இதயம் காப்போம்!

வேலை விஷயமாக அல்லது சொந்தக் காரணங்களுக்காக வெளியூர் செல்ல வேண்டிய சூழலில் இதய நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவற்றைப் பற்றி விளக்குகிறார்
இதயம் காப்போம்!
Published on
Updated on
2 min read

வேலை விஷயமாக அல்லது சொந்தக் காரணங்களுக்காக வெளியூர் செல்ல வேண்டிய சூழலில் இதய நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவற்றைப் பற்றி விளக்குகிறார் மதுரை இதய நோய் நிபுணர் பாலசுப்ரமணியன்.

சிலர் மாரடைப்பு வந்து அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னரும், பயம் நீங்காமல் தனக்கு இனி எல்லாம் முடிந்துவிட்டது என்று முடிவெடுத்து கடைசி நாட்களை எதிர்நோக்கி படுக்கையை விட்டு எழும்பாமல் இருப்பார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு நெஞ்சு வலி சரியாகிவிட்டது என்றவுடன் துளி கூட அதைப் பற்றிப் பயப்படாமல் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள். முன்பு போலவே உணவில் அதிகக் கொழுப்பு, மது, புகை, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை என்று திரும்ப அதே போல வாழத் தொடங்கிவிடுவார்கள். இவை இரண்டுமே சரியில்லை. கூடுமானவரை இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். வந்துவிட்டால் எவ்வளவு கவனமாகவும் பாதுகாப்புடனும் இருக்க  முடியுமோ அந்த அளவு நம்மை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியது உயிர்த் தேவை. அதற்காக இயல்பாக செய்ய வேண்டியவற்றை தவிர்க்க சொல்லப் போவதில்லை. மாரடைப்பு வந்தாலும் ட்ராவல் செய்யலாம், நமக்கான சந்தோஷங்களை விட்டுக்கொடுக்காமல்புத்துணர்ச்சியுடன்  புதிய வாழ்க்கை முறை வாழலாம். 

இதய அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

மீண்டும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்களை குறைக்க வேண்டும்.

மாரடைப்பின் மனத்தளர்ச்சி பயம் போன்றவற்ரிலிருந்து விடுதலை அடைய வேண்டும். பாசிட்டிவாக இருக்க வேண்டும்.

யோகா உடற்பயிற்சி தியானம் போன்றவற்றின் மூலம் உடலையும் உள்ளத்தையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.

டாக்டர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரத்த கொதிப்பு சர்க்கரை போன்ற பிரச்னைகளை கட்டுக்கள் வைத்திருக்க வேண்டும்.

இல்லற வாழ்வில் மீண்டும் புத்துணர்வோடு ஈடுபடலாம். இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடவேண்டும். அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப, மருத்துவரின் பரிந்துரைப்படி வேலைக்கு மறுபடியும் போகலாம்.

வெளியூர் செல்லும் போது கவனிக்க வேண்டியவை

1) நீண்ட தூர‌ப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பயணங்களின் போது டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளை போதிய அளவு கையில் எடுத்துச் செல்வது நல்லது. மருத்துவ குறிப்புகள், டாக்டரின் தொலைபேசி எண், போன்ற தகவல்களை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். குறிப்புகளை தங்கள் மொபைலில் கூட சுருக்கமாக வைத்திருக்கலாம்.

2) கையில் எப்போதும்  விலாசம் அவசர எண் ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

3) பயணத்தின் போது எவ்வித பரபரப்புக்கும் உள்ளாகாமல், தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருப்பது நலம்.

4) ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்னைகள் இருந்தால் கிளம்புவதற்கு முன் ஒரு முறை பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரைக்குப் பின் டூருக்குக் கிளம்புது நல்லது.

5) ரயில் அல்லது விமானப் பயணம் நல்லது. நீண்ட தூரம் பஸ்சில் அமர்ந்து பயணிப்பது உடல் அசெளரியத்தை ஏற்படுத்தலாம்.

6) மருந்து தீர்ந்து போனால் அதே மாத்திரைகள் வாங்க வேண்டும். மாற்று மருந்து அல்லது டோசேஜ் மாறினால் பிரச்னையாகிவிடலாம்.

7) இரண்டு நாள் தானே என்று உணவுக்கட்டுப்பாட்டை மீறிவிட வேண்டும். எங்கே இருந்தாலும் மருத்துவர் பரிந்துரைக்கும் உணவு முறையை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்.

உணவு முறை

உப்பும் கொழுப்பும் குறைவாக உள்ள உணவு வகைகளை சிறிய அளவில் சிறு இடைவெளிவிட்டு எடுத்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகளை சாப்பிடவேண்டாம்..எப்போதும் எங்கு இருந்தாலும் ஒரே விதமான உ ணவு முறையை பின்பற்ற வேண்டும். ஒரு ஸ்பூன் அதிகமோ குறைவோ சாப்பிட்டாலும் அது உடல் நிலையை பாதிக்கும். உணவு விஷயத்தில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்

மருத்துவரின் பரிந்துரைப்படி சில‌ உடற்பயிற்சிகளை எங்கே இருந்தாலும் மறக்காமல் தினமும் செய்ய வேண்டும். வாக்கிங் செல்லவேண்டும்.

மூன்று வேளை உணவைப் பிரித்து ஐந்து வேளையாக எடுத்துக்கொண்டால் நல்லது.

விருந்தும் வேண்டாம், விரதமும் தேவையற்றது

தவிர்க்க வேண்டிய உணவுகள்

1. புகை, புகையிலை பொருட்கள். போதை வஸ்துக்கள்

2. எண்ணெயில் வறுத்த பொறித்த உணவுகள், காய்கறி மற்ரும் மாமிசம். 

3. கேக், க்ரீம் சாக்லெட், பிஸ்கெட்

4.  கொட்டை வகைகளான முந்திரி, நிலக்கடலை

5.  குளிர்பானங்கள் -  பாட்டில் டிரிங்க்ஸ்

6.  சிப்ஸ், ஊறுகாய், அப்பளம், உப்பு அதிகமுள்ள எந்த உணவுப் பொருளும்

7. சீஸ், சாஸ், பன்னீர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com