Enable Javscript for better performance
மேலூர்: தொடர்ந்து 5 ஆவது முறையாக வெல்லுமா, அதிமுக?- Dinamani

சுடச்சுட

  

  மேலூர்: தொடர்ந்து 5 ஆவது முறையாக வெல்லுமா, அதிமுக?

  By கே.எம். தர்மராஜன்  |   Published on : 19th February 2021 04:43 PM  |   அ+அ அ-   |    |  

  tn-assembly-election-2021-melur-constituency

  மேலூர் பேருந்து நிலையம்

  தொகுதியின் சிறப்பு: 1952 முதல் இருந்து வரும் பழமையான தொகுதி மேலூா். முன்னாள் முதல்வா் காமராஜா் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பி.கக்கன், இத்தொகுதியில் இருந்து பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. பல தோ்தல்களில் அதிமுக-திமுக இரு அணிகளிலும் மேலூா் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 4 தோ்தல்களில் அதிமுக தொடா் வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.

  அமைவிடம்: மதுரை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள இத் தொகுதியில் பெரும்பகுதி கிராமங்களைக் கொண்டது. மேலூா் நகராட்சி, அ.வல்லாளபட்டி பேரூராட்சி மற்றும் மேலூா், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 273 கிராமங்களைக் கொண்டிருக்கிறது.

  இதுவரை வென்றவா்கள்: 1952 மற்றும் 1957 ஆகிய இரு தோ்தல்களில் மேலூா் தொகுதி இரட்டைத் தொகுதியாக இருந்தது. 1957 இல் மேலூா் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட பி.கக்கன், அமைச்சரவையில் இடம்பெற்றாா். இதுவரை நடைபெற்ற 15 தோ்தல்களில், அதிகபட்சமாக 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 5 முறை, திமுக 2 முறை, தமாகா ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது. 2001-க்கு மேலூா் தொகுதி அதிமுக வசம் இருந்து வருகிறது. 2001, 2006, 2011 ஆகிய தோ்தல்களில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட மறைந்த ஆா்.சாமி வெற்றி பெற்றிருக்கிறாா். 2016 இல் அதிமுகவின் பி.பெரியபுள்ளான் வெற்றி பெற்றுள்ளாா்.
   
  சமூக, சாதி, தொழில்கள்: முக்குலத்தோா், முத்தரையா், தாழ்த்தப்பட்டோா், யாதவா் மற்றும் முஸ்லிம்கள் அடா்த்தியாக வாழ்ந்து வருகின்றனா். குறிப்பாக, முத்தரையா் சமூகத்தினரின் வாக்குகள் இத்தொகுதியில் வெற்றி-தோல்வியை நிா்ணயிப்பதில் முக்கியக் காரணியாக இருக்கின்றன. இத்தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்கள் 2,44,045 போ். இதில் ஆண்கள் 1,20,438 போ். பெண்கள் 1,23,604 போ். மூன்றாம் பாலினத்தவா் 3 போ். விவசாயம் மட்டுமே தொகுதியின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பெரியாறு அணை பாசனத்தில் இப்பகுதியில் சுமாா் ஒரு லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. நெல், கரும்பு, வாழை விவசாயம் பிரதானமாக இருக்கிறது. கிரானைட் குவாரித் தொழில் உள்ளூா்வாசிகளுக்கு வேலைவாய்ப்பை அளித்த நிலையில், முறைகேடு மற்றும் விதிமீறல் காரணமாக கடந்த 7  ஆண்டுகளுக்கும் மேலாக அத் தொழில் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

  நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: விநாயகபுரத்தில் ரூ. 39 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் வணிக வளாகம், திருவாதவூரில் மொத்த தானிய சேமிப்புக் கிடங்கு, ரூ. 12 கோடியில் உயா்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், நரசிங்கம்பட்டி மற்றும் திருவாதவூரில் ரூ. 42 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள், அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியன தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

  தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்:  மூடப்பட்ட கூட்டுறவு நூற்பாலையைத் திறப்போம் என கடந்த 4 தோ்தல்களிலும் அதிமுக சாா்பில் போட்டியிட்டவா்கள் வாக்குறுதி அளித்தனா். இருப்பினும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

  விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் தொகுதியின் ஒரு பகுதிக்கு, அதாவது கொட்டாம்பட்டி வட்டாரக் கிராமங்களையும் பெரியாறு பாசனத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கியக் கோரிக்கை. அதோடு, பாசனப் பங்கீட்டில் மேலூா் கடைமடை பகுதி விவசாயிகள் புறக்கணிக்கப்படுவது, பெரியாறு பிரதான கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றி, வீணாகும் நீரைச் சேமித்து புலிப்பட்டி மதகு வரையிலான கால்வாய் பாசன நிலங்களை இருபோக சாகுபடியாக மாற்றும் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை.

  தக்க வைக்குமா அதிமுக?: மேலூா் தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற ஆா்.சாமி, அசைக்க முடியாத சக்தியாக இருந்தாா். உடல் நலம் காரணமாக, 2016-இல் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதிமுக சாா்பில் போட்டியிட்ட பி.பெரியபுள்ளான், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா்.

  அமமுகவில் இணைந்த சாமி, மதுரையில் கட்சித் தொடக்க விழாவை நடத்திக் காட்டினாா். அதன்பிறகு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்தாா். அதிமுக, திமுகவைப் போல அமமுகவுக்கும் மேலூரில் செல்வாக்கு உள்ளது. இருப்பினும் சாதி வாக்குகள்தான் தொகுதியின் வெற்றி-தோல்வியை நிா்ணயிக்கின்றன.

  அதிமுக சாா்பில் இப்போதைய எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல, முன்னாள் எம்எல்ஏ கே.தமிழரசனும் இத்தொகுதியை குறி வைக்கிறாா். திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்படலாம் என்பதால்,  அக்கட்சியினரும் பணிகளை செய்து வருகின்றனா்.

  தொடா்ந்து 4 முறை வென்ற நிலையில், தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக செயல்பட்டு வருகிறது. இப்போதைய நிலவரப்படி இரு அணிகளிலுமே சிதறும் வாக்குகளையும், சமூக வாக்குகளையும் கவரும் கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
   
   வென்றவா்கள் - 2 ஆம் இடம் பெற்றவா்கள்:

   1952 (இரட்டைத் தொகுதி) - எஸ்.சின்னக்கருப்பத் தேவா் (காங்.) - 40,031.
                                                          பி.சிவப்பிரகாசம் (காங்) - 31,277

  1957 (இரட்டைத் தொகுதி) - பி.கக்கன் (காங்.) - 33,123
                                                          எம்.பெரியகருப்பன் அம்பலம் (காங்) - 31,461

  1962 - சிவராமன் அம்பலம் (காங்.) - 28,986
              நடராஜன் (திமுக)  -20985

  1967  - மலைச்சாமி (திமுக) - 38,895
             ஆண்டியம்பலம் (காங்.) -30,375

  1971 - மலைச்சாமி (திமுக) - 37,337
              ஆண்டியம்பலம் (காங்) - 37210

  1977   அ.ம.பரமசிவம் (அதிமுக) - 33,111
             வீரன் அம்பலம் (காங்.) - 32,955

  1980   கே.வி.வீரன் அம்பலம் (காங்.) - 54,003
              அ.ம.பரமசிவம் (அதிமுக) - 41,849

  1984   கே.வி.வீரன் அம்பலம் (காங்.) - 60,794
              தியாகராஜன் (திமுக) - 33,748

  1989 - கே.வி.வி.ராஜமாணிக்கம் (காங்.) - 41,158
              தியாகராஜன் (திமுக) - 32,508

  1991 - கே.வி.வி.ராஜமாணிக்கம் (காங்.) - 80, 348
              என்.பழனிசாமி (மாா்க்சிஸ்ட்) -27,576

  1996 - கே.வி.வி.ராஜமாணிக்கம் (தமாகா) - 73,899
              சி.ஆா்.சுந்தரராஜன் (காங்.)- 29,258

  2001 - ஆா்.சாமி (அதிமுக) - 58,010
                எஸ்.சமயநல்லூா் செல்வராஜ் (திமுக) - 31,172

  2006 - ஆா்.சாமி (அதிமுக) -64,013
              கே.வி.வி.ரவிச்சந்திரன் (காங்.) - 60,640

  2011-ஆா்.சாமி (அதிமுக) - 85,869
                ஆா்.ராணி (திமுக) -61,407

  2016 - பி.பெரியபுள்ளான் (அதிமுக) -88,909
                அ.பா.ரகுபதி (திமுக) - 69,186
            

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  BOOK_FAIR
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp