கண்களின் பாதுகாவலன் கேரட்

இயற்கை உணவுகளை புறம் தள்ளி எண்ணெயில் வறுத்த உணவுகள்.  பதப்படுத்தப் பட்ட உணவுகள் என
கண்களின் பாதுகாவலன் கேரட்
Updated on
4 min read

மக்களின் அன்றாட உணவு முறைகளில் இயற்கை உணவுகளை புறம் தள்ளி எண்ணெயில் வறுத்த உணவுகள்.  பதப்படுத்தப் பட்ட உணவுகள் என பல உணவுகளை இன்று அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர். போதாக்குறைக்கு வைட்டமின் டானிக், மாத்திரை என உட்கொள்கின்றனர். இவைகள் அனைத்துமே உடலுக்கானு வலுவையும், ஊக்கத்தையும் புறம் தள்ளி பல வகையான வியாதிகளுக்கு காரணமாகின்றன.

இந்நிலையில் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் கீரைகள், காய்கள், பழங்கள், கிழங்குகள் போன்ற இயற்கையான உணவுகள் இடம் பெற்று வருவதன் மூலம் பல்வேறு பிணிகளைத் தடுக்கும், ஆரோக்கியத்தை அடைய முடியும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் மஞ்சள் முள்ளங்கி என அழைக்கப்படும் கேரட் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.

கேரட் அறிவியல் பெயர்: Daucus carotta
தாவர குடும்பம்: அம்பெலிஃபெரா (Umbelliferae) என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தவை.
பிறப்பிடம்: மத்திய ஆசியா
நிறம்: ஆரம்ப காலங்களில் வெளிர் மஞ்சள், ஊதா நிறத்திலும் காணப்பட்டன. தற்போது உலகெங்கும் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் 5 முதல் 10 செ.மீ. நீளம் உள்ள பல சில்லடை வேர்களைக் கொண்ட கிழங்காக கிடைக்கிறது. இவை 17-ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்து நாட்டில்தான் முதன் முதலில் பயிரிடப்பட்டன. 3000 வருடங்களுக்கு முன்பே ஆப்கானிஸ்தானில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மலைப்பிரதேச பகுதிகளில் பயிரிடப்படுகின்றன.

பயன்கள்:

*  உயிர் சத்துகள் நிறைந்த கேரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது.

*  நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகளும் நிறைந்துள்ளதால் உணவு சீரணத்திற்கு உதவுகிறது.  மாலைக் கண் நோயை தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.

*  ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் கேரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

*  பீட்டா கரோட்டீன் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கும் ஆற்றலும் கொண்டது.

*  இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், விருத்திச் செய்யவும் பயன்படுகிறது.

*  வாய் துர்நாற்றத்தை போக்கும் வல்லமையும், குடல் புண்கள் வரமால் தடுக்கும் தன்மையும் நிறைந்து காணப்படுகிறது.

*  ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அதாவது பாதி வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன்களை அறியலாம்.

*  கேரட்டை பசும் பாலில் காய்ச்சி அதனுடன் காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து கொடுத்து வந்தால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*  கேரட்டை எலுமிச்சை சாறு சிறுது கலந்து சாப்பிட்டு வர பித்த கோளாறுகள் நீங்கும்.

*  உருளைக் கிழங்கை விட 6 மடங்கு அதிக சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளதால் உணவுகள் எளிதில் ஜீரணிக்கப்படுகின்றன. எலும்புகள் உறுதி பெறுகின்றன.

*  கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்திருப்பதால் எலும்புகளுக்கும் பற்களுக்கும் பலம் அளிக்கிறது.  முதுமையில் கால்சிய இழப்பை சரிகட்ட அன்றாடம் உண்ணும் உணவில் கேரட்டை சேர்த்துக்கொண்டால் எலும்பு, பற்களின் பலவீனம் குறைந்து பலப்படும்.

*  மலச்சிக்கலே மனிதனுக்கு நோயின் வாசலாகும். மலச்சிக்கலைப் போக்கினாலே மனிதன் நோயின்றி வாழலாம். நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் செரித்து மலத்தை சீராக வெளியேற்றவும், மூலநோயின் தாக்கத்தையும் குறைக்கிறது.

*  தலைமுடி உதிர்வதை தடுக்கும் ஆற்றல் காரட்டுக்கு உள்ளதாக ஜெர்மன் பல்கலைக்கழக இயற்கை உணவு ஆராய்ச்சிக்கழகம்  கண்டறிந்துள்ளது.

*  கேரட்டை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி பசும் பாலில் போட்டு அவித்து எடுத்து சிறிதளவு தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தையின் எலும்புகள் பலப்படும். வளர்ச்சி சீராகும். இளைப்பு நீங்கி உடல் வலுப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*  பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் தாதுக்கள், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் இழப்பை சரிசெய்ய கேரட்டை மிகவும் சரியான ஊட்டசத்து என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

*  பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தண்மை நிறைந்து காணப்படுகிறது.

*  கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு காரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும். பிறக்கும் குழந்தை நிறமாகவும், வலுவாகவும் பிறக்கும்.

*  கேரட்டை துருவி அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில், கழுத்துப் பகுதியில் தடவி வந்தால் முகக்கருப்பு, முகச்சுருக்கம், முகவறட்சி, எண்ணெய் வடிதல் போன்றவை மாறி முகம் பளபளப்பாக காணப்படும்.

*  சருமத்திற்கு பொலிவையும்,  நரம்புகள் பலப்படவும், மூளைச் சூட்டைத் தணித்து மூளை நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும். தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை தடுக்கும் ஆற்றலும் நிறைந்து காணப்படுகிறது.

*  வைட்டமின் “இ’ , பீட்டா கரோட்டின் நிறைந்து இருப்பதால் கண் புகைச்சல், கண்ணில் பாசி படிதல், மாலைக்கண் போன்றவற்றை குணமாக்கவும், பார்வை நரம்புகளின் வறட்சித் தன்மையைப் போக்கி கண் பார்வையை அதிகரிக்கவும், 40 வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளெழுத்து தொந்தரவை விரட்டவும் கேரட் பயன்படுகிறது. எனவே கேரட்டை வேகவைத்தோ அல்லது பச்சையாக அடிக்கடி உண்டு வந்தால் கண் பார்வை கூர்மையாக்கும்.

*  கேரட்டின் மேல் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அல்லது திருகி அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைக் கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சிறிது சேர்த்து மோரில் ஊறவைத்து மதிய உணவு வேளைகளில் உண்டு வந்தால் வாயு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.

*  கேரட் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் இரும்பு சத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தில் கலந்து நச்சுக்களை வெளியேற்றும். இரத்த அழுத்தம், இதயநோய் அணுகாமல் காக்கிறது.

*  கேரட் சாறுடன் எலுமிச்சம் பழமும் புதினாவும் கலந்து உப்பு சேர்க்காமல் அருந்தினால் மலச்சிக்கல் மாறும்.

*  ஞாபக சக்தி அதிகரிக்கும், புத்திகூர்மை உண்டாகும்.  கேரட் சாறுடன் ஏழு எட்டு பாதாம் பருப்புகள் உண்டு வந்தால், மூளை விழிப்புடன் இருக்கும். மூளைக்கு நல்லது. பைத்தியம் குறைக்கும் நிவாரணியாகவும் பயன்படுகிறது. 

*  இதயத் துடிப்பைச் சீராக்கும். இரத்தம் உறைந்து இதய அடைப்பு ஏற்படுவதிலிருந்து காக்கும்.

*  மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது.

*  இரத்தப் புற்றுக்கு தினமும்  கேரட் சாறு அருந்த ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

*  வயிற்றில் பூச்சிகளை மருந்தின்றி வெளியேற்றும், தோல் வரட்சி நீங்கி பளபளப்பாகும், முகப்பரு பருக்கள் மறைந்து சிவப்பழகு கூடும்.

*  தரமான தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்க கேரட் சாறு அருந்தவும்.

*  இரத்த சோகையை நீக்கும் அரும் மருந்தாகும்.

*  இரத்தத்தில் தேவையில்லாத யூரிக் அமிலத்தை கட்டுப் படுத்துகிறது. இதனால், மூட்டுவீக்கம் மற்றும் வாத நோயாளிகள் வலி நீங்கி குணம் பெறுகிறார்கள்.

*  கேரட்டிலுள்ள Tocokinin என்ற பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் போல் இருந்து உதவுகிறது.

*  மலட்டுத் தன்மையை மாற்றும் வைட்டமின் ‘ஈ’ நிறைந்து காணப்படுகிறது.

*  கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று முற்றாமல் காத்துக்கொள்ளலாம் என்று அமெரிக்காவில் ஃபுளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

*  கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

*  கேரட்டில் உள்ள வைட்டமின் "ஏ" விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும்.  இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள ஃபாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா ஃபெர்ணாண்டஸ் கூறுகையில், இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார்.

100 கிராம் கேரட் உண்பதால் கிடைக்கும் சத்துக்கள் விவரம்:

சக்தி (Energy)                                              48 கலோரிகள்

ஈரப்பதம்/நீர் (Moisture)                                86 கிராம்

புரதம் (Protein)                                                 0.9 கிராம்

கொழுப்பு (Fat)                                                 0.2 கிராம்

தாதுக்கள் (Minerals)                                  1.1 கிராம்

நார்ச்சத்து (Fibre)                                       1.2 கிராம்

கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates)   10.6 கிராம்

கால்சியம் (Calcium)                                     80 மி.கி

பாஸ்பரஸ் (Phosporous)                             530 மி.கி

இரும்பு (Iron)                                              1.03 மி.கி

மெக்னீஸியம் (Magnesium)                           17 மி.கி

சோடியம் (Sodium)                                        35.6 மி.கி

பொட்டாசியம் (Potasium)                             108 மி.கி

செம்பு (Copper)                                               0.10 மி.கி

மாங்கனீசு (Manganese)                                  0.16 மி.கி

ஸிங்க்/நாகம் (Zinc)                                        0.36 மி.கி

குரோமியம் (Chromium)                                 0.017 மி.கி

கந்தகம் (Sulphur)                                              27 மி.கி

குளோரின் (Chlorine)                                        13 மி.கி

கரோட்டீன் (Carotene)                                 1890 மை.கி

தையாமின் (Thiamine)                                      0.04 மி.கி

ரைப்போஃப்ளேவின் (Riboflavin)                      0.02 மி.கி

நியாசின் (Niacin)                                               0.6 மி.கி

போலிக் அமிலம் (Folic acid)                             15 மை.கி

வைட்டமின் சி (Vitamin C)                                   3 மி.கி

கொலின் (Choline)                                           168 மி.கி

100 கிராம் கேரட்டில் மேற்கண்ட சத்துப்பொருள்கள் நிறைந்துள்ளன.

கேரட் சட்னி

தேவையானப்பொருட்கள்:

கேரட் - 2

காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை

புளி - ஒரு நெல்லிக்காயளவு

கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

எண்ணை - 2 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கேரட்டைக் கழுவி, தோல் சீவி, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அத்துடன் மிளகாய், பெருங்காயம், புளி சேர்த்து வதக்கவும். கடைசியில் காரட் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு விநாடிகள் வதக்கி, இறக்கி ஆற விடவும். ஆறிய பின் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து சாப்பிட சுவையின் சூழ்ச்சமத்தை அறியலாம்.

கண் சம்பந்தப்பட்ட நோய்களை காணாமல் போக்கவும், முதுமையினை விரட்டிடவும் தினமும் பயன்படுத்தி பலன்கள் பல பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com