வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மகளின் குழந்தைக்கு வாடகைத் தாயாக இருந்த தாய்

சொந்த மகளின் குழந்தைக்கு வாடகைத் தாயாக இருந்து குழந்தையைப் பெற்றுக் கொடுத்து, ஒரு தாய் சாதனை படைத்துள்ளார்.

News image
Updated On :6 மார்ச் 2015, 10:04 am

ஜே.ரங்கராஜன்

சொந்த மகளின் குழந்தைக்கு வாடகைத் தாயாக இருந்து குழந்தையைப் பெற்றுக் கொடுத்து, ஒரு தாய் சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து, சென்னை வடபழனியில் உள்ள ஆகாஷ் கருத்தரிப்பு மையத்தின் இயக்குநர்கள் டாக்டர் ஜெயராணி காமராஜ் - டாக்டர் காமராஜ் இருவரும், செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டி அளித்தனர்.

சென்னை, தி.நகரைச் சேர்ந்த லட்சுமிக்கு (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), கர்ப்பப் பை அகற்றப்பட்டு குழந்தைப் பேறு இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் லட்சுமி உள்பட மூன்று குழந்தைகளைக் கொண்ட அவரது தாய், மருத்துவ ரீதியாக 'வாடகைத் தாயாக'ச் செயல்பட்டு, மகளின் கருவைச் சுமந்து குழந்தைப் பேறு கொடுத்துள்ளார்.

லட்சுமிக்கு குழந்தைப் பேறு இல்லாமல் போனது ஏன்?

திருமணமான பத்தாவது மாதமே லட்சுமி கர்ப்பம் அடைந்தார். எனினும் கர்ப்பக் காலத்தின் ஏழாவது மாதத்தில் நஞ்சு பிரிந்து, அதிகப்படியான உதிரப்போக்கு வெளியாகி, தாயின் நலன் கருதி அறுவைச் சிகிச்சை செய்து இறந்த குழந்தையை வெளியே எடுத்தனர்.

குழந்தையை வெளியே எடுத்த பிறகும் கர்ப்பப் பை சுருங்காமல் உதிரப்போக்கு அதிகமாகி அதை நிறுத்துவதற்கு எந்தவித மருத்துவ முறையும் சரிவராததால், லட்சுமியைக் காப்பாற்றுவதற்காக அவரது கர்ப்பப் பையை டாக்டர்கள் அகற்றிவிட்டனர். இதனால், குழந்தைப் பேறும் இல்லாமல் கர்ப்பப் பையும் இல்லாமல் நிலைகுலைந்தார் லட்சுமி. இந்த நிலையில் வாடகைத் தாய் (சொந்தம் அல்லாத நபர்) மூலம் குழந்தைப் பேறு முறையில் பல லட்சங்கள் செலவழித்தும் பலன் கிடைக்கவில்லை.

ஆகாஷ் மருத்துவமனைக்கு...

இந்த நிலையில் 2013-ம் ஆண்டு தனது தாயுடன் ஆகாஷ் கருத்தரிப்பு மையத்துக்கு லட்சுமி வந்தார். சொந்தங்களில் யாராவது சம்மதித்தால், கருவைச் சுமந்து (வாடகைத் தாய்) குழந்தைப் பேறு அளிக்க முடியும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், மாதவிலக்கு நின்று ஐந்து ஆண்டுகள் ஆன லட்சுமியின் தாய், தனது மகளுக்காக வாடகைத் தாயாகச் செயல்பட சம்மதித்தார்.

தோளுக்குப் பதிலாக வயிற்றில்...

இதையடுத்து, மகளின் குழந்தையை (பெயர்த்தியை) தோளில் சுமப்பதற்குப் பதிலாக வயிற்றில் சுமக்கத் தொடங்கினார் அந்த 61 வயதுப் பெண். கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதியன்று, 2.7 கிலோகிராம் எடையுள்ள பெண் குழந்தை அந்தத் தாய்க்குப் பிறந்தது.

இதனால் லட்சுமி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தன் மகளுக்காக தானே வாடகைத் தாயாக மாறி குழந்தைப் பேறை அளித்த அந்தத் தாயின் செயல் மிகப்பெரிய சாதனையாகும்.

நான்கு மாத குழந்தை...

தாய் மூலம் மகளுக்குக் கிடைத்த அந்தப் பெண் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகிறது. தற்போது அந்தக் குழந்தை நலமாக உள்ளது. முகம் தெரியாத நபர்கள் பணத்துக்காக வாடகைத் தாயாகப் பணியாற்றுவதைவிட சொந்தங்களே குழந்தை சுமப்பது முன்மாதிரியான விழிப்புணர்வு ஆகும்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி (மார்ச் 8), தன் மகளுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்த அந்தத் தாயை ஆகாஷ் மருத்துவமனைக்கு வரவழைத்துப் பாராட்டு விழா நடத்த உள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.