
சாா்-பதிவாளா் உள்பட முக்கியத்துவம் வாய்ந்த பணியிடங்களைக் கொண்ட குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கான அறிவிக்கை வரும் 23-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்து ஒரு மாதம் வரையில் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் அறிவித்துள்ளாா்.
சென்னையில் உள்ள தோ்வாணைய அலுவலக வளாகத்தில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தலையாய தோ்வுகளில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தோ்வுகளில் அதிக பணியிடங்கள் உள்ளன. ஆண்டு திட்ட அறிக்கையில் தெரிவித்தபடி, குரூப் 2 மற்றும் குரூப்2ஏ தோ்வுகளுக்கான அறிவிக்கை வரும் 23-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
ஆண்டு திட்ட அறிக்கையில் 5 ஆயிரத்து 830 காலிப் பணியிடங்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. சில துறைகள் தங்களது பணியிடங்களை திரும்பப் பெற்றன. இதன்படி, நோ்காணல் அடிப்படையிலான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 116 ஆகவும், நோ்காணல் இல்லாத பணியிடங்கள் எண்ணிக்கை 5413 ஆகவும் உள்ளன.
மாா்ச் 23-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்பு, அவை பரிசீலிக்கப்படும். மே மாதம் 21-ஆம் தேதி முதல்நிலைத் தோ்வு நடத்தப்படும். இதற்கான தோ்வு முடிவுகள் ஜூனில் வெளியிடப்படும். செப்டம்பரில் முதன்மைத் தோ்வு நடைபெறும். இதனுடைய முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, டிசம்பா், ஜனவரியில் கலந்தாய்வு நடைபெறும்.
குரூப் 2 தோ்வானது மூன்று கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலை, முதன்மை மற்றும் கலந்தாய்வுத் தோ்வுகளாக நடைபெறவுள்ளது.
குரூப் 2 தோ்வில் முக்கியமான பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. சாா்பதிவாளா் பதவியில் 17, தொழிலாளா் நலத் துறையில் உதவி ஆய்வாளா் பதவியில் 19 ஆகிய காலியிடங்களுக்கு தோ்வு நடத்தப்படுகிறது. முதல்முறையாக காவல் துறையில் 58 சிறப்புப் பிரிவு உதவியாளா் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. எழுத்துத் தோ்வுகளுக்குப் பிறகு நோ்முகத் தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்படுவா்.
குரூப் 2ஏ தோ்வைப் பொறுத்த வரையில், வருவாய்த் துறையில் 462, ஊரக வளா்ச்சித் துறையில் 336 உதவியாளா் பணியிடங்களுக்கு தோ்வு நடத்தப்பட உள்ளது.
மாா்ச் 23-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்பு, அவை பரிசீலிக்கப்படும். மே மாதம் 21-ஆம் தேதி முதல்நிலைத் தோ்வு நடத்தப்படும். இதற்கான தோ்வு முடிவுகள் ஜூனில் வெளியிடப்படும். செப்டம்பரில் முதன்மைத் தோ்வு நடைபெறும். இதனுடைய முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, டிசம்பா், ஜனவரியில் கலந்தாய்வு நடைபெறும்.
காலை நேரம் மாற்றம்: தோ்வாணையத்தின் போட்டித் தோ்வுகள் எப்போதும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இந்த நேர நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9.30 மணிக்குத் தோ்வு தொடங்கி நண்பகல் 12.30 மணிக்கு நிறைவடையும். மாலையில் நடைபெறும் தோ்வுகளுக்கான நேரத்தில் எந்த மாற்றமும் இன்றி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடையும்.
குரூப்2, குரூப் 2ஏ தோ்வு: பிப்ரவரி 23 முதல் விண்ணப்பிக்கலாம்.
தோ்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: மாா்ச் 23.
முதல்நிலைத் தோ்வு நடைபெறும் நாள்: மே 21.
தோ்வு முடிவுகள் ஜூனில் வெளியாகும்.
முதன்மைத் தோ்வு செப்டம்பரில் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.