
மாரடைப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்கிறது மருத்துவம். அதே வேளையில், மருத்துவர்களோ, திங்கள்கிழமை என்றால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள்.
இதயம் சார்ந்த பிரச்னை இருப்பவர்களில் 85 சதவீதம் பேர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகிறார்கள் என்கிறது தரவு. இதுவே, உலகளவில் மரணத்துக்கான காரணங்களில் 32 சதவீதம் மாரடைப்பு உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வாரத்தின் ஏழு நாள்களில் எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம். ஆனால், வாரத்தின் தொடக்கமான திங்கள்கிழமைகளில்தான் மிக மோசமான மாரடைப்பு நேரிடுகிறது. எனவே, திங்கள்கிழமைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.
மிக மோசமான மாரடைப்புகள் அதாவது இதயத்திலிருந்து உடலின் மற்ற உறுப்புகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனி முழுமையாக அடைபடும்போது ஏற்படும் மாரடைப்புதான் மிக மோசமான மாரடைப்பு என விஞ்ஞானிகளால் கூறப்படுகிறது. இந்த மாரடைப்புக்கு அவசர சிகிச்சை கிடைக்காவிட்டால் மரணம்தான் நிகழும்.
இதுபோன்ற மிக மோசமான மாரடைப்பு வாரத்தின் முதல் நாளில் அதிகம் ஏற்படுவதாகவும், வாரத்தில் மற்ற நாள்களை விடவும் திங்கள்கிழமைகளில் அதிக மாரடைப்புகள் நேரிடுவதாகவும் கூறப்படுகிறது.
திங்கள்கிழமை மட்டும் ஏன்?
வாரத்தின் முதல்நாளில் பணியைத் தொடங்கும்நாளில் சில முக்கிய காரணங்கள், மனிதர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கின்றனவனாம்..
1. மனித உயிரியல் சுழற்சி
மனித உடலில் இருக்கும் இயங்கு கடிகாரம் அல்லது உயிரியல் சுழற்சி, திங்கள்கிழமைகளில் மாறுபடும்போது மாரடைப்பு ஏற்படலாம் என்கிறார்கள். இந்த உயிரியல் சுழற்சி, ஹார்மோன்களை பாதித்து, அதன் மூலம் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
2. ஐயோ, திங்கள்கிழமையா?
வார இறுதி நாளை நிம்மதியாகக் கழித்துவிட்டு, மீண்டும் அந்த கடுமையான பணிச்சூழலுக்குத் திரும்பும்போது ஏற்படும் ஒருவித மன அழுத்தம் கூட, மாரடைப்புக்கு வித்திடலாம் என்கிறார்கள்.
3. வார விடுமுறைக் கொண்டாட்டம்
சிலர் வார விடுமுறை நாள்களில் மது, விருந்து எனக் கொண்டாடுவார்கள். வாரம் முழுக்க ஏதோ ஒன்றை சாப்பிட்டுவிட்டு வேலைக்கு ஓடியவர்கள், வார இறுதியில் மதுபானங்களையும், மாமிசங்களையும் அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது, ரத்த அழுத்தம் அல்லது ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவது போன்றவற்றால் அடுத்த நாளில் மாரடைப்பு ஏற்படலாம்.
4. உணவே விஷமானால்
வார இறுதியில் உட்கொள்ளும் இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட மாமிசம், உப்பு அதிகம் கொண்ட சிப்ஸ் போன்றவற்றால் ஏற்கனவே இதய நோய் இருப்பது தெரியாமல் அதிகளவில் சாப்பிடும்போது, அடுத்தநாள் அது ஆபத்தாக மாறுகிறது.
5. போக்குவரத்துக்கூடவா?
பொதுவாகவே திங்கள்கிழமை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். வார விடுமுறையில் தாமதமாக உறங்கச் சென்று திங்கள்கிழமை விரைவாக அல்லது தாமதமாக எழுந்து அலுவலகத்துக்கு ஓடும்போது போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட டென்ஷன்கள் கூட மாரடைப்பை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.
இதுபோன்ற காரணங்களால்தான் மாரடைப்பு ஏற்பட திங்கள்கிழமை அதிக ஆபத்தான நாளாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதுவரை இதற்கான அறிவியல் பூர்வ காரணம் கண்டறியப்படவில்லை.
மாரடைப்புக்கான அறிகுறிகள்..
நெஞ்சு வலி அல்லது நெஞ்சுப் பகுதியில் ஒரு அழுத்தம்.
வாந்தி அல்லது மயக்கம்
தோள் மற்றும் கைகளில் அழுத்தத்துடன் கூடிய வலி
முதுகு, கழுத்து, தாடைகளில் வலி
மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
தடுக்க வழி இருக்கிறதா?
தொடர்ந்து உடற் பயிற்சிகளை மேறகொள்ளுதல்.
சரியான விதத்தில் சத்தான உணவை உட்கொள்ளுதல்.
புகை மற்றும் மதுப் பழக்கத்தை கைவிடுதல்
உடல் எடையை பராமரித்தல்.
ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை அளவுகளை சோதித்தல்
மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளுதல் போன்றவை உடல்நிலையை சீராக வைக்க உதவும்.
இதையும் படிக்க.. கூகுளின் ஏஐ சம்மரி: இணையதளங்களுக்கு சவால்! இனி என்னவாகும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.