
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை(EPIC) என்றால் என்ன? அது வழங்கப்படுவதன் அவசியம்? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து முக்கிய விவரங்களும் இங்கே..
இந்தியாவில் பிறந்து 18 வயதைப் பூர்த்தி செய்து, வாக்களிக்கத் தகுதிபெற்ற அனைத்து நபர்களுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுவதுதான் வாக்காளர் அடையாள அட்டை. இந்த அட்டையின் முக்கிய நோக்கம் தேர்தல்களில் நாம் வாக்களிப்பதற்காகவும் தேர்தல் மோசடிகளைத் தடுப்பதற்காகவும் இந்திய அரசால் வழங்கப்படுவது.
இந்தியக் குடிமகனின் முக்கிய அடையாள அட்டைகளில் ஒன்றாகவும் இது பயன்படுகிறது. வாக்காளர் அட்டை இருந்தால் தான் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்றே வாக்காளர் அட்டையாகும்.
வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக ஆன்லைனில் எந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் வாக்காளர் சேவை https://voters.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று முதலில் ஒருவரது பெயர், கடவுச்சொல், மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு தான் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவோ, திருத்தம் செய்யவோ செய்ய முடியும்.
வாக்காளர் அட்டையில் இருக்கும் தகவல்கள்..
வாக்காளர் எண்
அட்டைதாரரின் புகைப்படம்
மாநில/தேசிய சின்னம்
பெயர்
தந்தை/கணவரின் பெயர்
பாலினம்
பிறந்த தேதி
குடியிருக்கும் முகவரி போன்ற விவரங்களோடு, வாக்காளர் அட்டையின் பின்புறத்தில் வாக்காளர் பதிவு அதிகாரியின் கையொப்பம் இருக்கும். வாக்காளர் பாகம் எண் மற்றும் தொகுதியும் வழங்கப்பட்டிருக்கும். மேலும் அட்டையின் அடிப்பகுதியில் புகார் எண் மற்றும் வாக்காளர் சேவைக்கான இணையதளமும் வழங்கப்பட்டிருக்கும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
வாக்காளர் சேவையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in/ சென்று Login என்பதைக் கிளிக் செய்யவும். புதிதாக விண்ணப்பிப்போர் Don't have account என்பதைக் க்ளிக் செய்து உங்களுடைய மொபைல் எண், மின்னஞ்சல், கேப்சாவை உள்ளிட்டு continue என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் எண்ணுக்கு வரும் OTP எண்ணைக் கொடுத்ததும், முதல் பெயர், கடைசி பெயர், கடவுச்சொல் இரண்டு முறை கொடுத்தால் உங்களுடைய மொபைல் எண்ணுக்கு 'verification code' என்ற குறுஞ்செய்தி வரும். அதனை இணையதளத்தில் உள்ளிடுவதன் மூலம் உங்களின் பெயர் பதிவாகிவிடும். ஏற்கனவே உங்களின் பெயர் பதிவு செய்திருந்தால் நேரடியாக Sign up கொடுத்து தேவையான விவரங்களை அறியலாம்.
புதிதாக விண்ணப்பிக்க படிவம் 6 என்பதைக் கிளிக் செய்து, அனைத்து சரியான விவரங்களையும் அளித்து படிவத்தை நிரப்பவும். உங்களது புகைப்படம் உள்படத் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி submit என்பதைக் கிளிக் செய்யவும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பத்து இலக்க எண் தரப்படும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தேர்தல் அதிகாரி உங்களுடைய வீட்டிற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
ஆன்லைனில் வாக்காளர் அட்டையின் விண்ணப்ப நிலையை (status) அறிவது..
https://voters.eci.gov.in/login என்ற இணையதளத்தில் Track Application Status என்பதைக் க்ளிக் செய்யவும். பதிவு செய்த மொபைல் எண், மின்னஞ்சல் அல்லது வாக்காளர் அடையாள எண்ணை உள்ளிடவும். உங்களின் கடவுச்சொல் மற்றும் மொபைல் எண்ணில் நீங்கள் பெறும் OTP-ஐ உள்ளிடவும். உள்ளே நுழைந்ததும் ‘Track Status’ என்பதைக் க்ளிக் செய்தால் உங்களின் வாக்காளர் அட்டை எந்த நிலையில் உள்ளதென்பதைத் தெரிந்துகொள்ளலாம்
நேரடியாக விண்ணப்பிப்பது எப்படி?
வாக்காளர் அட்டை பெறுவதற்கான படிவம் 6-ஐ இரண்டு நகல்களை நிரப்ப வேண்டும். இந்தப் படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தேர்தல் பதிவு அலுவலர்கள்/உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் கிடைக்கும். இந்தப் படிவம் இலவசமாக வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மற்றும் ஆவணங்களைச் சேர்த்து வாக்காளர் பதிவு அலுவலர்/உதவி வாக்காளர் பதிவு அலுவலரிடம் வழங்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலருக்குத் தபால் மூலமாகவும் அனுப்பலாம்.
வாக்காளர் அட்டையில் உள்ள EPIC எண் என்றால் என்ன?
EPIC (தேர்தல் புகைப்பட அடையாள அட்டை எண்) என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) வழங்கப்படும் வாக்காளர் அடையாள எண்ணாகும். இந்த எண் இருந்தால்தான் பல்வேறு தேர்தல்களில் வாக்களிக்க முடியும். EPIC எண்ணை வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படத்தின் மேலே காணலாம்.
ஆன்லைனில் வாக்காளர் அட்டையின் எண்ணை எவ்வாறு கண்டறியலாம்?
வாக்காளர் சேவையின் இணையதளத்திற்குச் சென்று வாக்காளர் எண்ணைத் தேடவும் (Search in Electoral Roll Search) என்பதைக் க்ளிக் செய்து மொழியைத் தேர்ந்தெடுக்கவும், அதில்
1. வாக்காளர் எண் கொண்டு தேடுதல்
2. தனிப்பட்ட விவரம் மூலம் தேடுதல்
3. மொபைல் எண்ணைக் கொண்டு தேடுதல்
என மூன்று முறைகளில் ஒருவரது வாக்காளர்(எபிக்) எண்ணைக் கண்டறியலாம். ஒவ்வொன்றுக்கும் இறுதியாக கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு search என்பதைக் கிளிக் செய்யவும். பெயர்களின் பட்டியல் காண்பிக்கப்படும், மேலும் அந்தப் பட்டியலிலிருந்து ஒருவரது எபிக் எண்ணைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்..
வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க / பெற
அடையாளச் சான்று
முகவரிச் சான்று
புகைப்படம் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்குக் குறைவாக இருக்கக்கூடாது. வாக்காளர் அட்டைப் பதிவு செய்ய விரும்பும் தொகுதியின் வாக்குச் சாவடிப் பகுதியில் வாழ்பவராக இருக்க வேண்டும்.
எபிக் எண்ணைப் பயன்படுத்தி வாக்காளர் அட்டையை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம்?
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/ இணையதளத்தில் 'e-EPIC download' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் வாக்காளர் எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும். மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிட்டு, வாக்காளர் அட்டையைப் பதிவிறக்க Download EPIC Online என்பதைக் க்ளிக் செய்யவும். உங்கள் வாக்காளர் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண் வேறுபட்டதாக இருந்தால், (KYC) செயல்முறையை முடித்து, பின்னர் வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மொபைல் எண் பதிவு செய்யாமல் e-EPIC அட்டையைப் பதிவிறக்கம் செய்ய முடியாது.
வாக்காளர் உதவி மைய செயலியில் வாக்காளர் அட்டையை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வாக்காளர் உதவி மைய செயலி (Voter Helpline App) பதிவிறக்கம் செய்யலாம். தனிப்பட்ட பெட்டகம்(Personal vault) என்பதைக் க்ளிக் செய்யவும் மொபைல் எண், கடவுச்சொல் மற்றும் OTP போன்ற தேவையான விவரங்களை உள்ளிட்டு உள்ளே நுழையவும். பிறகு உங்கள் e-EPIC அட்டை திரையில் தோன்றும். அதை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவையான படிவங்கள்..
படிவம் 6: புதிய வாக்காளர் அடையாள அட்டையை விண்ணப்பிக்க
படிவம் 6A: NRI வாக்காளர் தேர்தல் அட்டை விண்ணப்பம்
படிவம் 8: முகவரி, புகைப்படம், வயது, பெயர், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களில் மாற்றம்
படிவம் 8A: ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு முகவரி மாற்றம்
படிவம் 7: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல்
படிவம் 6B: வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க
படிவம் M: காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தில்லி, ஜம்மு அல்லது உதம்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய.
படிவம் 12C: தபால் வாக்குகளைப் பயன்படுத்தி வாக்களிக்க விரும்பும் காஷ்மீர் புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்கானது.
வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர் எவ்வாறு வாக்களிக்கலாம்?
வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் இதர காணங்களுக்காக வெளிநாடு சென்று அந்த நாட்டின் குடியுரிமை பெறாத இந்தியக் குடிமக்கள், அவர்களின் கடவுச்சீட்டில் குறிப்பிட்ட முகவரியில் இந்தியாவில் ஒரு வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள முடியும். இத்தகையவர் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் படிவம் 6ஏ என்பதைப் பதிவிறக்கம் செய்து தேவையான ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தப் படிவம் சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கட்டணம் செலுத்தாமல் கிடைக்கும். இந்தப் படிவத்தை அஞ்சல் துறை மூலம் அனுப்புவதாக இருந்தால் அனைத்து ஆவணங்களின் இரண்டு பிரதிகளை சுயசான்று அளிப்புடன் வாக்காளர் பதிவு அலுவலருக்கு அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பத்தில் பெறப்பட்டுள்ள வீட்டு முகவரிக்கு வாக்குச்சாவடி அலுவலர் நேரில் சென்று விசாரித்து ஆவணங்களைச் சரிபார்த்து உறுதிசெய்த பின் வெளிநாட்டு வாக்காளர்கள் என்ற தனிப்பிரிவில் இவர்களின் பெயர்கள் இடம்பெறும். வெளிநாடு வாக்காளருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது. வாக்குச்சாவடிக்குச் சென்று நேரில் வாக்களிக்கும் போது மூலக் கடவுச் சீட்டை ஆதாரமாகக் காண்பித்து வாக்களிக்க வேண்டும்.
வாக்காளர் அட்டை கிடைக்கவில்லை என்றால்..
வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு செயல்முறை முடிய சில மாதங்கள் எடுக்கும் என்பதால், விண்ணப்பத்திற்குப் பிறகு வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறவில்லை என்றால், உங்கள் ஆதார் எண்ணுடன் மாவட்ட தேர்தல் அதிகாரியைச் சென்று நேரில் விவரங்களைக் கேட்டு அறியலாம்.
வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை..
விண்ணப்பதார் குறைந்தபட்ச வயது 18-ஆக இருக்க வேண்டும். குற்றவியல் பதிவு இருக்கக்கூடாது. படிவம் 6-ஐ பூர்த்தி செய்து தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் அட்டைக்கான விண்ணப்பத்தை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலம் உங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறந்த தேதி, பெயர், முகவரி போன்ற விவரங்கள் சரியாக உள்ளிடப்பட வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு ஆவணங்களை மீண்டும் சரிபார்த்தல் வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம் செய்தல்..
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்குப் படிவம் - 6-ஐ பயன்படுத்த வேண்டும். படிவம் - 6 உடன் ஒரு வண்ணப் புகைப்படம் அல்லது கறுப்பு வெள்ளை புகைப்படத்தை இணைத்து விண்ணப்பத்தைத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ அல்லது வட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சிய அலுவலகத்திலோ மனுத் தாக்கல் செய்து கொள்ளலாம்.
மேலும், https://voterportal.eci.gov.in, www.elections.tn.gov.in என்ற இணையத்தள முகவரியிலும், Voter help line app என்ற செல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வேறு தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம், நீக்க வேண்டிய பெயர் ஏதேனும் இருந்தால் படிவம்-7-ஐ பயன்படுத்தி தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.
உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில் உள்ள வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறு ஏற்படும் பட்சத்தில் (எ.கா. பெயர், வயது, தந்தை பெயரில் தவறு ஏற்பட்டால்) தேவையான திருத்தங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம். தவறான பதிவின் திருத்தத்திற்கு படிவம்-8 ஐ பயன்படுத்தலாம். அடையாளச் சான்றாகப் பிறப்புச் சான்றிதழின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பதிவின் இடமாற்றத்திற்கான விண்ணப்பம் வேறு.
வாக்காளர் வேறு பகுதிக்கு அல்லது வேறு தொகுதிக்கு உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்காகப் படிவம் 8-ஏ பயன்படுத்த வேண்டும்.
ஆன்லைனில் வாக்காளர் அட்டையின் முகவரியை மாற்றுவது எப்படி?
வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள முகவரியை மாற்றிக்கொள்ளும் வசதி ஆன்லைனில் உள்ளது. இதன்மூலம் புதிதாக வீடு வாங்குபவர்கள், வாடகை வீட்டுக்குச் செல்பவர்கள் சுலபமாக தங்களது விவரங்களைப் புதுப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்குச் சென்று படிவம் 8-ஐ தேர்ந்தெடுக்கவும். அதில் பெயர், புதிய முகவரி, மாநிலம், தொகுதி போன்ற தேவைக்கேற்ப விவரங்களைத் துல்லியமாக நிரப்பவும். ஆதார் அட்டை விவரங்களைப் பதிவு செய்யவும். உங்களின் தற்போதைய முகவரியை உறுதிப்படுத்தும் வகையில் ஆவணத்தைப் பதிவேற்றவும், அத்துடன் (கேஸ் பில், வங்கி புத்தகம், ஆதார் அட்டை) அல்லது ஏதேனும் அதிகாரப்பூர்வ ஆவணத்தை இணைக்கவும்.
ஆவணங்களை நிரப்பிப் பதிவேற்றியவுடன், படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு ஒரு குறிப்பு எண் (reference number) வழங்கப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்தி ஒருவரது விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் கண்காணிக்கலாம். உங்கள் விண்ணப்பம் தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும், மாற்றப்பட்ட முகவரியுடன் கூடிய புதிய வாக்காளர் அடையான அட்டை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
ஆஃப்லைனில் வாக்காளர் அட்டையின் முகவரியை மாற்றுவது?
நேரடியாக வாக்குச்சாவடி நிலை அலுவலகத்துக்குச் சென்று அங்குப் படிவம் 8-ஐ பெற்று, படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பவும், அத்துடன் கேட்கப்பட்டுள்ள ஆவணத்தை இணைக்கவும், நிலை அலுவலர் சரிபார்ப்புக்குப் பின்னர் வாக்காளர் அட்டையைப் பெறலாம். நீங்கள் தற்போது வசிக்கும் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்ப்பது தொடர்பான அறிவிப்பையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றுவது..
நீங்கள் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து மற்றொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உங்கள் நிரந்தர வசிப்பிடத்தை மாற்றியிருந்தால், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள புதிய குடியிருப்பு முகவரியைப் புதுப்பிக்க வேண்டும். உங்கள் பழைய தொகுதியின் வாக்காளர் பட்டியலிலிருந்து புதிய தொகுதியின் வாக்காளர் பட்டியலுக்கு உங்கள் பெயரை மாற்ற வேண்டும். இல்லையெனில், நீங்கள் எந்தத் தொகுதியிலும் வாக்களிக்க முடியாது.
புதிய சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் முகவரியை மாற்றலாம். படிவம் 8ஏ -ஐப் பயன்படுத்தி, தேர்தல் அட்டையில் உங்கள் நிரந்தர முகவரியை மாற்ற விண்ணப்பிக்கலாம். வாக்காளரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள தேர்தல் அலுவலகத்திற்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது மின்சாரம், கேஸ் பில் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சான்று ஏதேனும் ஒன்றினை இணைக்க வேண்டும்.
வாக்காளர் அட்டையின் நகல் பெற விண்ணப்பிக்கும் முறை..
வாக்காளர் அடையாள அட்டை காணாமல் போனாலோ, அட்டை தொலைந்து போனாலோ, அட்டை தேய்மானம் இருந்தாலோ வாக்காளர் அட்டையின் நகலுக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலிருந்து நகல் வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவதற்கான EPIC-002 என்ற விண்ணப்பப் படிவத்தின் நகலைப் பதிவிறக்கம் செய்யவும். படிவத்தை நிரப்பி, படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி FIR நகல், முகவரிச் சான்று, அடையாளச் சான்று போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
படிவத்தை உங்கள் உள்ளூர் தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும், அதன்பிறகு உங்களுக்கு ஒரு குறிப்பு எண் வழங்கப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்தி மாநில தேர்தல் அலுவலக இணையதளத்தில் உங்களது விண்ணப்ப நிலையைக் சரிபார்க்கலாம். உங்கள் படிவத்தை சமர்ப்பித்தவுடன், அது தேர்தல் அலுவலகத்தால் சரிபார்க்கப்படும். சரிபார்ப்புக்குப் பிறகு, உங்களுக்குத் தகவல் அளிக்கப்படும், அதன்பிறகு தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று நகல் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்
நகல் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்
வாக்காளர் அட்டை தொலைந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட FIR (முதல் தகவல் அறிக்கை), EPIC-002 படிவம், பூர்த்தி செய்யப்பட்டுக் கையொப்பமிடப்பட்ட முகவரிச் சான்று, அடையாளச் சான்று, கடவுச்சீட்டு, புகைப்படம் ஆகியவையாகும்.
வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க தேவையான படிவங்கள்..
வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கத் தேவையான படிவங்களை https://www.eci.gov.in/download-forms, https://www.elections.tn.gov.in/Download_Forms.aspx ஆகிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைப்பதற்கு முக்கிய காரணம் ஒரு சிலர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருப்பார்கள். இதனால் போலி வாக்காளர் அடையாள அட்டையைத் தவிர்ப்பதற்காக வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறையை இந்திய அரசு கொண்டுவந்தது.
ஆன்லைன் மூலம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க https://voterportal.eci.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று ஏற்கனவே இந்த இணையதளத்தில் கணக்கு வைத்திருந்தால் பெயர், கடவுச்சொல், எபிக் எண் கொடுத்து Login செய்யவும். ஒருவேளை உங்களின் பெயர், எபிக் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால், புதிய கணக்கைப் பதிவு செய்யவும். பின்னர், படிவம் 6-பி என்பதை க்ளிக் செய்து உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும், பின்பு உங்களுடைய பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்து திருத்தம் செய்து Save செய்து Continue என்பதைக் கிளிக் செய்யவும்.
Declaration பக்கம் தோன்றும். அதில் தேதி, பெயர் ஆகியவை ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கும். Place என்ற இடத்தில் உங்கள் ஊரின் பெயரை உள்ளிட்டு Save செய்து Continue என்பதை கிளிக் செய்யவும். இறுதியாக Form 6B-இன் முழு படிவம் தோன்றும். அதில் அனைத்து தகவல்களும் நிரப்பப்பட்டிருக்கும். அதை நீங்கள் ஒருமுறை சரிபார்த்துவிட்டு Submit என்பதை க்ளிக் செய்யவும். வாக்காளர் பட்டியலில் படிவம்-6B-க்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளீர்கள் என்ற செய்தி தோன்றும். வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பதற்கான செயல்பாடுகள் முடிந்துவிட்டது.
வாக்காளர் அடையாள அட்டையில் பாகம் எண், தொகுதி பெயர் கண்டறிதல்..
புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவும், வாக்காளர் அட்டையில் பெயர், முகவரி போன்றவற்றில் மாற்றங்களைச் செய்யவும் இந்த பாகம் எண் தேவைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகுதியிலிருந்து வாக்காளர் அட்டையை ரத்து செய்யவும் இந்த பாகம் எண் தேவைப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள பாகம் எண்ணை சரிபார்க்க இரண்டு வழிகள் உள்ளன. உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது அண்டை வீட்டாரின் வாக்காளர் அட்டையைச் சரிபார்ப்பது. அதேபகுதியில் வசிப்பவர்களுக்குப் பாகம் எண் ஒரே மாதிரியாக வழங்கப்பட்டிருக்கும். உங்கள் அருகில் வசிக்கும் ஒருவரிடம் வாக்காளர் அட்டையைக் கேட்டு அட்டையின் பின்புறத்தைச் சரிபார்க்கவும். அட்டையின் பின்புறத்தில் பாகம் எண் மற்றும் மண்டலத்தின் பெயர் வழங்கப்பட்டிருக்கும்.
ஆன்லைனில் பாகம் எண், வாக்களிப்பு நிலையத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?
www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று Elections என்பதைக் க்ளிக் செய்து வாக்களிப்பு நிலையம் (Polling Station) என்பதைக் க்ளிக் செய்தால் அதில் கொடுக்கப்பட்ட பிடிஎப்-ஐ க்ளிக் செய்து வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி அமைந்துள்ள மையம் மற்றும் பாகத்தின் எண்ணைத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் https://electoralsearch.eci.gov.in/pollingstation என்ற இணையதளத்திற்குச் சென்று உங்கள் வாக்காளர் எண்ணைப் பதிவு செய்யும்பட்சத்தில் உங்கள் வாக்குச்சாவடி மையம், வாக்குச்சாவடி நிலை அதிகாரி, தேர்தல் பதிவு அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி பெயர் மற்றும் தொடர்பு எண்களையும் தெரிந்துகொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? எப்படிச் சரிபார்க்கலாம்..
வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் இருக்கிறதா என்பதனை அறிய https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
வாக்காளர் எண் அடிப்படையில், தகவல்கள் அடிப்படையில், மொபைல் எண் அடிப்படையில் என்று மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் ஒரு முறையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்கள் சரிப்பார்க்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க, திருத்தம் செய்யத் தேவையான அனைத்து தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் விவரங்கள் விடுபட்டிருந்தால் www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளலாம். வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களை அறியலாம்.
தகவல்கள் (source) - https://voters.eci.gov.in/