தொழிற்சாலைக் கழிவுகளால் ஏரிகளுக்கு ஆபத்து
ஸ்ரீபெரும்புதூர், அக்.21 ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாததால் அத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழி


ஸ்ரீபெரும்புதூர், அக்.21 ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாததால் அத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள ஏரிகளில் கலப்பதால் குடிநீர் ஆதாரங்கள் மாசடைந்து வருகின்றன.
ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றியுள்ள மாம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சுங்குவார்சத்திரம் போன்ற பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் ஆரம்பிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதைத் தவிர மேவளூர்குப்பம், தண்டலம், காட்டரம்பாக்கம், மண்ணூர் போன்ற ஊராட்சிப் பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானத் தொழிற்சாலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை. இதனால் இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் உள்ள குடிநீர் ஆதாரங்களான ஏரி, குளங்களில் கலக்கிறது.
குறிப்பாக, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாத தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் உள்ள செம்பரம்பாக்கம், காட்டரம்பாக்கம் ஏரிகளில் கலக்கிறது.
மாம்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள போந்தூர் ஏரியில் கலக்கிறது.
மேவளூர்குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் உள்ள கிருஷ்ணாநீர் கால்வாயில் கலக்கிறது.
இதைத் தவிர தொழிற்சாலைகளில் வீணாகும் உணவுப் பொருட்கள், கழிவுப் பொருள்கள் போன்றவை ஏரி, குளங்களில் கொட்டப்படுகின்றன.
கழிவுநீர் அகற்று வாகனங்கள் வைத்திருக்கும் தனியார் நிறுவனத்தினரும் ஏரிப்பகுதிகளிலேயே கழிவுநீரை கொட்டுகின்றனர். இதனால் ஏரியானது குப்பை கூளங்கள் நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது. ஏரியில் கொட்டப்படும் கழிவுப் பொருள்களால் நீரின் தன்மை மாறி நீர் மாசடைந்துவிடுகிறது. போந்தூர், காட்டரம்பாக்கம் பகுதிகளில் ஏரிநீரை பயன்படுத்திதான் விவசாயம் நடைபெறுகிறது. நச்சுத்தன்மை வாய்ந்த இந்த நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்துவதால் விவசாய நிலங்களின் மண்வளம் குறைந்து மகசூல் பாதிப்பதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த ஏரிநீரை குடிக்கும் கால்நடைகளுக்கு தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்புள்ளது.
மழைக்காலங்களில் கழிவுநீர் கலக்கப்பட்ட போந்தூர், காட்டரம்பாக்கம் ஏரிகள் நிரம்பும்போது வெளியேறும் உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது. முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுப்பொருள்களும், கழிவுநீரும் கலப்பதால் இந்த ஏரிநீரை குடிநீருக்குப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும், குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
எனவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாத தொழிற்சாலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கழிவுநீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்; அப்போதுதான் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் கால்நடைகளுக்கும் முக்கிய ஆதார சுருதியாக உள்ள இந்த நீர் ஆதாரங்களை காப்பாற்ற முடியும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...