
மனிதர்களிடமிருந்து தானமாகப் பெறும் ரத்த வகைகளைப் போல அல்லாமல், அனைத்து வகை ரத்தத்துக்கும் பொருந்தக்கூடிய, மிக அவசர காலத்தில் உயிர் காக்கும் சேவைக்காக ஜப்பான் விஞ்ஞானிகள் செயற்கை ரத்தத்தை உருவாக்கி வருகிறார்கள்.
எவ்வாறு உணவும், தண்ணீரும் உயிரைக் காப்பாற்றி வருகிறதோ, அதுபோலவே, கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றக் கூடிய ஒரு விஷயமாக ரத்தமும் உள்ளது. அதனால்தான் ரத்த தானம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றுக்கு மாறாக, எல்லா பிரிவு ரத்தத்துக்கும் பொருந்தக் கூடிய புதிய வகை செயற்கை ரத்தத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இது தற்போது ஆய்வுக்கூட சோதனையில் உள்ளது, இது பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த செயற்கை ரத்தம், மனிதர்களிடமிருந்து பெறப்படும் ரத்த தானத்துக்கு முடிவு கட்டாது என்றும், அதன் ஒரு பகுதியாகவே இது தொடரும் என்றும் கூறப்படுகிறது. துல்லியமாகச் சொல்லப்போனால், காலாவதியான இயற்கை ரத்தத்தின் மறுசுழற்சி என்பதால், மனித ரத்தம் வீணாவதையே இது தடுக்கும், உயிரிழப்புகளைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரத்தம் என்பது அறுவைச் சிகிச்சைகள், விபத்து, பிரசவம், புற்றுநோய் உள்ளிட்ட சில சிகிச்சைகளின்போது நோயாளியின் உயிரைக் காப்பாற்ற மிகவும் அத்தியாவசியமானதாக மாறிவிடுகிறது.
உலகம் முழுவதும் ரத்த வங்கிகளில் எப்போதும் ரத்த இருப்பு குறைவாகவே இருக்கும். வேறு ரத்த வகையைப் பெற்றுக்கொண்டு, கேட்கும் ரத்த வகையைக் கொடுக்கும் நிலைதான் இப்போதுவரை இருக்கிறது.
அதிலும் குறிப்பாக, தேவைப்படுகிற ரத்த வகையானது அரிய வகையாக இருந்துவிட்டால் உடனே கிடைக்காது. தானமளிப்பவர்கள் கிடைப்பதும் அரிதாக இருக்கும். ரத்தம் கிடைக்க தாமதமாவது பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகும் நிலையும் ஏற்பட்டிருக்கும். இதனை ரத்தம் பெற அலைந்து திரிந்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பர்.
இந்த நிலையில்தான், ஜப்பானின் நாரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில், பேராசிரியர் ஹிரோமி சகாய் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு செயற்கை ரத்தத்தை உருவாக்கிப் பரிசோதித்து வருகிறது. இது நீல நிறத்தில் இருக்கும் என்றும், இது தயாரிக்கப்பட்டுவிட்டால் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரைகூட பாதுகாத்து வைக்க முடியும் என்பதே இதன் சிறப்பாக உள்ளது.
உலகின் எந்த மூலையில் இருந்தும் எந்த மூலைக்கும் இதனைக் கொண்டு செல்லலாம். இது அனைத்து ரத்த வகைகளுக்கும் பொருந்தும். தானமாக பெறப்படும் ரத்தத்தின் ஆயுள்காலம் என்பது 42 நாள்கள்தான். ஆனால் செயற்கை ரத்தத்தின் ஆயுள் 2 ஆண்டுகள். அதுவும் அறை வெப்பநிலையிலேயே இதனை 2 ஆண்டுகள் பாதுகாக்கலாம் என்றும், குளிர்சாதனப் பெட்டியில் உரிய குளிர்நிலையில் வைத்து 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒருவகையில், இதுவும் ஒரு தானமாகப் பெறப்பட்ட ரத்தம்தான். அதாவது, காலாவதியான ரத்தத்திலிருந்து ஹீமோகுளோபினை சேகரித்து அதன் மூலம் இந்த செயற்கை ரத்தம் உருவாக்கப்படுகிறது. ஹீமோகுளோபின் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்த சிவப்பணுக்களின் ஒரு பகுதி. எனவே, இயற்கை ரத்தத்தின் மறுசுழற்சி செய்யப்பட்டதுதான் இந்த செயற்கை ரத்தம்.
செயற்கை ரத்த ஆராய்ச்சிக் குழு, நன்கு ஆரோக்கியமாக இருக்கும் 16 தன்னார்வலர்கள் உடலில் 100 மி.லி. முதல் 400 மி.லி. செயற்கை ரத்தம் செலுத்தி அது எவ்வாறு செயல்படுகிறது, உள்ளுறுப்புகளை இயக்குகிறது என்று சோதனைகளை நடத்தி வருகிறது.
ஒருவேளை, இந்த சோதனை வெற்றியடைந்தால், வரும் 2030-ஆம் ஆண்டிலிருந்து ஜப்பான் மருத்துவமனைகளில் செயற்கை ரத்தத்தின் பயன்பாடு உறுதி செய்யப்படும். உலகளவில் செயற்கை ரத்தத்தை உருவாக்கிய நாடு என்ற பெருமையை ஜப்பான் அடையும். உலகம் முழுவதும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் நிலையில், மருந்துக் கடைகளில் கூட இது விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Unlike blood types donated from humans, Japanese scientists are developing synthetic blood that is compatible with all blood types and can be used in life-saving emergencies.
இதையும் படிக்க.. மனித கருமுட்டை, நஞ்சுக்கொடி, மூளையிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.