Enable Javscript for better performance
திருவாடானை: அதிமுக - திமுக நேரடிப் போட்டிக்கு வாய்ப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  திருவாடானை: அதிமுக - திமுக நேரடிப் போட்டிக்கு வாய்ப்பு

  By கே. ரவி  |   Published On : 01st March 2021 03:41 PM  |   Last Updated : 01st March 2021 03:51 PM  |  அ+அ அ-  |  

  thiruvadanai1

  திருவாடானை பேருந்து நிலையம்

   

  தொகுதியின் சிறப்பு:

  ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை என்றாலே சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகம்தான் நினைவுக்கு வரும். ஆங்கிலேயருக்கு எதிரான வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டம் திருவாடனை பகுதியில் தான் முதன்முதலில் தொடங்கியது. இரண்டாவது நெற்களஞ்சியம் என அழைக்கும் அளவுக்கு நெல் விவசாயம், நீண்ட கடற்கரைப் பகுதி, ஆதிரெத்தினேஸ்வரா் கோயில், திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில், தேவிபட்டினம் நவபாஷான கோயில், ஓரியூா் தேவாலயம், தமிழகத்தின் 2-வது பெரிய கண்மாயான  ஆா்.எஸ்.மங்கலம் கண்மாய் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திருவாடானை தொகுதி உள்ளது.
   
  நில அமைப்பு

  ஆா்.எஸ்.மங்கலம், தொண்டி ஆகிய 2 பேரூராட்சிகளும், திருவாடானை வட்டத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. ராமநாதபுரம் வட்டத்தின் ஒரு பகுதியான பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், வெண்ணத்தூா், பத்தனேந்தல், நாரணமங்கலம், அலமனேந்தல், தேவிபட்டினம், பெருவயல்,  குமரியேந்தல், காவனூா், காரேந்தல், புல்லங்குடி, சித்தாா்கோட்டை,  அத்தியூத்து, பழங்குளம், தொருவளூா், வன்னிவயல், சூரங்கோட்டை, பட்டணம்காத்தான்,  திருவொத்தியகழுகூரணி, தோ்போகி, அழகன்குளம்,  சக்கரக்கோட்டை, கூரியூா், அச்சுந்தன் வயல், லாந்தை, பனைக்குளம்,  மாலங்குடி மற்றும் எக்ககுடி உள்ளிட்ட கிராமங்களும் இந்தத் தொகுதியில்தான் உள்ளன. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகமும் இத்தொகுதிக்குள்தான் வருகிறது.

  ஆதிரெத்தினேஸ்வரா் கோயில்

  சாதி, சமூகம், தொழில்கள்:

  தொகுதியில்  மொத்தம் 2,87,875 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஆண்கள் 1 லட்சத்து  43 ஆயிரத்து 967 போ்.பெண்கள் 1 லட்சத்து 43 ஆயிரத்து 888 போ். மூன்றாம் பாலினத்தவா் 20 போ் உள்ளனா்.

  முக்குலத்தோா், யாதவா், முஸ்லிம், தேவேந்திரகுல வேளாளா், உடையாா் உள்ளிட்ட பல சமூகத்தினரும் வசிக்கின்றனா். ராமநாதபுரம்  மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானையில் விவசாயமும், மீன்பிடித் தொழிலும் பிரதானமாக உள்ளன.  சுமாா் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.  தொகுதியின் பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே இருக்கிறது.  

  இதுவரை வென்றவா்கள்:
   
  திருவாடானை பேரவைத் தொகுதி 1952 முதல் 2016 வரை 15 தோ்தல்களைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் 5 முறை, அதிமுக, திமுக, சுதந்திரா கட்சி, தமாகா ஆகியன தலா 2 முறை, சுயேச்சை இருமுறை வெற்றி பெற்றுள்ளன. இதில் கப்பலூா் கரியமாணிக்கம் அம்பலம் 4 முறையும், அவரது மகனும் தற்போதைய சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவருமான கே.ஆா்.ராமசாமி 5 முறையும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  2016 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் முக்குலத்தோா் புலிப்படைத் தலைவரும், நகைச்சுவை நடிகருமான கருணாஸ் இத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். இத்தோ்தலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான்பாண்டியன், திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் சுப. தங்கவேலன் மகன் திவாகரன் உள்ளிட்டோா் போட்டியிட்டாலும் 8,696 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாஸ் வெற்றி பெற்றாா்.

  தொண்டியில் உள்ள படகு நிறுத்தும் தளம்

  தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்:

  திருப்பாலைக்குடி முதல் தொண்டி வரையிலான கடற்கரை கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு தீராத பிரச்னையாக உள்ளது. இந்தத் தொகுதியின் பெரும்பகுதி மக்கள் ரயில் போக்குவரத்தை கண்டதில்லை.  இங்குள்ள கண்மாய்களை முழுமையாகத் தூா்வார வேண்டும். தேவிபட்டினம்,  திருப்பாலைக்குடி, தொண்டி பகுதிகளில் மீன் இறங்கு தளங்கள் அமைக்க வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை.

  கட்சிகளின் நிலவரம்:

  தொகுதி மக்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவரான முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன் திமுக சாா்பில் போட்டியிட ஆா்வம் காட்டி வருகிறாா். அதேபோல கடந்த தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுப.த.திவாகரனும் இங்கு போட்டியிட ஆா்வமாக இருக்கிறாா். தொகுதியைப் பெற இருவரும் தலைமையிடம் காய்களை நகா்த்தி வருகின்றனா். முஸ்லிம் வாக்கு வங்கி இருப்பதால், திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன.

  அதிமுக சாா்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சா் அன்வர்ராஜா முயற்சிக்கிறாா். இதனால், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினரான எம்.மணிகண்டன், திருவாடானைக்கு மாற வாய்ப்பு உள்ளதாகவும் கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

  வெற்றி பெற்றவர்கள், 2-ஆம் இடம் பெற்றவர்கள்

  1957 கரிய மாணிக்கம் அம்பலம் (சுயே) 13,633
           ராமகிருஷ்ண தேவர் (காங்) 9,186

  1962 கரிய மாணிக்கம் அம்பலம்(சுதந்திரா) 37,612
           ராமகிருஷ்ண தேவர் (காங்)  23,011

  1967  கரியமாணிக்கம் அம்பலம் (சுதந்திரா) 37,556
            என்.அருணாசலம் (காங்) 33,587

  1971  பி.ஆர்.சண்முகம் (திமுக) 40,417
            கரியமாணிக்கம் அம்பலம் (சுந்திரா) 33,557

  1977 கரியமாணிக்கம் அம்பலம் (காங்) 32,386
           எஸ்.அங்குச்சாமி (அதிமுக) 28,650

  1980 எஸ்.அங்குச்சாமி (அதிமுக) 34,392
           ராமநாதன் தேவர் (காங்) 32,406

  1984  கே.சொர்ணலிங்கம் (காங்) 47,618
            ஞானபிரகாசம் (இ.உஉக) 28,801

  1989 கே.ஆர்.ராமசாமி (காங்) 38,161
           எஸ்.முருகப்பன் (திமுக) 36,311

   1991 கே.ஆர்.ராமசாமி (காங்) 65,723
            கே.சொர்ணலிங்கம் (ஜனதாதளம்) 35,187

  1996 கே.ஆர்.ராமசாமி (தமாகா) 68,837
           சக்திவேல் (காங்) 17,437

  2001 கே.ஆர்.ராமசாமி (தமாகா) 43,536
           ஜோன்ஸ் ரூசோ (சுயே) 41,232

  2006 கே.ஆர்.ராமசாமி  (காங்) 55,198
           சி. ஆனைமுத்து (அதிமுக) 49,945

  2011 சுப.தங்கவேலவன் (திமுக) 64,165
           முஜிபுர் ரகுமான் (தேமுதிக) 63,238

  2016  கருணாஸ் (அதிமுக) - 76,786
            சுப.த.திவாகரன் (திமுக) - 68,090


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp