.எஸ்.நடராஜ கவுண்டர் (காங்.)
1967 - ஏ.எஸ்.கவுண்டர் (காங்.)
1971 - கோவை செழியன் (திமுக)
1977 - ஆர்.கே.எஸ்.தண்டபாணி (அதிமுக)
1980  -கே.ஜி.கிருஷ்ணசாமி (அதிமுக)
1984 - கே.சி.பழனிசாமி (அதிமுக)
1989 - பி.மாரப்பன் (அதிமுக.ஜெ)
1991 - ஜெ.ஜெயலலிதா (அதிமுக)
1991 - இடைத் தேர்தல்-ஆர்.எம் வீரப்பன் (அதிமுக)
1996 - ராஜ்குமார் மன்றாடியார் (திமுக)
2001 - எம்.செல்வி முருகேசன் (அதிமுக)
2006 - விடியல் சேகர் (காங்.)
2011 - என்.எஸ்.என்.நடராஜ் (அதிமுக)
2016 - உ.தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை - அதிமுக கூட்டணி). 

போட்டியிட வாய்ப்பு யாருக்கு?

காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கயம், வெள்ளக்கோவில் ஆகிய 2 நகராட்சிகள், முத்தூர், சென்னிமலை ஆகிய 2 பேரூராட்சிகள், காங்கயம், வெள்ளக்கோவில், குண்டடம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கியுள்ளன. தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் அதிமுக, திமுகவைத் தவிர பிற கட்சிகளுக்கு அந்தளவுக்கு செல்வாக்கு காணப்படவில்லை. காங்கிரஸ், பாஜக, புதிய நீதிக் கட்சிகளுக்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது.

வெற்றி வாய்ப்பில் சற்று முன்னிலையில் இருந்த அதிமுக, சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்ததால் பின்னடைவை சந்திக்கிறது. தற்போதைய 2021 தேர்தலில் அதிமுக, திமுக போட்டியிட வாய்ப்புள்ளது. அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், தற்போதைய ஈரோடு எம்எல்ஏ கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ், வேலம்பாளையம் ஊராட்சித் தலைவர் முருகவேல் ஆகியோர் சீட் பெறும் போட்டியில் உள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் சேகரும் களத்தில் உள்ளார். 

திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன், காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவரும், ராகுல் காந்தியிடம் செல்வாக்குள்ளவருமான ப.கோபியும் காங்கயம் தொகுதியில் சீட் கேட்டு வருகின்றனர். 

திட்டங்கள்: கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியில் வழக்கமான அரசின் இலவசத் திட்டங்களைத் தவிர்த்து, சொல்லிக்கொள்ளும்படியான திட்டம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. காங்கயத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டது. தேசிய, மாநில நெடுஞ்சாலைப் பணிகள், உள்ளாட்சி சாலைப் பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

பிரச்னைகள்: தொகுதியில் ஆங்காங்கே குடிநீர் பிரச்னை நீடித்து வருகிறது. தொகுதி பறிபோன நிலையில் வெள்ளக்கோவிலைத் தாலுகாவாக தரம் உயர்த்த வேண்டுமென கோரிக்கை உள்ளது. நீர் திருட்டைத் தடுத்து, காங்கயம் - வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் ஆழியாறு கிளை வாய்க்காலில் அரசு விதிமுறைப்படி தண்ணீர் வழங்க வலியுறுத்தப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் வட்டமலை அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப விவசாயிகள் போராடி வருகின்றனர். நொய்யல் ஆற்றில் திருப்பூர் சலவை, சாயப்பட்டறைகளின் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க வேண்டுமென சென்னிமலை, முத்தூர் பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com