
வீடு கட்டுவது என்பது இன்று பலருக்கும் பெருங்கனவாகத்தான் இருக்கிறது. பெரும்பாலானோர் கடன்வாங்கிதான் அந்தக் கனவை நிறைவேற்றுகின்றனர். வங்கிகளும் வீடு வாங்குவதற்கு அல்லது வீடு கட்டுவதற்கு கடன்கள் வழங்குகின்றன.
வீட்டுக்கடன் பெறுவது எப்படி? தகுதிகள் என்ன? என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? கடன் பெறுவதற்கான முழு வழிமுறைகளைக் காணலாம்.
வீட்டுக் கடன் பெற தகுதி என்ன?
முதலில் இதற்கான விண்ணப்பத்தை நிரப்பிக்கொடுக்க வேண்டும். வங்கியின் இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கிக்குச் சென்று நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.
வீட்டுக்கடன் பெறுவதற்கு முன்னதாக, நீங்கள் கடன் பெறத் தகுதியானவரா எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.
வயது 18 முதல் 60 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்தது மாதம் ரூ. 10,000 வருமானம் இருக்க வேண்டும். மாத ஊதியம் பெறுபவராக அல்லது தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
சரிபார்ப்புகள்
மாத ஊதியம் பெறுவோர், அவர்களின் வயது, வேலை, வருமானம், மாதச் செலவுகள் என அனைத்துக் காரணிகளையும் ஆய்வு செய்து வங்கிக்கணக்கு வரவு- செலவு கணக்குகளையும் ஆய்வு செய்தபின்னர் உங்களுக்கு கடன் வழங்கும். உங்களுடைய வருமானத்தைப் பொருத்து கடன் தொகை இருக்கும்.
வருமானத்தைப் பொருத்து குறிப்பிட்ட தொகை உங்களுடைய குடும்பச் செலவுகளுக்கு இருக்குமாறு பார்த்து கடன் தொகையை கணக்கிடுவார்கள். இதற்கு கடைசி சில மாதங்கள் வங்கிக்கணக்கு விவரங்கள், மாத ஊதியத்திற்கான சான்றிதழ்களை அளிக்க வேண்டும்.
50,000 ரூபாய் மாத வருமானம் என்றால் வங்கிகள் அதிகபட்சமாக ரூ. 40 லட்சத்துக்கு கடன் வழங்கினால் நீங்கள் 30 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தோராயமாக ரூ. 30,000 (8.7% வட்டி) செலுத்த வேண்டியிருக்கும். மீதியுள்ள ரூ. 20,000 உங்களுடைய செலவுக்கு இருக்குமாறு வங்கிகள் கணக்கிட்டுக்கொள்ளும். ஒரு வீட்டில் கணவன் - மனைவி இருவரின் வருமானத்தை இணைத்துக் கணக்கிட்டும் வங்கிகள் கடன் வழங்கும்.
அடுத்து நீங்கள் வீடு கட்டப்போகும் இடத்தின் மதிப்பை வங்கியின் வழக்கறிஞர் ஆய்வு செய்வார். இடத்தின் பட்டா உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்று ஆய்வு செய்து வங்கியிடம் அறிக்கை கொடுப்பார். சட்டரீதியாகவும் சொத்து ஆவணங்களில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என வழக்கறிஞர் பரிசோதிப்பார்.
இவையனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் வங்கிகள் உங்களுக்கு கடன் வழங்க முன்வரும்.
வீட்டுக்கடன் தவணை முறையில்...
அடுத்து வங்கிகள் கடன் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை வழங்கும். கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்கான கட்டணம், முத்திரை வரி கட்டணம், நிர்வாகக் கட்டணம் உள்பட அனைத்துக் கட்டணத்தையும் நீங்களே ஏற்க வேண்டும். அல்லது இந்தக் கட்டணங்களையும் உங்கள் கடன் தொகையிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.
இந்த ஒப்பந்தத்தில் நீங்கள் பெறும் கடன் தொகை, அதற்கான வட்டி, எவ்வளவு மாதத் தவணை (இஎம்ஐ), எவ்வளவு ஆண்டுகள் கடன் செலுத்த வேண்டும் போன்ற விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.
இவையெல்லாம் முடிந்தபிறகு உங்களுக்கான வங்கிக்கடன் வழங்கப்படும். 3 அல்லது 4 தவணைகளாக கடன் வழங்கப்படும். ஒவ்வொரு தவணைக்கு முன்னதாகவும் வீடு கட்டுமான நிலை குறித்து பொறியாளரின் அறிக்கையை வங்கிகளுக்கு வழங்க வேண்டும்.
புதிதாக இடம் வாங்கி வீடு கட்டுவது, உங்களுக்கு ஏற்கெனவே சொந்தமான இடத்தில் வீடு கட்டுவது, கட்டிய வீட்டை வாங்குவது என இதில் பல வகைகள் உள்ளன.
இதுவே கட்டிய வீட்டை வாங்கும்போது ஒரு கட்டட பொறியாளர் அதனை ஆய்வு செய்து மதிப்பைக் கணக்கிட்டு வங்கிக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதனடிப்படையில் உங்களுக்கு கடன் வழங்கப்படும்.
கடன் முடியும்வரை வீடு அந்த வங்கியின் பெயரில் இருக்கும். கடன் முடிந்தபிறகே உங்களுடைய பெயருக்கு வீடு மாற்றி வழங்கப்படும்.
ஆவணங்கள்
வயதுச் சான்றிதழ்
அடையாள அட்டைக்கு பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் எதை வேண்டுமானாலும் அளிக்கலாம்.
அதேபோல முகவரி சரிபார்ப்புக்கும் ஏதேனும் ஒரு அடையாள அட்டை அளிக்க வேண்டும்.
நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் கடிதம் அல்லது பணிக்கான சான்றிதழ், கடைசி 3 மாதங்கள் ஊதிய அறிக்கை, இடத்திற்கான சொத்து தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
தினக்கூலி தொழிலாளர்கள்
மாத ஊதியம் பெறாத தினக்கூலி போன்ற வேலைகளைச் செய்யும் ஒரு தனி நபர் ரூ. 10 லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக அவர்கள் வருமானச் சான்றிதழை அளிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வீட்டுக் கடன் பெற சில அரசின் திட்டங்களும் உள்ளன. வருமானச் சான்றிதழ் சரியாக இருக்கும்பட்சத்தில் வங்கிகள் குறிப்பிட்ட தொகையை மாதத் தவணை முறையில் கடனாக வழங்கும்.
இறுதியாக...
விண்ணப்பிக்க நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என இரண்டிலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனிலேயே தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யும்போது வங்கிகள் சரிபார்த்த பின்னர் உங்களுக்கு கடன் வழங்குவதை உறுதி செய்யும்.
வங்கிகளைப் பொருத்து வட்டி விகிதம், இஎம்ஐ செலுத்தும் முறைகள், விதிமுறைகள் மாறுபடும் என்பதால் உங்கள் வசதிக்கேற்ப வங்கிகளை தேர்வு செய்யலாம். இதற்காக சில வங்கிகளின் விதிமுறைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதும் அவசியம்.
அதேபோல உங்களுடைய வருமானம், எவ்வளவு தொகை கடனாக வாங்கப்போகிறீர்கள், எத்தனை ஆண்டுகளுக்கு திருப்பிச் செலுத்தப்போகிறீர்கள் உள்ளிட்டவற்றை கணக்கிட Home Loan EMI Calculator என்ற பெயரில் பல்வேறு இணையதளங்கள் உள்ளன. இதில் தோராயமாக கடன் பெறுவது, தவணை, வட்டி என அனைத்தையும் கணக்கிட முடியும். அதன்பின்னர் வங்கியை அணுகினால் எளிதாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.