30.10.1976: அரசியல் சாஸனத்தில் கடமைகள் - லோகசபையில் ஒருமனதாக ஏற்பு
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

30.10.1976 - Dinamani
புது டில்லி, அக். 29 - அடிப்படை கடமைகள் பற்றிய அத்தியாயம் ஒன்றை அரசியல் சட்டத்தில் சேர்ப்பதற்கு வகை செய்யும் ஷரத்து இன்று லோகசபையில் நிறைவேறியது. இந்தக் கடமைகளை வகுத்ததில் பிரதமருக்கு பங்கு உண்டு என்று சட்ட மந்திரி கோகலே கூறினார்.
44-வது அரசியல் சட்ட திருத்த மசோதாவில் இன்று 5 ஷரத்துக்கள் மீது வோட்டு எடுக்கப்பட்டன.
பிரஜைகளுக்கு சமநீதி வாய்ப்பும், இலவச சட்ட உதவியும் கிடைக்கச் செய்வது; தொழில்களின் நிர்வாகத்தில் தொழிலாளர்கள் பங்குகொள்ள செய்வது; சூழ்நிலையைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்வதும், வளங்களையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதும் ஆகியவற்றை வழிகாட்டிக் கொள்கைகளில் சேர்க்கும் 3 ஷரத்துகளும் இன்று நிறைவேற்றப்பட்டன.
அடிப்படைக் கடமைகள் பற்றிய அத்தியாயம் நாட்டின் அரசியல் சட்டத்தில் இப்போதுதான் முதன் முதலாகச் சேர்க்கப்படுகிறது என்றும், இதற்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருப்பதாகவும் சட்ட மந்திரி கோகலே கூறினார். இது சர்ச்சைக்கு இடமில்லாத ஷரத்து என்றும், அரசியல் காரணங்களுக்கும், இதர வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது என்றும் அவர் சொன்னார்.
பிரஜைகளின் கடமைகள் பற்றிய ஜாபிதாவில் ஏராளமான கடமைகளைச் சேர்க்க விழையும் பல திருத்தங்களை உறுப்பினர்கள் கொண்டுவந்தனர்.
ஆனால் பிரேரித்த உருவிலேயே இந்த ஷரத்தை நிறைவேற்றி வைக்குமாறு சட்ட மந்திரி விடுத்த வேண்டுகோளுக்கு அவர்கள் செவி சாய்த்தனர். அடிப்படைக் கடமைகள் பற்றிய அத்தியாயம் இந்த மசோதாவில் 11வது ஷரத்து ஆகும். இதற்கு 355 வோட்டுகள் ஆதரவாக கிடைத்தன. எதிர்த்து ஒரு வோட்டுகூட இல்லை.
பிரதமர் தலைமையில் மந்திரி சபை கூறும் யோசனைகள் படி ராஷ்டிரபதி செயல்பட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறும் ஷரத்தின் மீதும் இன்று விவாதம் பூர்த்தியாயிற்று. ...
மைனாரிட்டி உரிமைகள் பற்றி கோகலே உறுதி
புதுடில்லி - தேசிய வாழ்வின் சகல துறைகளிலும் பிராதானமாக கல்வி, வேலை வாய்ப்பு விஷயத்தில் முஸ்லிம்கள், இதர சிறுபான்மை வகுப்பினர், ஷெட்யூல்டு வகுப்பினர், மலைஜாதினியினர் ஆகியோரின் உரிமைகளுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதே சர்க்காரின் கொள்கை என்று சட்ட மந்திரி எச்.ஆர். கோகலே இன்று லோகசபையில் ஊர்ஜிதம் செய்தார்.
அரசியல் சட்ட (44வது (திருத்த) மசோதாவின் 8வது ஷரத்துக்கு திருத்தங்கள் மீதான விவாதத்துக்கு அவர் பதிலளித்தார். இப்பிரச்னையில் சர்க்காரின் கொள்கை மாறவில்லை என்றும் கோகலே குறிப்பிட்டார்.
இது சம்பந்தமாக திருத்தம் ஒன்றை கொண்டுவந்த வலது கம்யூனிஸ்ட் மெம்பர்களுக்கு அவர் பதில் கூறுகையில், சிறுபான்மையோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கு அரசியல் சட்டத்தில் விசேஷ ஷரத்துக்கள் உள்ளன என்றும், எனவே, வலது கம்யூனிஸ்ட் கட்சி திருத்தத்தை ஏற்க தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் வலது கம்யூனிஸ்ட் மெம்பர்கள் தங்களது திருத்தத்தில் சிறுபான்மை வகுப்பினருக்கும் ஷெட்யூல்டு வகுப்பினருக்கும் மலைஜாதியினருக்கும் இதர ஏழைகளுக்கும் கூடுதலாக என்ன பாதுகாப்பை கோருகின்றனர் என்பதை குறிப்பிடவில்லை எனவும் சட்ட மந்திரி கூறினார். ...
Summary
30.10.1976: Duties in the Constitution – Unanimously adopted in the Lok Sabha
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


