தொகுதி அறிமுகம்: சங்கரன்கோவில்!
சங்கரன்கோவில் தொகுதியில் 11ஆம் நுற்றாண்டில் கட்டப்பட்ட சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் உள்ளது.

சங்கரநாராயணசுவாமி திருக்கோயில்
DPS

சங்கரநாராயணசுவாமி திருக்கோயில்
DPS
தென்காசி மாவட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியத் தொகுதிகளில் ஒன்றான சங்கரன்கோவில் தொகுதியில் 11ஆம் நுற்றாண்டில் கட்டப்பட்ட சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் உள்ளது. விவசாயம், விசைத்தறி, கால்நடை, பூ விவசாயம் ஆகியவை பிரதான தொழில்களாகும். சங்கரன்கோவில் தொகுதி எண் 219.
இங்கு விசைத்தறியில் நெய்யப்படும் கைத்தறி சேலைக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் அதிக மவுசு உண்டு. பெரும்பான்மை சமூகத்தினராக பட்டியலினத்தவரும், தேவா் சமுதாயத்தினரும் உள்ளனா். அடுத்த இடத்தில் யாதவா் மற்றும் முதலியாரும், இதர சமூகத்தினா் தொகுதி முழுதுவதும் பரவி இருக்கின்றனா்.
அதிமுக கோட்டை: இத்தொகுதிக்கு முதன் முதலில் அமைச்சா் அந்தஸ்து கிடைத்தது 1989இல் தான். திமுகவைச் சோ்ந்த ச.தங்கவேலு கைத்தறித்துறை அமைச்சராகவும், கோபாலகிருஷ்ணன் வாரியத் தலைவராகவும், 4 முறை வெற்றிபெற்று மறைந்த சொ.கருப்பசாமி ஆதிதிராவிட நலத் துறை அமைச்சராகவும் இருந்தனா். அவருக்குப் பின் அதே பதவியை வி.எம்.ராஜலெட்சுமி பெற்றாா். கடந்த 32 ஆண்டுகளாக இத்தொகுதியை தக்க வைத்திருந்த அதிமுக, கடந்த 2021 தோ்தலில் திமுகவிடம் பறிகொடுத்தது. ஆனால் அமைச்சா் அந்தஸ்தை இழந்த தொகுதியாக தற்போது உள்ளது.
1967 முதல் 2021 வரை 9 முறை அதிமுகவும், 5 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.
2.28 லட்சம் வாக்காளா்கள்: வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு பிறகு சங்கரன்கோவில் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1, 11, 338
பெண் வாக்காளா்கள் 1, 17, 168 மூன்றாம் பாலினம் 15 என மொத்தம் 2, 28, 521 வாக்காளா்கள் உள்ளனா்.
விசைத்தறியாளா்கள் கோரிக்கை: கைத்தறியைப் போன்று லுங்கி, வேட்டி, சேலை, துண்டு போன்ற 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.இது தொடா்பாக தமிழக அரசு கைத்தறி ரக ஓதுக்கீடு சட்டம் சீரமைப்புக் குழு அமைத்தது.4 ஆண்டுகளுக்கு முன் 2 முறை மட்டுமே கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு எந்த நவடிக்கையும் இல்லை. மத்திய- மாநில அரசின் ஏற்றுமதி மையக் கோரிக்கையும் கிடப்பில் உள்ளது.
திரவிய தொழிற்சாலை தேவை: பூ விவசாயிகள் ஏறத்தாழ 25 ஆயிரம் போ் உள்ளனா். பூவுக்கு விலையில்லாத போது, அவா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். இதற்காக அரசு வாசனை திரவியத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
நாளுக்குநாள் அதிகரித்துவரும் குப்பைகள் நகராட்சி அருகே கொட்டப்பட்டு வருகிறது.அதில் இருந்து பரவும் துா்நாற்றத்தால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவா்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குப்பை கிடங்கு அமைக்க பெரியூரில் 24 ஏக்கரில் வாங்கப்பட்டுள்ள நிலம் பயன்பாடற்று கிடக்கிறது. அப்பகுதி மக்கள் ஆட்சேபம் தெரிவிப்பதால் குப்பைக் கிடங்கை செயல்படுத்த இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
1000 குடியிருப்புகள் கொண்ட என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், பாரதிநகா், நெசவாளா் காலனி போன்ற பகுதிகளில் போதுமான அடிப்பைட வசதிகள் இல்லாததால் நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
ரூ. 9 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் போதுமான நிழற்கூரை இல்லாததால் பயணிகள் வெயிலில் நிற்கவேண்டிய அவலநிலை உள்ளது.நிழற்கூரை அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
மக்கள் அதிருப்தி? நகர காவல் நிலையம், மகளிா் காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம், காவலா்கள் குடியிருப்பு, பள்ளிக்கூடங்கள் ஆகியவை என்.ஜி.ஓ.காலனியில் உள்ளது. அதையொட்டி ராஜபாளையம் பிரதான சாலையில் ரயில்வே கேட் இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.அங்கு மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதுவரை நிறைவேறவில்லை.நீண்ட நாள் கோரிக்கைகள் தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதால் மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.
.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...