/

4.7.1976: தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு - 40 பேரை போலீஸார் பிடித்துச் சென்றனர்

தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் முன்னாள் எம்பி எஸ். எஸ். ராஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி...

News image

4.7.1976 - Dinamani

Updated On :4 ஜூலை 2026, 4:48 am IST

சென்னை. ஜூலை. 3- இன்று சென்னையில் நடைபெற்ற தி. மு.க செயற்குழு கூட்டத்தில் ராஜ்யசபை முன்னாள் தி.மு க. உறுப்பினர் எஸ். எஸ். ராஜேந்திரன் தாக்கப்பட்டார்.

இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்திற்குப் பிறகு தென் பகுதி சட்டம், ஒழுங்கு பராமரிப்பு துணை கமிஷனர் தேவாரம், மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்ற "அன்பகத்திற்கு" வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தார்கள். ராஜேந்திரன் தாக்குதல் சம்பந்தமாக செயற்குழு கூட்டம் நடைபெற்ற தி.மு.கழக கட்டிட காம்பவுண்டில் இருந்த சுமார் நாற்பது பேர்களை விசாரணைக்காக போலீசார் பிடித்துக் கொண்டு போனார்கள். தன்னைத் தாக்கி அடித்தவர்கள் யார் என்று ராஜேந்திரன் அடையாளம் காட்டிய பிறகு மற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று பிற்பகலில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டு நாள் செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள கழக அலுவலகமான அன்பகத்தில் கழகத் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் தி.மு.க. அமைச்சரவை நீக்கப்பட்டு ராஷ்டிரபதி ஆட்சி அமல் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதலாவது செயற்குழு கூட்டம் இது.

செயற்குழு உறுப்பினர்கள் மொத்தம் அறுபதுபேரில் 28 பேர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். தூத்துக்குடி எம். எஸ். சிவசாமி (எம். பி.), குடிசை மாற்றுவாரியத் தலைவராக இருந்த முன்னாள் எம். எல். ஏ. அரங்கண்ணல் ஆகிய இருவரும் செயற்குழுவுக்கு வரவில்லை என்று கருணாநிதி நிருபர்களிடம் தெரிவித்தார். ...

ரயில்வேயில் 3-ம் நிலை, 4-ம் நிலை ஊழியர் பிரிவுகளை திருத்தியமைக்க முடிவு

சூரத், ஜூலை. 3 - ரயில்வே இலாகாவில் மூன்றாம் நிலை, நான்காம் நிலை ஊழியர் பிரிவுகளை திருத்தியமைக்க ரயில்வே போர்டு முடிவு செய்திருக்கிறது.

மொத்தம் 3800 பதவிகள் நிலை உயர்வு செய்யப்படுகின்றன.

நிலை உயர்வு செய்யப்படுகின்ற பதவிகளைப் பூர்த்தி செய்வது சம்பந்தமாக உள்ள விரிவான நடைமுறையைப் பின்பற்றி அருகதையுள்ள நபர்கள் மூலம் அவை பூர்த்தி செய்யப்படுகின்ற தேதியிலிருந்துதான் நிலை உயர்வின் பயன் கிடைக்கும்.

நிலை உயர்வு ஏற்பாட்டின் கீழ் அங்கீகாரம் அளிக்கப்படுகின்ற உயர்நிலைப் பதவிகள் (ஹையர் கிரேடு பதவிகள்) நீங்கலாக வேறு உயர்நிலைப் பதவிகள் எவையும் ஏற்படுத்தப்படாது என்றும், மூன்றாண்டுகளுக்கு இந்த விவகாரம் பற்றி காலவாரிப் பரிசீலனை செய்யப்படக் கூடாது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

உயர்நிலைப் பதவிகளின் தேவைகளை நிர்வாகத்தினர் சமாளிக்க வகை செய்ய, நிலை உயர்வு செய்யப்படும் பதவிகளில் 15 சதவிகிதத்தை நிர்ணயமின்றி வைக்க வேண்டும் என்றும், இவற்றை அவசியமான சந்தர்ப்பங்களில் ஊழியர் மறு அபிவிருத்திக்குப் பயன்படுத்தலாம் என்றும் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Summary

Sensation at the DMK Executive Committee meeting – Police detained 40 people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.