ஃபைப்ரோமையால்ஜியா! வாயிலேயே நுழையாத இப்படியொரு வியாதி யாருக்கெல்லாம் வரும்?

என் வயது 57. ஆசிரியராகப் பணிபுரிகின்றேன். சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு எனது கழுத்து நரம்புகளின் வாயிலாக (C6 - C7) வலி ஏற்பட்டது.
ஃபைப்ரோமையால்ஜியா! வாயிலேயே நுழையாத இப்படியொரு வியாதி யாருக்கெல்லாம் வரும்?
Published on
Updated on
3 min read

 
என் வயது 57. ஆசிரியராகப் பணிபுரிகின்றேன். சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு எனது கழுத்து நரம்புகளின் வாயிலாக (C6 - C7) வலி ஏற்பட்டது. பின் முதுகெலும்பு, இடுப்பெலும்பு, கால்களில் வீக்கம், வலி என வலிகளுடனேயே வாழ்ந்து வருகிறேன். வேலை செய்யச் செய்ய எனது கைகளும், கால்களும் வீங்கிக் கொள்ளும். சில நேரங்களில் முதுகு வலி என்னைப் பாடாய்ப்படுத்திவிடும். இரண்டு, மூன்று முறை MRI எடுத்துப் பார்த்தபொது அனைத்தும் தேய்ந்து விட்டதால் வேலையைக் குறைக்கச் சொன்னார்கள். இறுதியாக ஒரு மருத்துவர் இதற்கு ஒரு பெயர் சொன்னார் (FIBROMYALGIA) குணமாக்க முடியாது என்றார். ஆயுர்வேதத்தில் தீர்வு ஏதேனும் உள்ளதா?
-ப. அனுராதா, பீளமேடு, கோவை.

வேலைப் பளு, நீண்ட தூரம் பயணம், அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம், உணவில் வாயுவை அதிகரிக்கக் கூடியவற்றை ஆறிய நிலையில் சாப்பிடுதல், அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும் போதும் நேராக இல்லாமல் வளைந்து தசைகளுக்கு வலி ஏற்படுத்துதல், எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருத்தல், நாள் முழுவதும் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து வேலை செய்தல், இரவில் கண்விழித்தல், தன்சக்திக்கு மீறிய உடற்பயிற்சி, பட்டினியிருத்தல், சிற்றின்பத்தில் அதிக ஈடுபாடு போன்ற சில காரணங்களால் நீங்கள் குறிப்பிடும் FIBROMYALGIA என்ற உபாதை உருவாகலாம்.

காரிய காரணத்தோடு கூடிய இந்த உபாதைக்குத் தீர்வாக, தண்டுவடம் முழுவதும் மூலிகைப் பொடிகளைக் கொண்டு கட்டப்பட்ட மூட்டையை வெது வெதுப்பாக ஒத்தி எடுத்தல், மூலிகைத் தைலங்களைச் சூடாக்கி, பஞ்சில் முக்கி, தண்டுவடத்தில் குறிப்பிட்ட சில மணி நேர காலம் ஊற வைத்தல், அதன் பிறகு மூலிகை இலைகளை மூட்டை கட்டிச் சூடாக்கி. ஒத்தடம் கொடுத்தல், மூக்கில் மூலிகைத் தைலம் பிழிதல், தலையில் வெதுவெதுப்பாக எண்ணெய்களை ஊற வைத்தல், ஆஸனவாயின் வழியாக தைலங்களையும், மூலிகைக் கஷாயத்தையும் செலுத்தி குடலைச் சுத்தப்படுத்துதல், உடலெங்கும் தைலங்களை சூடாகப் பிழிந்து ஊற்றுதல், நவர அரிசியை சித்தாமுட்டி வேர்கஷாயத்துடன் பாலும் கலந்து சாதமாக்கி, உடலெங்கும் தேய்த்துவிடுதல் போன்ற சில வைத்திய முறைகளைக் குறிப்பிடலாம்.

தோலில் தேய்த்த எண்ணெய் உள்ளே பரவுமா? என்ற சர்ச்சை பல காலமாகவே இருந்து வருகிறது. இந்த சந்தேகத்தை ஆயுர்வேத மருத்துவராகிய ஸூச்ருதர் மிக அழகாகத் தீர்த்து வைக்கிறார்.

"மாத்திரா என்பது பழங்காலத்திய அளவு. க ச ட த ப என்பது போன்ற ஒரு குறில் எழுத்தை உச்சரிக்கும் நேர அளவு மாத்திரை ஆகும். ஒரு நொடிக்கு 200, 300 மாத்திரைகள். உடலில் எண்ணெய் தேய்த்தது மாத்திரைகளில் (1½ நொடி)யில் தோலின் மேல்பரப்பில் பரவுகிறது. (தோல் பாலாடை போன்ற மெல்லிய 7 படலங்கள் கொண்டது. முதல் 3 படலங்கள் மேல் தோல் (மேல்பரப்பு) எனவும் உள் 4 படலங்கள் உள் தோல் என்றும் கூறப்படும்.) அதற்கு அடுத்த 400 மாத்திரை (2 நொடி)களில் உள்தோலில் ஊடுருவி விடுகிறது. அதற்கு அடுத்த 500 மாத்திரை (2½ நொடி)களில் ரத்தத்தினுள் பரவிவிடும். தசைகளை அடுத்த 600 மாத்திரை (3 நொடி)களில் அடையும். அதற்கடுத்த 800 மாத்திரை (4 நொடி)களில் எலும்பை அடைகின்றது. பின் தொடரும் 900 மாத்திரை (4 நொடி)களில் எலும்பினுள் உள்ள மஜ்ஜையை அடையும். பின்னர் 1000 மாத்திரை (5 நொடி)களில் சுக்கிலத்தினுள்ளும் பரவும்.

இந்த 25 நொடிகளில் உடல் முழுவதும் அந்த எண்ணெய் தேய்த்ததால் ஏற்பட்ட நெய்ப்பும் நெய்ப்பால் ஏற்படும் நெகிழ்ச்சி முதலிய பல குணச்சிறப்புகளும் பரவிவிடும்' என்கிறார் ஸூச்ருதர். இது ஒரு பொது நேர அளவு. உடல்நிலை அனுகூலமாக இருந்தால் இதைவிட விரைவாகவே பரவலாம். எதிரிடையானால் தாமதமுமாகலாம்.

எண்ணெய் பரவுகிறதெனில் எண்ணெய்யின் அணு அணுவான பகுதிகள் பரவும் எனக் கொள்வது அவசியமில்லை. மேல் தோலில் பரவிய எண்ணெய் அணுவின் தொடர்பால் ஏற்பட்ட நெய்ப்பும் மென்மையும் வறட்சி நீங்குதலும் தடை நீங்குதலும் நெகிழ்ச்சியும் விறைப்பின்மையும் அந்த அளவில் பரவுகின்றன என்றே பொருள். ஐஸ்மேல் படும்போது பட்ட தோல் பகுதி மட்டுமே ஈரமாகிறது. சில்லிப்பு உடல் முழுவதும் பரவி ஜ்வரம் தணிகிறது. இதுபோல் எண்ணெய் தடவுதலால் ஏற்படும் நெய்ப்பு பரவுகிறது எனக் கொள்ளத் தகும். இதையே ஸூச்ருதர் கணக்கிட்டுத் தருகிறார். 

தசை நார்கள், எலும்புகள், ரத்தக் குழாய்கள், நுண்ணிய நரம்புகள் வலுப்படும் வகையில், தசமூலம் கஷாயம், விதார்யாதி கஷாயம், இந்துகாந்தம் கஷாயம், பத்ரதார்வாதி கஷாயம், திராக்ஷôதி கஷாயம் போன்றவையும் தான்வந்திரம், வாயு, வாதகஜாங்குசம், பிரஹத்வாத சிந்தாமணி போன்ற மாத்திரைகளையும், தசமூலாரிஷ்டம், அஸ்வகந்தாரிஷ்டம், பலாரிஷ்டம் போன்ற அரிஷ்ட மருந்துகளையும், கல்யாணகம், தாடிமாதி, சுகுமாரம் போன்ற நெய் மருந்துகளையும் மருத்துவர் ஆலோசனைப்படி தேர்தெடுத்துச் சாப்பிடக் கூடிய தரமான ஆயுர்வேத மருந்துகளால் நீங்கள் பயனுறலாம். 

விடுமுறை கிடைக்கும் பொழுதெல்லாம் மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளைச் செய்து கொள்வதும், ரத்த ஓட்டத்தைச் சுறுசுறுப்படையச் செய்யும் யோகாசனப் பயிற்சிகளை நல்ல யோகாசன ஆசானிடமிருந்து கற்றறிதலும், உணவில் இனிப்பு, புளிப்புச் சுவை சற்று தூக்கலாகவும், காரம் கசப்பு குறைவாகச் சேர்ப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்வதையும் நீங்கள் செய்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. 

- பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com