பல்லடம்: சாதி வாக்குகளுக்கு இடமில்லா தொகுதி

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் பல தரப்பட்ட சாதியினர் வசித்து வருவதால் இத்தொகுதியைப் பொருத்தவரையில் சாதி அரசியலும் சாதி வாக்குகளும் இடமில்லை. 
பல்லடம் அரசு கலைக் கல்லூரி
பல்லடம் அரசு கலைக் கல்லூரி

திருப்பூர் மாவட்டம் பல்லடம்  புல்லாங்குழல் வித்வான் சஞ்சீவிராவ் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஆகும். பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தி, கறிக்கோழி பண்ணைகள், பின்னலாடை, சாய ஆலைகள் நிறைந்த பகுதி.

பல்லடம் நகராட்சி, பல்லடம் ஒன்றியம், பொங்கலூர் ஒன்றியம் மற்றும் திருப்பூர் ஒன்றியம், திருப்பூர் மாநகராட்சியின் 10 வார்டுகள் என தொகுதியின் அமைவிடம் உள்ளது. இத்தொகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி, கறிக்கோழி பண்ணைகள், கல்குவாரிகள், பின்னலாடை, சாய ஆலைகள்,  இந்தியாவின் முதல் நெசவு பூங்கா என பல்வேறு தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.

பல்லடம் ஒன்றியம், பொங்கலூர் ஒன்றியப் பகுதிகளில் காய்கறி சாகுபடி உள்ளிட்ட வேளாண்மை உற்பத்தியும் அதிக அளவு நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் கோவை, திருப்பூர், பல்லடம் பகுதியில் உள்ள தினசரி மார்கெட்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல்லடம் தொகுதியில் உள்ளூர், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். பல்லடம் பகுதியில் தினசரி 10 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு தினந்தோறும் கோழி இறைச்சி நுகர்வு அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

சாதிக்கு வேலையில்லா பல்லடம்
சாதிக்கு வேலையில்லா பல்லடம்

அதேபோல் 2 லட்சம் விசைத்தறிகள் மற்றும் 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. ஜவுளித் தொழிலில் நேரடியாக 1 லட்சம் பேரும் மறைமுகமாக 4 லட்சம் பேரும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

மறு சீரமைப்பில் உருவான தொகுதி:

2008 ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது பல்லடம் சட்டப்பேரவை தொகுதி பல்லடம், சூலூர் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பல்லடம் திருப்பூர் மாவட்டத்திலும், சூலூர் கோவை மாவட்டத்திலும் சேர்ந்தன. அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1957 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களும் இரண்டாமிடம் பெற்றவர்கள் விபரம் வருமாறு:

1957 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை உறுப்பினராக பி.எஸ்.சின்னதுரை (பிரஜா சோசலிஸ்ட் கட்சி) - 27,111 வாக்குகளும், இரண்டாமிடம் பிடித்த கே.என்.குமாரசாமி (காங்கிரஸ்) - 17,515 வாக்குகளும் பெற்றனர். 

1962 ஆம் ஆண்டு தேர்தலில் செங்காளியப்பன் (காங்கிரஸ்) - 33,437 வாக்குகளும், இரண்டாமிடத்தில் பி.எஸ்.சின்னதுரை (பிரஜா சோசலிஸ் கட்சி) - 14,736  வாக்குகளும் பெற்றனர்.

1967 ஆம் ஆண்டு தேர்தலில் கே.என்.குமாரசாமி (பிரஜா சோசலிஸ்ட் கட்சி) - 31,977 வாக்குகளும் இரண்டாமிடத்தில் செங்காளியப்பன் (காங்கிரஸ்) - 24,421 வாக்குகளும் பெற்றனர். 

விசைத்தறிகள்
விசைத்தறிகள்

1971 ஆம் ஆண்டு தேர்தலில் கே.என்.குமாரசாமி  (பிரஜா சோசலிஸ்ட் கட்சி) - 34,876 வாக்குகளும் இரண்டாமிடத்தில் செங்காளியப்பன் (ஸ்தாபன காங்கிரஸ்) - 21,070 வாக்குகளும் பெற்றனர். 

1977 ஆம் ஆண்டு தேர்தலில் பி.ஜி.கிட்டு (அதிமுக) - 27,172 வாக்குகளும் இரண்டாமிடத்தில் கே.என்.குமாரசாமி (காங்கிரஸ்) - 20,175 வாக்குகளும் பெற்றனர். 

1980 ஆம் ஆண்டு தேர்தலில் பி.என்.பரமசிவம் (அதிமுக) - 40,305 வாக்குகளும் அத்தேர்தலில் இரண்டாமிடத்தில் கே.என்.குமாரசாமி (காங்கிரஸ்) - 32,345  வாக்குகளும் பெற்றனர்.

1984 ஆம் ஆண்டு தேர்தலில் பி.என்.பரமசிவம் ( அதிமுக) - 51,083 வாக்குகளும் இரண்டாமிடத்தில் சிவசாமி (சுயேச்சை) - 40,510 வாக்குகளும் பெற்றனர். 

1989 ஆம் ஆண்டு தேர்தலில் மு.கண்ணப்பன் (திமுக) - 45,395 வாக்குகளும் இரண்டாமிடத்தில் கே.சிவராஜ் (அதிமுக - ஜெ. அணி ) - 31,819 வாக்குகளும் பெற்றனர். 

கோழிப் பண்ணை
கோழிப் பண்ணை

1991 ஆம் ஆண்டு தேர்தலில் கே.எஸ்.துரைமுருகன்(அதிமுக) - 69,803 வாக்குகளும் இரண்டாமிடத்தில் மு.கண்ணப்பன் ( திமுக) - 37,079 வாக்குகளும் பெற்றனர்.

1996 ஆம் ஆண்டு தேர்தலில் எஸ்.எஸ்.பொன்முடி (திமுக) - 73,901 வாக்குகளும் இரண்டாமிடத்தில் கே.எஸ்.துரைமுருகன் (அதிமுக ) - 41,361 வாக்குகளும் பெற்றனர். 

2001 ஆம் ஆண்டு தேர்தலில் செ.ம.வேலுசாமி (அதிமுக) - 82,592 வாக்குகளும் இரண்டாமிடத்தில் எஸ்.எஸ்.பொன்முடி(திமுக) - 50,118 வாக்குகளும் பெற்றனர்.

2006 ஆம் ஆண்டு தேர்தலில் செ.ம.வேலுசாமி (அதிமுக) - 73,059 வாக்குகளும் இரண்டாமிடத்தில் எஸ்.எஸ்.பொன்முடி(திமுக ) - 67,542 வாக்குகளும் பெற்றனர்.

2011 ஆம் ஆண்டு தேர்தலில் கே.பி.பரமசிவம் ( அதிமுக) - 1,18,140 வாக்குகளும் இரண்டாமிடத்தில் பாலசுப்பிரமணியம் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்) - 48,364 வாக்குகளும் பெற்றனர். 

2016 ஆம் ஆண்டு தேர்தலில் ஏ.நடராஜன் ( அதிமுக) - 1,11,866 வாக்குகளும் இரண்டாமிடத்தில் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ( திமுக ) - 79692 வாக்குகளும் பெற்றனர். இத்தேர்தலில் அதிமுக 32174 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்தேர்தலில் போட்டியிட்ட க.முத்துரத்தினம் (மதிமுக) - 14841 வாக்குகளும், தங்கராஜ் (பாஜக) -  13,127 வாக்குகளும், ராஜேந்திரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) - 6572 வாக்குகளும், நோட்டாவில் 3,904 வாக்குகளும் பதிவாகி இருந்தது.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் பிரஜா சோசலிஸ் கட்சி 3 முறையும் காங்கிரஸ் கட்சி 1 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 8 முறையும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

பல்லடம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,87,926 பேர், பெண் வாக்காளர்கள் 1,87,852 பேர், மூன்றாம் பாலினத்தினர் 60 பேர் என மொத்தம் 3,75,838 வாக்காளர்கள் உள்ளனர். 407 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. திருப்பூர் மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்களும், அதிக வாக்குச்சாவடி மையங்களும் இத்தொகுதியில் தான் உள்ளன.

பிரச்னைகள்:

திருப்பூரை ஒட்டியுள்ள பல்லடம் தொழில் துறை வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. பல்லடம் தாலூகாவில் கறிக்கோழி உற்பத்தி, விசைத்தறி ஜவுளி உற்பத்தி, சாய ஆலை, கல்குவாரி, பின்னலாடை நிறுவனங்கள்,விவசாயம் என பல்வேறு தரப்பட்ட தொழில்கள் பரந்து விரிந்து வருகின்றன. தொழில் துறை வளர்ச்சிக்கு இணையாக பல்லடம் வட்டாரத்தில் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. ஆனால் அவற்றுக்கு இணையாக கட்டமைப்பு வசதிகள் பின்னடைவிலேயே உள்ளன. பல்லடம் அண்ணா நகரில் இருந்து பனப்பாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது.அப்பகுதியை கடந்த 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை ஆவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நான்கு சாலை சந்திப்பு, மாணிக்காபுரம் சாலை சந்திப்பு, திருப்பூர் சாலை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

5 ஆண்டுகளில் செய்தது:

பல்லடம் தொகுதியின் முக்கியப் பிரச்னையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது, ரூ.100 கோடியில் கூட்டு குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தியது, பல்லடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோழியின ஆராய்ச்சி மையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அவிநாசிபாளையத்தில் ரூ. 11 கோடி நிதி ஒதுக்கீட்டில் காவல் நிலையம் மற்றும் குடியிருப்புக் கட்டடம், பல்லடம் புறவழிச்சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பதற்கு ரூ. 45 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, பல்லடத்தில் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், பல்லடம் கல்வி மாவட்டம், அறிநிலையத்துறை செயல் அலுவலர் அலுவலகம், அனைத்துப் பகுதிகளிலும் புதிய தார் சாலைகள், பல்லடம் நகரில் சாலைகளில் புதிய தெரு விளக்குகள், புதிய ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், பல்லடம் நகருக்கு என்று சாலை அமைக்கும் திட்டப்பணி,  பல்லடம் நகரில் மங்கல்ம் சாலை விரிவாக்கம் என பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை வெகுஜன மக்களின் பார்வையில் 5 ஆண்டுகளில் செய்த சாதனையாக கவனம் பெறுகிறது.

மக்களின் எதிர்பார்ப்பு:

கோவையிலிருந்து திருச்சி, மதுரை மற்றும் திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல முக்கிய வழித்தடமாக பல்லடம் விளங்கி வருகிறது. அதனால் 24 மணி நேரமும் போக்குவரத்து வசதியும் மக்கள் நடமாட்டமும் பல்லடம் பேருந்து நிலையத்தில் இருக்கும். போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள கோவை - திருச்சி - மதுரை பிரதான சாலையில் உள்ள பல்லடம் அண்ணா நகர் முதல் பனப்பாளையம் வரை புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும். 

மேலும், பல்லடம் புறவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பல்லடம் பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நிகழ்ந்து வண்ணம் உள்ளன. விபத்துகளில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. பல்லடம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ரத்த வங்கி வசதியுடன் ஏற்படுத்த வேண்டும்.

தினசரி 700 பேருக்கும் மேலான புறநோயாளிகள் இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் தேவையான நவீன கருவிகள் உள்ளிட்ட போதிய வசதிகள் கிடையாது. அதனால் சாலை விபத்தில் காயமடைந்தோரை முதலுதவிக்கு பின்னர் திருப்பூர் மற்றும் கோவைக்கு செல்ல பரிந்துரைக்கப்படுகிறது.

எனவே, பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். அதேபோல் பல்லடம் கால்நடை மருந்தகம் அண்மையில் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டாலும் முழுமையாக மருத்துவமனையாக அது இயங்கவில்லை. காரணம் தேவையான நவீன ஸ்கேன் உள்ளிட்ட சாதனங்கள் இல்லாதது, பணியிடம் நிரப்பாதது போன்ற காரணங்களால் தரம் உயர்த்தப்பட்டும் மருந்தகமாக முன்பு இயங்கிய கால நேரத்தில் மட்டும் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த கால்நடை மருத்துவமனை முழுமையாக செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

விவசாயம் சார்ந்த தொழிலான கோழிப்பண்ணைகளுக்கான மின் கட்டணம் விசைத்தறிக் கூடங்களுக்கு வழங்கப்படுவதுபோல் மின் கட்டண விகிதத்தில் சலுகை வழங்க வேண்டும். கறிக்கோழிப் பண்ணை,கோழி தீவன ஆலை,  கோழிக்குஞ்சு பொறிப்பகம் மற்றும் தாய் கோழிப்பண்ணை அமைத்தலுக்கான விதிமுறைகளை எளிமைப்படுத்தவும், உள்ளூர் திட்டக்குழுமத்தின் அனுமதி பெறுவதையும், போடப்படும் வரிவிதிப்பையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

கால்நடை மற்றும் கோழிப்பண்ணை தொழிலுக்கு (தீவனங்களுக்கு) தேவையான முக்கிய மூலப்பொருடள்களான மக்காச்சோளம், கம்பு மற்றும் சோயா ஆகியவற்றை தமிழகத்தில் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அண்டை மாநிலங்களை நம்பியே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது.

எனவே, ரயில்கள் மூலம் கொண்டு வரும் கோழி தீவனப் பொருள்களுக்கு மத்திய அரசு ரயில் கட்டணச் சலுகை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சோயா இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்து இறக்குமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும். கோழிப்பண்ணைகளுக்கு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பல்லடத்தில் உள்ள கோழி இன நோய் மற்றும் தீவன ஆய்வுக் கூடத்தில் கோழி மற்றும் கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி மையத்தை அமைத்து அனைவருக்கும் தரமான பயிற்சியுடன் சான்று வழங்கி சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் அம்மையத்தின் ஆய்வுக் கூடத்தில் நவீன இயந்திரங்களை அமைத்து கோழி மற்றும் கால்நடைத் தொழிலை மேம்படுத்த வேண்டும்.  கோழிப்பண்ணை கழிவு மற்றும் இறந்த கோழிகளை மீண்டும் கோழிப் பண்ணை தீவனமாக மாற்றும் இயந்திரத்தை அரசு இலவசமாக நிறுவித் தர வேண்டும்.

கோழி வளர்ப்பு பண்ணைத் தொழில் விவசாயம் சார்ந்த தொழிலாக விளங்குவதால் இதனை பசுமைத் தொழிலாக தொடர மத்திய அரசிடம் ஆவண செய்ய வேண்டும். கோழி வளர்ப்புத் தொழில் போன்ற விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்களுக்கும் தேவையான உபகரணங்கள் மற்றும் நவீன இயந்திரங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செயவதற்குண்டான வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பது கறிக்கோழி பண்ணையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2014 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 8 ஆவது கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த 6 ஆண்டுகளாக இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தேர்தல் நடைமுறைகள் முடிந்து ஜூன் மாதத்தில் தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி முழுமையாக அமல்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

உதய் மின் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் சிறு குறு விசைத்தறியாளர்கள் தற்போது பெற்று வரும் மின் கட்டணச் சலுகைகள் தொடர்ந்து வழங்கிட வேண்டுகிறோம். சிறு குறு விசைத்தறி தொழிலை நம்பியுள்ள பல லட்சம் பேர் பயனடைகின்ற வகையில் பல்வேறு கால கட்டங்களில் தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட் என்பதில் இருந்து 250 யூனிட் உயர்த்தி 1000 யூனிட்டாக வழங்க வேண்டும்.

2014 ஆம் ஆண்டுக்கு பின்பு கூலி உயர்வு அறிவிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படாததால் விசைத்தறிகளுக்காக வாங்கிய வங்கி கடனை செலுத்த முடியாமல் விசைத்தறியாளர்கள் வங்கிகளின் ஜப்தி, ஏல நடவடிக்கைகளுக்கு தங்கள் வீடு, விசைத்தறிக் கூடங்களை இழக்கும் நிலையில் உள்ளனர். தமிழக முதல்வர் அறிவித்தபடி மார்ச் 2017க்கு முன்னர் விசைத்தறியாளர்கள் பெற்ற வங்கி மூலதனக் கடன்கள் சுமார் ரூ. 65 கோடியை தள்ளுபடி செய்து விசைத்தறியாளர்கள் மற்றும் அதை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்.

நாடா இல்லா நவீன தறிகளின் அபிரிதமான உற்பத்தியால், நலிவடைந்து உள்ள விசைத்தறித் தொழிலை காக்க, கைத்தறிக்கு உள்ளது போல விசைத்தறியில் ஓட்டக் கூடிய ரகங்களை நாடா விசைத்தறியில் மட்டுமே ஓட்ட ரக ஒதுக்கீடு செய்து தர மத்திய அரசிடம் கேட்டு பெற்றுத் தர வேண்டும்.

திருப்பூர், கோவை மாவட்டத்தில் தினசரி தயாராகும் 1.25 கோடி மீட்டர் நாடா துணியை இடைத்தரகர் தலையீடு இன்றி விற்பனை செய்ய, அரசின் செலவில் அனைத்து உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய மொத்த விற்பனை செய்ய பல்லடத்தில் ஜவுளிச் சந்தை அமைத்துத் தர வேண்டும்.

கிராமப்புற ஏழை எளிய இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்ற வகையில் விசைத்தறி தொழில்சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கிடவும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு இலவச குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும்.

தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை, பள்ளிச் சீருடைகள் முதலியவற்றை விசைத்தறிகளில் மட்டும் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனா முதலிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் விசைத்தறித் துணி மற்றும் ஆடைகளுக்கு இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி உள்நாட்டு விசைத்தறித் தொழிலை பாதுகாக்க வேண்டும். ரயான் பஞ்சு மற்றும் நூலுக்கு பொருள் குவிப்பு வரி விதிப்பதை விடுத்து துணி மற்றும் ஆடைகளுக்கு பொருள் குவிப்பு வரி விதித்து உள்நாட்டு விசைத்தறித் தொழில் மற்றும் அதை நம்பியுள்ள பல லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது விசைத்தறி உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
சாதி வாக்குகள் பலம்:

பல்லடம் தொகுதியில் 40 சதவீதம் அளவுக்கு கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாய வாக்குகளும், 10 சதவீதம் அளவுக்கு பட்டியல் இன சமுதாயத்தினரும், 10 சதவீதம் அளவுக்கு சிறுபான்மையின சமுதாயத்தினரும், 40 சதவீதம் நாயுடு, செட்டியார், முதலியார், தேவர், நாடார் என பிற சமுதாயத்தைச் சேர்ந்த வாக்குகளும் உள்ளன.

அதிமுக, திமுக என இரண்டு பெரிய கட்சிகளுக்கும் முறையே முதல், இரண்டாமிடத்தை கட்சி வாக்குகளாக பெற்றுள்ளன. இத்தொகுதியை பொருத்தவரை செட்டியார், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட மற்ற அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் பல தரப்பட்ட சாதியினர் வசித்து வருவதால் இத்தொகுதியை பொருத்தவரையில் சாதி அரசியலுக்கும் சாதி வாக்குகளும் இடமில்லை. அரசியல் கட்சி கூட்டணி பலம்தான் இத்தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கிறது.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்:

இந்தத் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக, திமுக, நேரடி போட்டியை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் இத்தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிட வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மதிமுகவும் இந்த தொகுதியை எதிர்பார்க்கிறது. அதேபோல் அதிமுக கூட்டணி பலத்தால் இத்தொகுதியில் பாஜக போட்டியிட்டு எளிதாக வெற்றி பெற மிகுந்த ஆர்வம் காட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com