பவானி: 3 ஆவது வெற்றியைப் பதிவு செய்யுமா அதிமுக?

அதிமுகவைப் பொருத்தவரை அமைச்சரின் தொகுதி என்பதால் கே.சி.கருப்பணனே மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பவானி நகரின் எல்லையில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பலகை
பவானி நகரின் எல்லையில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பலகை

பவானி, காவிரி ஆறுகள் சங்கமிக்கும் இடமான கூடுதுறை, பாடல் பெற்ற ஸ்தலமான சங்கமேஸ்வரர் கோயில் ஆகியவற்றை உள்ளடக்கியது பவானி தொகுதி. ஆங்கிலேயர் காலத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் தலைநகராக பவானி விளங்கியுள்ளது. பவானியின் கைத்தறி தயாரிப்பான ஜமுக்காளம் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.

தொகுதியில் இடம்பெற்றுள்ள பகுதிகள்

பவானி நகராட்சி பகுதி. பவானி வட்டத்தில் உள்ள இலிப்பிலி, கன்னப்பள்ளி, அட்டவணைப்புதூர், முகாசிப்புதூர், பட்லூர், ஒட்டப்பாளையம், பருவாச்சி, புன்னம், மைலம்பாடி, கல்பாவி, குறிச்சி, பூனாச்சி, பூதப்பாடி, சிங்கம்பேட்டை, படவல் கால்வாய், கடப்பநல்லூர், கேசரிமங்கலம், சன்யாசிப்பட்டி, வரதநல்லூர், தாளகுளம், பவானி, ஒரிச்சேரி, வைரமங்கலம், ஆலத்தூர், கவுந்தப்பாடி, ஓடத்துறை, ஆண்டிக்குளம், ஊராட்சிக் கோட்டை, சின்னப்புலியூர், பெரியபுலியூர், செட்டிபாளையம் ஊராட்சிகள். நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, ஒலகடம், ஆப்பக்கூடல், ஐம்பை, சலங்கபாளையம் பேரூராட்சிகள்.
 
வாக்காளர் விவரம்

ஆண்கள் - 1,18,231, பெண்கள் - 1,22,291, மூன்றாம் பாலினத்தவர் - 9, மொத்தம் - 2,40,531.

காவிரி, பவானி சங்கமிக்கும் கூடுதுறை
காவிரி, பவானி சங்கமிக்கும் கூடுதுறை

தொழில், சமூக நிலவரம்

பவானி தொகுதி மக்களின் பிரதான தொழிலாக வேளாண்மையும், கைத்தறி ஜமுக்காளம், கைத்தறி துண்டு உற்பத்தியுமாகும். படித்த இளைஞர்கள் வேலைக்காக ஈரோடு, திருப்பூர், கோவைக்கு செல்லும் நிலை உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட கூட்டுறவு ஜமுக்காள உற்பத்தி, விற்பனை சங்கங்கள் உள்ளன. பவானி தொகுதியில் அதிகளவில் வன்னியர், கவுண்டர் இன மக்களும், அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டோர், இதர ஜாதியினரும் உள்ளனர்.

கடந்த தேர்தல்கள்

கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் பவானி தொகுதியில் அதிகபட்சமாக அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், திமுக 2 முறையும், பாமக, தமாகா தலா ஒரு முறையும் வென்றுள்ளன.

1952 - பி.கே.நல்லசாமி -  காங்கிரஸ்     
1957 - ஜி.ஜி.குருமூர்த்தி -  காங்கிரஸ்     
1962 - என்.கே.ரங்கநாயகி -  காங்கிரஸ்     
1967 -  ஏ.எம்.ராஜா -  திமுக    
1971 - ஏ.எம்.ராஜா -  திமுக    
1977 - எம்.ஆர்.சவுந்தரராஜன் - அதிமுக 
1980 - பி.ஜி.நாராயணன் -  அதிமுக     
1984 - பி.ஜி.நாராயணன் -  அதிமுக     
1989 - ஜி.ஜி.குருமூர்த்தி - சுயேச்சை
1991 - எஸ்.முத்துசாமி   - அதிமுக     
1996 -எஸ்.என்.பாலசுப்பிரமணியன் - தமாகா    
2001 - கே.சி.கருப்பணன் -  அதிமுக     
2006 -  கே.வி.ராமநாதன் -  பாமக    
2011 -பி.ஜி.நாராயணன் -  அதிமுக 
2016 - கே.சி.கருப்பணன் - அதிமுக

பவானி சங்கமேஸ்வரர் கோயில் முகப்பு தோற்றம்
பவானி சங்கமேஸ்வரர் கோயில் முகப்பு தோற்றம்

2016 தேர்தல் விவரம்

கே.சி.கருப்பணன் (அதிமுக) -  85,748.
என்.சிவக்குமார் (திமுக) - 60,861.
வாக்கு வித்தியாசம் - 24,881.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கே.சி.கருப்பணனுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. தற்போது தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக அவர் பதவி வகிக்கிறார்.
 
கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்

பவானி, அம்மாபேட்டை பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் கிராமப்புறப் பகுதிகளில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் தார்ச் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பவானி - அந்தியூர், பவானி - சத்தியமங்கலம் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் பிரச்னைகள்

கைத்தறி ஜமுக்காள உற்பத்தித் தொழில் நசிவடைந்துள்ளது. சுற்றுச்சூழல் பிரச்னையால் சாயத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் நடவடிக்கை நீண்ட நாள்களாகவே நிலுவையில் உள்ளது. ஜமுக்காளத் தொழில்நுட்பக் கல்லூரியும் கோரிக்கையாகவே உள்ளது. புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படவில்லை. பவானியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுவட்டச் சாலை அமைக்கப்படவில்லை. கைத்தறித் தொழில் பாதுகாப்புக்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பவானிக்கு அரசு கலை, அறிவியல் கல்லூரி, பொறியியல், வேளாண்மைக் கல்லூரிகள் வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

அதிமுகவைப் பொருத்தவரை அமைச்சரின் தொகுதி என்பதால் கே.சி.கருப்பணனே மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதியின் அருகில் சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி உள்ளது. இத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் செம்மலை எம்.எல்.ஏவாக இருக்கிறார். இதே தொகுதியைச் சேர்ந்தவர்தான் பாமக தலைவர் ஜி.கே.மணி. இவரும் மேட்டூரில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் தேர்தலில் செம்மலை மீண்டும் மேட்டூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவது உறுதியானால் மேட்டூர் தொகுதியைச் சேர்ந்த அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுவதற்காக பவானி தொகுதியை அக்கட்சி கேட்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் தொகுதியில் வன்னியர் இன மக்கள் அதிக அளவில் இருப்பதை தனக்கு பலமாக அக்கட்சி கருதுகிறது.

அதேநேரம் திமுக கூட்டணியைப் பொருத்தவரை திமுகவே மீண்டும் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. கட்சியின் நகரச் செயலர் பா.சி.நாகராஜன், கே.பி.துரைராஜ் உள்ளிட்ட ஒன்றியச் செயலர்கள் பலரும் இந்தத் தொகுதியை கேட்டு வருகின்றனர். இந்தத் தொகுதியில் கடந்த 50 ஆண்டுகளில் திமுகவைச் சேர்ந்தவர் எம்எல்ஏ ஆனது இல்லை. திமுக கூட்டணியில் பாமக, தமாகா போன்ற கட்சிகள்தான் வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டவர் வெளியூரைச் சேர்ந்தவர் என்பதால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் இந்த முறை மீண்டும் பலம் வாய்ந்த ஒரு வேட்பாளரையே திமுக எதிர்கொள்ள உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com