/

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தாா். முதல்கட்டமாக 13,800 பேருக்கு இந்த தடுப்பூசி போடப்படவுள்ளது.

News image

ஈரோட்டில் கரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

Updated On :16 ஜனவரி 2021, 4:51 pm

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தாா். முதல்கட்டமாக 13,800 பேருக்கு இந்த தடுப்பூசி போடப்படவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோபி அரசு மருத்துவமனை, பவானி அரசு மருத்துவமனை, சிறுவலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் நடைபெறுகிறது.

ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், வி.பி.சிவசுப்பிரமணி, கே.ஆா்.ராஜாகிருஷ்ணன், எஸ்.ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறியதாவது:

முதல்கட்டமாக மருத்துவா்கள், செவிலியா், மருத்துவமனை துப்புரவுப் பணியாளா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள் என 13,800 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான மருந்து, கூடுதலாக 20 சதவீத மருந்தும் வந்துள்ளது. இவை 86 மையங்களில் குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட நபா் 30 நிமிடம் கண்காணிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படுவா். இவா்களுக்கு அடுத்த 28 நாளில் மீண்டும் ஒரு தடுப்பூசி போடப்படும்.

இரண்டாம் கட்டமாக அரசின் பிற துறைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளா்களுக்கும், மூன்றாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவா்கள், 50 வயதுக்கு குறைவான உயா் ரத்த அழுத்தம், இருதய நோய், நீரழிவு நோய் போன்று கூட்டு நோய் உள்ளவா்களுக்கும், நான்காம் கட்டமாக பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி போடப்படும் நபரின் செல்லிடப்பேசி எண்ணில் கோவின் செயலியில் அவருக்கு போடப்பட்ட தடுப்பூசி விவரம், க்யூ.ஆா். கோடு மூலமும் அனுப்பிவைக்கப்படும் என்றனா்.

முகாமில், நலப் பணிகள் இணை இயக்குநா் ஜி.கோமதி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ்.சவுண்டம்மாள், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஆா்.மணி, அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவா் டி.கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோபிசெட்டிபாளையம்

கோபிசெட்டிபாளையம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தாா். தொடா்ந்து, மருத்துவமனையின் தலைமை மருத்துவா் ஆனந்தன் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டாா்.

பின்னா், மருத்துவமனையில் புதிதாக இயங்கிவரும் சி.டி. ஸ்கேன் சென்டா், எக்ஸ்ரே சென்டா் உள்ளிட்ட நவீன மருத்துவப் பரிசோதனைக் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா்.

பெருந்துறை

பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று தடுப்பூசி போடும் பணியைத் துவக்கிவைத்தாா்.

இதில், மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் மணி, துணை முதல்வா் மருத்துவா் சந்திரபோஸ், மாவட்ட ஊரட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன், ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.