16.11.1976: அரசு ஊழியர் நியமன கொள்கை பற்றி பிரதமர்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

16.11.1976 - Dinamani
புதுடில்லி, நவ 15 - கிராமப் பகுதிகளுக்கு சென்று அவற்றை அபிவிருத்தி செய்யக் கூடியவர்களுக்கு மற்றவர்களை விடச் சிறந்த வாய்ப்பு தரும் விதத்தில், அரசாங்க உத்தியோகங்களுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கொள்கை கிராமப்புறங்களுடன் தொடர்பை மையமாகக் கொண்டதாக ஆக வேண்டும் என்று பிரதமர் இந்திராகாந்தி இன்று கூறினார்.
மத்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன்கள் ஆகியவற்றின் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்ட மகாநாட்டை பிரதமர் துவக்கி வைத்துப் பேசினார். அரசாங்க சேவைகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதற்கு அளவுகோல் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றிய தமது கருத்தை பிரதமர் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உரிய தகுதிகள் உடையவர்களாக மட்டுமின்றி, மக்களின் விருப்பங்கள், அபிலாஷைகளுக்கு பொறுப்புள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
"செல்வாக்கை யொட்டியே அரசாங்க வேலைகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற கருத்து மக்கள் மனத்தில் பரவலாக உள்ளது. இதைத் தவிர்க்க நாம் முயல வேண்டும். செல்வாக்கினால் காரியம் நடக்காது என்று மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் சத்தி, அனுபவம் முதலியவற்றினால் தான் வேலைகள் கிடைக்கும் என்ற கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார். ...
தூக்கு கயிற்றிலிருந்து தப்பிய மூதாட்டியின் புது வாழ்வு!
கோவை, நவ 14 - கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பூவாத்தாள் (வயது50) தூக்கு கயிற்றிலிருந்து விடுதலை பெற்று விறகு கடை வைத்து, புது வாழ்வு பெற்றுள்ளார்! கோயம்புத்தூர் போலீஸாரும் ஸ்டேட் பாங்கும் இவருக்கு உதவியுள்ளது.
குடும்பச் சண்டையில் மருதக்காளை கொலை செய்ததாகப் பூவாத்தாளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர் கவர்னருக்கு கருணை மனு அனுப்பவே, மரண தண்டனை 20 வருட ஆயுள் தண்டனையாக மாறியது.
சிறையில் நன்கு நடந்து கொண்டதால், இவரின் சிறை தண்டணையில் 7 வருடங்களை சிறை அதிகாரிகள் குறைத்தனர். சில காலத்துக்கு முன்பு இவர் விடுதலையாகி வெளியே வந்ததும், சொந்த கிராமத்துக்கு செல்லாது, நகர சேரி ஒன்றிலேயே தங்கினார். உதவிக்கு உறவினர் யாரும் இல்லாத நிலையில் வாழ்க்கை நடத்த கஷ்டப்பட்ட இவர் சிறிய விறகு கடை ஒன்று துவக்கினார். இந்த விறகு கடையை நடத்த பண உதவி தேவைப்பட்டது. கோயம்புத்தூர் போலிஸாரின் முயற்சியின் பேரில் ஸ்டேட் பாங்கு கிளை இவருக்கு ரூ.1000 கடனுதவியது.
Summary
16.11.1976: The Prime Minister on the policy for the appointment of government employees
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


