நெட் பேங்கிங்
நெட் பேங்கிங்DNS

நெட் பேங்கிங் விண்ணப்பிப்பது எப்படி?

வங்கிக் கணக்கு வைத்திருப்போர் நெட் பேங்கிங், ஆன்லைன் பேங்கிங் அல்லது இன்டர்நெட் பேங்கிங் விண்ணப்பிக்கும் முறை குறித்து...
Published on

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர், இணையம் மூலம் தங்கள் கணக்கைக் அணுகி பல்வேறு பரிவர்த்தனைகளைச் செய்யக்கூடிய ஒரு வசதியே நெட் பேங்கிங் (இணையவழி வங்கிச் சேவை) ஆகும். இது இன்டர்நெட் பேங்கிங் அல்லது ஆன்லைன் பேங்கிங் எனவும் அழைக்கப்படுகிறது.

இதன்மூலம் பல்வேறு வங்கிச் சேவையைப் பெற வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளைகளுக்கு வாடிக்கையாளர்கள் நேரடியாகச் செல்ல வேண்டியதில்லை.

நெட் பேங்கிங் என்றால் வெறும் பணப்பரிவர்த்தனை மட்டுமல்ல, அதனைத் தவிர்த்து, இன்ன பிற வசதிகளும் உள்ளன.

அதாவது, வங்கிக் கணக்கு மேலாண்மை, பணம் செலுத்த வேண்டியவர்களின் வங்கிக் கணக்கை சேர்த்தல், நீக்குதல், வைப்புத்தொகை அல்லது முதலீடு போன்றவற்றை மேற்கொள்ள, கடன் அட்டை சேவைகள், செல்போன் - டிடிஎச் ரீசார்ஜ், இணையவழி வரி செலுத்துதல் போன்றவற்றுக்கும் நெட் பேங்கிங் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அனைத்து வங்கி நிறுவனங்களும் நெட் பேங்கிங் வசதியை வழங்கி வருகின்றன.

நெட் பேங்கிங் விண்ணப்பிப்பது எப்படி?

  • உங்கள் வங்கியின் இணையதளத்திற்குச் செல்லவும்.

  • நெட் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் அல்லது ஆன்லைன் பேங்கிங் பக்கத்திற்குச் செல்லவும்.

  • பதிவு செய்வதற்கான வழிமுறைகளை படித்துப் பின்பற்றவும்.

  • தனிநபர் கணக்கா? அல்லது கார்ப்பரேட் கணக்கா? என்பதை குறிப்பிடவும். (தனிப்பட்ட பயன்பாட்டிற்கு என்றால் தனிநபர் கணக்கு, நிறுவனத்துக்கு என்றால் கார்ப்பரேட் கணக்கு)

  • உங்கள் வங்கிக் கணக்கு எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை உள்ளிடவும்.

  • உங்கள் கடவுச்சொல்லை (password) உருவாக்கவும்.

  • இந்த விண்ணப்பத்தை உங்கள் வங்கிக் கிளை பரிசீலனை செய்த பிறகு நெட் பேங்கிங் பயன்பாட்டிற்கான அனுமதி நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

  • உங்கள் வங்கியில் மொபைல் பேங்கிங் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து உள்நுழையலாம் அல்லது இணையப் பக்கத்தில் இருந்தும் நெட் பேங்கிங்கிற்குள் நுழையலாம்.

நினைவில் கொள்ள வேண்டியவை

  • நெட் பேங்கிங்கில் நாம் உருவாக்கும் கடவுச் சொற்கள் மிகவும் முக்கியமானது. அதாவது B மற்றும் b என இரண்டுக்குமே வித்தியாசம் உண்டு.

  • இதேபோன்று பரிவர்த்தனையை உறுதிப்படுத்தும் கடவுச் சொல்லை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இது நெட் பேங்கிங்கில் உள் நுழைவதற்கான கடவுச் சொல் அல்ல; பணத்தை அனுப்புவதற்கு முன்பு ஒப்புதலுக்காக கேட்கப்படும் கடவுச் சொல். இரண்டுமே வெவ்வேறானவை.

  • பரிவர்த்தனைகளைச் செய்யும்போது, உங்கள் வங்கிக் கணக்குக்கு வரும் குறுஞ்செய்திகளை கவனமாக சரிபார்க்கவும்.

நெட் பேங்கிங் பயன்கள்

  • எங்கிருந்தும், எந்த நேரத்திலும் உங்கள் வங்கிக் கணக்கை அணுகலாம்

  • பரிவர்த்தனைகளை விரைவாகவும், எளிதாகவும் செய்யலாம்

  • காகிதமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்

  • பரிவர்த்தனைகளை கண்காணிக்கலாம்

ஒரு சில வங்கிகளில், நேரடியாக வங்கிக் கிளைக்குச் சென்று நெட் பேங்கிங் வசதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் அனைத்துத் தகவல்களும் தெரிவிக்கப்பட வேண்டும். பிறகு, அது செயல்பாட்டுக்கு வந்ததும் குறுந்தகவல் மூலம் வங்கி வாடிக்கையாளருக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

இது வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com