

சென்னை, ஜன. 9 - ‘இந்தியாவில் ஒழுங்கீனம் நிலவுகிற இரண்டே மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று’ என பிரதமர் இந்திரா காந்தி கூறியிருப்பதைப் பற்றிய சர்ச்சையில் இறங்க தாம் விரும்பவில்லை என்று முதன் மந்திரி திரு. கருணாநிதி இன்று நிருபர்களிடம் இங்கு கூறினார்.
சில எதிர்க் கட்சி பத்திரிகைகள் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டதைப் பற்றி கேட்டதற்கு ‘முரசொலி’, ‘நீட்டோலை’ ஆகிய தி.மு.க. பத்திரிகைகள்கூட பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. ‘நீட்டோலை’யின் பிரதிகள் கைப்பற்றப்பட்டது மட்டுமின்றி கடுமையாக எழுதியதற்காக அதன் ஆசிரியரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தி.மு.க. கட்சியிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார். இப்பொழுதுகூட தமிழ்நாட்டில் சில எதிர்க்கட்சி பத்திரிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைப் பற்றி அவதூறான, திரிக்கப்பட்ட, தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவை இவ்வாறு செய்வது அவசர நிலைமை அமலுக்கு விரோதமானதே. எதிர்க்கட்சிக் காரர்கள் பிரசங்க மேடைகளில் மாநில மந்திரிகளைப் பற்றி மனம் போனபடி கீழ்த்தரமான முறையில் தாக்கிப் பேசி வருகிறார்கள். இவையெல்லாம் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படுகின்றன” என்றார் திரு. கருணாநிதி.
சென்ற முறை தாம் பிரதமரை சந்தித்த போது சில பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க நேரிட்டதைப் பற்றி பிரதமரிடம் விளக்கியதாகக் கூறினார். மீண்டும் ஜனவரி 13 (ஆம் தேதி) சென்னைக்கு வரும் பிரதமரை சந்திக்கும்போது இதுபற்றி அவர் பேசுவாரா என்று கேட்டதற்கு, “முடிந்த வரையில் உண்மையை எடுத்துரைக்க எங்களுக்குள்ள உரிமையையும் சலுகையையும் பயன்படுத்துவோம்” என்றார்.
தொழிலாளர் மந்திரிகள் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக டில்லிக்குச் சென்றிருக்கும் மாநில மந்திரி திரு. ராஜாராம் பிரதமரைச் சந்திக்க நேரிடலாம் என்றும், இதுபற்றி தமக்கு தெரியாது என்றும் திரு. கருணாநிதி சொன்னார்.
புதுடில்லி, ஜன. 8 - ரூபாயின் வாங்கும் சக்தி மிக மெதுவாக உயர ஆரம்பித்துள்ளது. கடந்த 1974 அக்டோபர் மாதத்தில் ரூபாயின் வாங்கும் சக்தி சுமார் 24 பைசாவாகக் குறைந்தது. பிறகு சற்று லேசாக உயர் ஆரம்பித்து கடந்த மார்ச் மாதத்தில் மறுபடி கீழே விழுந்தது. எனினும் கடந்த ஜூலைக்குப் பிறகு ரூபாயின் வாங்கும் சக்தி சிறிது சிறிதாக உயர்ந்து 1975 நவம்பர் வாக்கில் 26 பைசாவாக உயர்ந்தது.
வேறுவிதமாகச் சொல்வதானால் 1949 நிலவரத்தை அடிப்படை ஆண்டாகக் கொண்ட உபயோகிப்பாளர் விலைவாசிப் புள்ளி படிப்படியாகக் குறைந்து வருகிறது. மொத்த விலைவாசி குறியீட்டு எண்ணும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஓராண்டில் இது 6 சதவிகிதம் குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.