
கேரளாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிபா வைரஸ் பாதிப்பால் இதுவறை 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுள் நர்ஸ் லினி புதுச்சேரியும் ஒருவர். பெரம்பராவிலுள்ள தாலுக் மருத்துவமனையில் நிபா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது அவரையும் அவ்வைரஸ் தாக்கியுள்ளது.
26 வயது நிரம்பிய லினி பெரம்பராவிலுள்ள ஹெல்த் செண்டரில் நர்ஸாக பணி புரிந்து வந்தார். மே மாதம் முதல் வாரத்தில் நிபா வைரஸ் தாக்கிய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டபோது அவர்களுக்கு சிகிச்சையளித்தார். உடனடியாக அவருக்கும் வைரஸ் கிருமி தாக்கியது. அவரது உடல் நிலை மோசமாகிக் கொண்டே இருந்த போது தன் கணவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அவரது கணவர் சஜீஷ் வளைகுடா நாட்டில் பணி புரிந்து வருகிறார். சஜீஷ் இந்தியா திரும்புவதற்குள், லினியின் நோய் தீவிரமடையவே அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் அங்கும் சிகிச்சை பலனின்றி லினி உயிரிழந்தார்.
லினி தன் கணவருக்கு எழுதிய கடிதத்தில், ‘சஜீஷ் ஏட்டா, நான் பிழைக்கப் போவதில்லை என்று தெரிகிறது. உங்களை எல்லாம் மீண்டும் பார்ப்பேன் என்று தோன்றவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள். குழந்தைகளை நல்லபடியாக நீங்கள் தான் வளர்க்க வேண்டும். மூத்த மகன் குஞ்சுவை உங்களுடன் வளைகுடாவுக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள். நம் அப்பா தனியாக இருந்தது போல ஒரு போதும் குழந்தைகளை தனித்து இருக்க விடாதீர்கள்...மிகுந்த அன்புடன்..
லினியின் மரணத்துக்கு பின்னர் அவரது உடலை மருத்துவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவில்லை. மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை மின் தகனம் செய்துவிட்டது. நிபா வைரஸ் பரவக் கூடாது என்பதே காரணமாக தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.