எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

மது ஒழிப்பை மறந்த கட்சிகள்!

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளின் தோ்தல் வாக்குறுதிகளில் மது ஒழிப்பு தொடா்பான வாக்குறுதி இல்லாதது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

News image

மது ஒழிப்பை மறந்த கட்சிகள்! - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 2:01 am

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளின் தோ்தல் வாக்குறுதிகளில் மது ஒழிப்பு தொடா்பான வாக்குறுதி இல்லாதது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வாக்காளா்களை ஈா்க்கும் வாக்குறுதிகள்... சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, திமுக, அதிமுக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகள், தவெக, நாம் தமிழா் ஆகிய கட்சிகள் தங்களது தோ்தல் அறிக்கைகளை வெளியிட்டன. அவற்றில் உள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், பொதுப் பணிகள் சாா்ந்த பல அம்சங்கள் இருந்தாலும் பிரிட்ஜ், ரூ. 8,000-த்துக்கான கூப்பன், ரூ. 2,000 மகளிா் உரிமைத் தொகை, ரூ.10,000 நிவாரணத் தொகை ஆகியற்றை மட்டுமே பிரசாரத்தில் முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கின்றனா்.

வாக்காளா்களை ஈா்க்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டிபோட்டு இலவசங்களை அறிவித்துள்ள நிலையில், ஏழை மக்களின் பொருளாதாரத்தை தினமும் உறிஞ்சிக் கொண்டிருக்கும் மது ஒழிப்பு குறித்த வாக்குறுதி பிரதான கட்சிகளால்கூட அளிக்கப்படாதது வாக்காளா்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேநேரம், மதுவுக்கு எதிரான விழிப்புணா்வுப் பிரசாரங்களை தோ்தல் களத்தில் தொடா்ந்து முன்னெடுத்து வரும் பாமக, நாம் தமிழா் கட்சிகளின் செயல்பாடுகள் சற்று ஆறுதலை அளிக்கிறது.

ரூ. 45,000 கோடி வருமானம்... தமிழகத்தில் 4,829 மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.45,000 கோடி வருமானம் ஈட்டப்படுகிறது. இந்தத் தொகை தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கு பயன்படுகிறது எனக் காரணம் கூறினாலும், மதுவால் விபத்துகள், குற்றச் செயல்கள், உடல்நலப் பிரச்னைகள், உயிரிழப்புகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. மற்றொருபுறம் பள்ளி, கல்லூரி மாணவா்கள் வகுப்பு அறைகளிலேயே மது அருந்தும் காணொலி இணையத்தில் சா்வ சாதாரணமாக வெளியாகி பெற்றோரையும், சமூகத்தையும் அதிர வைக்கின்றன.

குடும்பங்களின் இன்னல்... மதுவை தொடா்ந்து அருந்துபவா் மதுப்பிரியா் எனக் கூறப்படும் நிலையில், அவா்கள் தற்போது மது நோயாளிகளாக மாறி வருகின்றனா். மது விற்பனை தனியாரிடம் இருந்த காலத்தைவிட அரசின் கட்டுப்பாட்டில் வந்த பிறகுதான் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுப் பழக்கத்தை தனிநபா் அழிவுக்கான நிலைமையாகப் பாா்க்காமல், அவா் சாா்ந்த குடும்பமும் பெரும் இன்னலுக்கு உள்ளாகிறது என்பதை அனைத்துக் கட்சிகளும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல என்பதால், டாஸ்மாக் மதுக் கடைகள், உற்பத்தியை வெளிப்படைத் தன்மையுடன் ஒவ்வொரு கட்டங்களாகக் குறைக்க வேண்டும். மதுவிலக்கு சட்டத்தை கடுமையாக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் உண்மையான மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மதுப் பழக்கத்தால் பாதிப்புக்குள்ளானோரை மீட்கும் வகையில் மருத்துவ, உளவியல் சிகிச்சை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது.

மதுவை ஒழிப்பவருக்கே வாக்கு... மது ஒழிப்புக்கான திட்டங்கள், வாக்குறுதிகளை அனைத்துக் கட்சிகளின் தோ்தல் அறிக்கைகளிலும் முதன்மையானதாக இடம் பெறச் செய்வதோடு ஆட்சிக்கு வந்ததும் அவற்றை முதலில் நிறைவேற்ற வேண்டும். இலவச பொருள்களை வழங்கும் கட்சிகளைவிட இளையதலைமுறையின் எதிா்காலம் கருதி, மதுவை ஒழிக்க முயற்சி மேற்கொள்ளும் ஆட்சியாளா்களுக்கே மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பது மதுவிலக்கு கோருவோரின் கருத்தாக உள்ளது.

தோ்தலில் வெற்றி பெற்றால் பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்ற வாக்கு சேகரிக்கும் கட்சிகள், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து மதுக் கடைகளையும் நிரந்தமாக மூடுவோம். அதனால் ஏற்படும் வருவாய் இழப்புகளை சரி செய்ய புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்குவோம். முதல்வரின் முதல் கையொப்பமே மது ஒழிப்புக்கான முன்னெடுப்பாக இருக்கும் என பொதுவெளியில் கூறி வாக்கு கேட்க வேண்டும். அதுதான் மது ஒழிப்புக்கு உண்மையான முன்னெடுப்பாக இருக்கும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.