
25.8.1976: கட்சிகளுக்கு கம்பெனிகள் பணம் தர தடை நீக்கம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

25.8.1976 - Dinamani
புது டில்லி, ஆக. 24 - அரசியல் கட்சிகளுக்கு அரசு அல்லாத கம்பெனிகள் நன்கொடை வழங்குவதற்கு உள்ள தடை நீக்கப்படுகிறது.
லோக் சபையில் இன்று சட்ட மந்திரி கோகலே கம்பெனிகள் (திருத்த) மசோதாவை தாக்கல் செய்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் தன் சராசரி லாபத்தில் 5 சதவகிதம் வரை அல்லது ரூ. 50,000 வரை எது அதிகமோ அதை அரசியல் பணிகளுக்காக அரசியல் கட்சிகள் அல்லது தனி நபர் அல்லது ஸ்தாபனத்துக்கு அரசு அல்லாத கம்பெனிகள் நன்கொடை வழங்குவதற்கு வகை செய்யும் கம்பெனிகள் சட்டத்தில் ஷரத்து சேர்க்கப்படுகிறது.
மசோதாவின நோக்கங்கள், காரணங்கள் பற்றிய அறிக்கையில் விரும்பிய பலனை தடை அளிக்கவில்லை என்பதை அனுபவம் காட்டியதாக மந்திரி கூறினார்: ஆகவே அரசு சார்பற்ற கம்பெனிகள் சம்பந்தமாகத் தடையை நீக்க உத்தேசிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
அறப்பணிகளுக்கு கம்பெனிகளின் நன்கொடை வரம்பை உயர்த்தவும் மசோதா வகை செய்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரி நிகர லாபத்தில் 5 சதவிகிதம் வரை அல்லது ரூ. 25,000 வரை எது அதிகமோ அதை அறப்பணிகளுக்கு கம்பெனி நன்கொடை வழங்க கம்பெனி சட்டத்தின் 293 வது ஷரத்து அதிகாரமளிக்கிறது. அந்த வரம்பு ரூ 50,000க்கு உயர்த்தப்படுகிறது. ...
கேரளக் கடலில் மீன் பிடிக்கப் போன 24 பேர் மூழ்கி மரணம்?
ஆலப்புழை (கேரளா) ஆக. 24 - நேற்று ஆலப்புழைக் கரையிலிருந்து 8 நாட்டுப் படகுகளில் கடலில் மீன் பிடிப்பதற்காகச் சென்ற 40 மீனவர்களில் 23 பேர் இன்னமும் காணப்படவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்க வேண்டும் என்று அஞ்சப்படுகிறது.
மற்றும் 17 மீனவர்கள் நீந்தி பத்திரமாகக் கரை சேர்ந்தனர் அல்லது அப்பகுதியில் சென்று கொண்டிருந்த இயந்திர மீன் படகுகளால் மீட்கப்பட்டனர் என்று ஆலப்புழைத் துறைமுக அதிகாரி கூறினார். ஒரு படகு கரை சேர்ந்தது.
காணாமல் போன 23 மீனவர்களையும் அவர்களுடைய படகுகளையும் கண்டு பிடிப்பதற்காக கடற்படைக்கப்பல், ஹெலிகாப்டர் ஆகியவற்றின் உதவியுடன் சிவில் அதிகாரிகள் இன்று பகல் பூராவும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதற்கிடையில் நேற்று ஆலப்புழையிலிருந்து 45 கிலோ மீட்டரில் உள்ள அரட்டுப் புழை கிராமத்திலிருந்து ஒரு படகில் சென்ற 6 மீனவர்களில் 5 பேர் திரும்பி விட்டனர். ஒருவர் இன்னமும் காணவில்லை.
Summary
25.8.1976: Ban on corporate donations to political parties lifted.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



