திருமணப் பதிவு எப்படி? முழு விவரம்!

திருமணப் பதிவு எப்படி? முழு விவரம்!

தமிழகத்தில் திருமணப் பதிவு செய்யும் வழிமுறைகள் பற்றி...
Published on

இந்தியாவில் திருமணப் பதிவு என்பது கட்டாயமில்லை என்றாலும், அனைத்து திருமணங்களையும் சட்டப்படி பதிவு செய்வதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகின்றது.

நாடு முழுவதும் திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டம், 1955 அல்லது சிறப்பு திருமணச் சட்டம், 1954 இன் கீழ் பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.

திருமணத்துக்கு பிறகு வெளிநாடு செல்பவர்களும், அரசின் திருமணச் சலுகைகள் போன்றவற்றை பெறுபவர்களும் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை ”தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் - 2009” மூலம் திருமணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த சட்டத்தின்படி, திருமணம் நடைபெறும் பகுதிக்குள்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று மணமக்கள் திருமணத்தை பதிவு செய்யும் நடைமுறை இருந்தது.

ஆனால், திருமணத்தை பதிவு செய்யும் நடைமுறையில் தொடர்ந்து தொய்வு இருந்ததால், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

அதன்படி, திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் இருவரில் ஒருவரின் முகவரிக்குள்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று விதிமுறைகளில் தளர்வு அளிக்கப்பட்டது.

பதிவு செய்வதற்கான விதிமுறைகள்

திருமணத்தை பதிவு செய்வதற்கு மணமகனுக்கு 21 வயதும் மணமகளுக்கு 18 வயதும் நிறைவு அடைந்திருப்பது கட்டாயமாகும்.

தமிழகத்தை பொறுத்தவரை மணமக்களின் மதத்தின் அடிப்படையில் ஹிந்து திருமணம், தமிழ்நாடு திருமணம் அல்லது சிறப்பு திருமணத்தின்கீழ் பதிவு செய்ய வேண்டும்.

திருமணப் பதிவு செய்யும் போது, மணமக்கள் இருவரும் வேறொருடன் உறவில் இருக்கக் கூடாது. ஏற்கெனவே திருமணமானவர்களாக இருப்பின் சட்டப்படி நீதிமன்றத்தை நாடி விவாகரத்து பெற்றிருக்க வேண்டும்.

திருமணம் நிறைவடைந்து 90 நாள்களுக்குள் பதிவு செய்தால் ரூ. 100 கட்டணமாகவும், 91 முதல் 150 நாள்களுக்குள் பதிவு செய்தால் ரூ. 150 கட்டணமாகவும் வசூலிக்கப்படும். 150 நாள்களுக்குமேல் பதிவு செய்தால் அபராதத் தொகை ரூ. 1,000 சேர்த்து மொத்தம் ரூ. 1,150 கட்டணமாக செலுத்த வேண்டும்.

யார், எந்த விதிமுறையின்கீழ் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்?

தமிழகத்தில் ஹிந்து திருமணம், தமிழ்நாடு திருமணம் - படிவம் 1 (Form 1), தமிழ்நாடு திருமணம் - படிவம் 1ஏ (Form 1A) மற்றும் சிறப்புத் திருமணம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின்கீழ் திருமணம் பதிவு செய்யப்படும்.

மணமக்கள் இருவரும் ஹிந்துவாக இருப்பின் ஹிந்து திருமணத்தின்கீழ் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ளலாம். மணமக்கள் இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவராக இருந்தால் தமிழ்நாடு திருமணம் - படிவம் 1 இன் கீழ் பதிவு செய்யலாம். தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்ய வேண்டும்.

ஹிந்து திருமணத்தின்கீழ் பதிவு செய்தால் சான்றிதழில் மணமக்களின் புகைப்படங்கள் இடம்பெறாது என்பதால் பெரும்பாலான ஹிந்துக்களும் தமிழ்நாடு திருமணம் - படிவம் 1 இன் கீழ் திருமணத்தை பதிவு செய்கின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மணமக்கள் தமிழ்நாடு திருமணம் - படிவம் 1ஏ இன் கீழ் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.

தனி / சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த மணமக்கள் பதிவு செய்ய வேண்டும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

வயது சான்று : மணமக்கள் இருவரின் பிறப்பு சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ், கடவுச் சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று.

முகவரி சான்று : மணமக்கள் இருவரின் ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, கடவுச் சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று.

திருமணம் நடைபெற்ற மண்டபம் / கோயில் / தேவாலயத்தின் ரசீது அல்லது திருமண அழைப்பிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

குறைந்தது இரண்டு சாட்சிகளின் ஆதார் அட்டை போன்ற அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

இணையத்தில் விண்ணப்பிப்பது எப்படி?

திருமணத்தை பதிவு செய்வது மிகவும் எளிமையான நடைமுறைதான். இடைத்தரகரின்றி நாமே இணையத்தில் விண்ணப்பித்து சார் பதிவாளர் முன்பு ஆஜராகி சான்றிதழை எளிமையாகப் பெற்றுக் கொள்ளலாம்.

https://tnreginet.gov.in என்ற வலைதளத்தில் சென்று பயனர் உள்நுழைவை (User Registration) பதிவு வேண்டும்.

பின்னர் வலைதளத்தின் மேல்பகுதியில் உள்ள பதிவு செய்தல் - திருமணப் பதிவை கிளிக் செய்து ஹிந்து திருமணம் அல்லது தமிழ்நாடு திருமணம் என்ற விருப்பத்தில் நுழைந்து விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

கணவரின் விவரங்கள், மனைவியின் விவரங்கள், நான்கு சாட்சிகளின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களைப் பூர்த்தி செய்து, கட்டணத்தையும் இணையவழியாகச் செலுத்தி ரசீதை பெற வேண்டும்.

அதன்பிறகு, மணமகன் அல்லது மணமகளின் முகவரிக்கு கீழ் வரும் சார் பதிவாளர் அலுவலகத்தை தேர்வு செய்து, தேதி, நேரம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு டோக்கன் பெற வேண்டும்.

அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் நகல், புகைப்படங்கள், பதிவு செய்யப்பட்ட நான்கு சாட்சிகளின் இருவருடன் குறிப்பிட்ட நேரத்தில் சார் பதிவாளர் முன்பு ஆஜராக வேண்டும். ஆவணங்கள் மற்றும் சாட்சிகளை சார் பதிவாளர் உறுதி செய்த பிறகு, மணமக்களை புகைப்படம் எடுத்து கைரேகைகள் பெறப்படும். ஓரிரு நாள்களில் சான்றிதழ் விநியோகிக்கப்படும்.

சிறப்புத் திருமணம்

மணமகனும் மணமகளும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.

இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்ய வேண்டுமானால், இரண்டு முறை சார் பதிவாளர் முன்னிலையில் சாட்சிகளுடன் ஆஜராக வேண்டும்.

முதலில் ஆன்லைனில் சிறப்பு திருமணத்தின்கீழ் நோட்டீஸ் வெளியிட வேண்டும். முன்பு தெரிவித்தை போன்று கணவரின் விவரங்கள், மனைவியின் விவரங்கள், மூன்று சாட்சிகளின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களைப் பூர்த்தி செய்து நோட்டீஸ் கட்டணமாக ரூ. 3-ஐ ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

அனைத்து ஆவணங்கள் மற்றும் நோட்டீஸ் விண்ணப்பத்தை 3 நகல்கள் எடுத்துக் கொண்டு சாட்சிகளுடன் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். இதற்கு டோக்கன் பதிவு செய்யத் தேவையில்லை.

சார் பதிவாளரின் சரிபார்ப்புக்கு பிறகு திருமண நோட்டீஸை மணமகன், மணமகள் ஆகிய இருவரின் முகவரிக்குள்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் 30 நாள்கள் ஒட்டி வைக்கப்படும்.

30 நாள்களுக்குள் மறுப்பு எதுவும் வரவில்லை என்றால், அதன்பிறகு மீண்டும் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டோக்கன் பெற வேண்டும்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் மூன்று சாட்சிகளை அழைத்துக் கொண்டு சார் பதிவாளர் முன்னிலையில் ஆஜராகி திருமணச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

நோட்டீஸ் வழங்கும்போது அழைத்துச் செல்லப்பட்ட மூன்று சாட்சிகளில் யாராவது ஒருவர் இரண்டாவது முறை வரமுடியவில்லை என்றால், உரிய ஆவணங்களை இணையத்தில் பதிவு செய்து சாட்சிகளை மாற்றிக் கொள்ளலாம்.

நோட்டீஸ் காலத்தில் திருமணத்துக்கு யாரேனும் ஆட்சேபணை தெரிவித்தால் சார் பதிவாளர் திருமண நோட்டீஸை ரத்து செய்துவிடுவார். மணமக்கள் திருமண வயதை அடையவில்லை, ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெறாதவர், சுயநினைவு இல்லாதவர் போன்ற ஆட்சேபணை மட்டுமே பரிசீலனை செய்யப்படும்.

விரைவில் ஆன்லைனில் திருமணப் பதிவு

விரைவில் ஆன்லைன் மூலமே திருமணத்தை பதிவு செய்யும் நடைமுறையை தமிழக அரசு கொண்டுவரவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, சார் பதிவாளர் அலுவலகத்தின் வலைதளத்தை அப்டேட் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவுக் கட்டணத்தை செலுத்திய பிறகு, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள், சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து ஆன்லைன் மூலமே சான்றிதழ்களை அரசு வழங்கவுள்ளது.

இருப்பினும், சிறப்புத் திருமணத்துக்கு இது பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பழைய முறைப்படி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் நடைமுறையையே பின்பற்ற வேண்டும்.

ஆன்லைனில் திருமணப் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வரும் பட்சத்தில், தமிழகத்தில் திருமணப் பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com