சமூக சேவையில் "சௌராஷ்டிர சங்கம்'
குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்களாக கூறப்பட்டாலும் நாட்டின் பல மாநிலங்களிலும் குடியேறி அம்மாநிலத்தின் மக்களாகவே ஒன்றிப்போய் பல துறைகளிலும் பரிணமிப்பவர்கள் சௌராஷ்டிர சமூகத்தவர். தமிழ் நெஞ்சங்களைக் கவ


குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்களாக கூறப்பட்டாலும் நாட்டின் பல மாநிலங்களிலும் குடியேறி அம்மாநிலத்தின் மக்களாகவே ஒன்றிப்போய் பல துறைகளிலும் பரிணமிப்பவர்கள் சௌராஷ்டிர சமூகத்தவர்.
தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்த வெண்கலக் குரலோன் டி.எம். சௌந்தரராஜன், பாடகர் ஏ.எல்.ராகவன், நடிகையரில் எம்.என்.ராஜம், வெண்ணிற ஆடை நிர்மலா, "பாரிஸ்டர்' எல்.கே.துளசிராம், பிரபல தமிழ் எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம் போன்ற பலரையும் பல துறைகளுக்கும் தந்தளித்த பெருமைக்குரியது இச்சமூகம்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாழும் இவர்கள் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, மொழி, நாகரிகம் ஆகியவற்றுடன் கருத்தாலும், உள்ளத்தாலும் ஒன்றுபட்டவர்கள்.
பட்டு நெசவு, சுங்குடிச் சேலைத் தயாரிப்பு, தறி நெசவு ஆகியவற்றில் ஈடுபட்டு நெசவாளர்களாகவும், துணி வியாபாரிகளாகவும் திகழ்ந்தவர்கள் இன்றைக்கு பல துறைகளிலும் மிளிர்கின்றனர்.
மராத்திய நாயக்க மன்னர்களின் ஆட்சியில், மன்னர்களுக்குப் பட்டாடை நெய்வதற்காக குஜராத் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்ட பெருமையும் சௌராஷ்டிர சமூகத்தவருக்கு உண்டு.
மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, பரமக்குடி, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களிலும் இச் சமூகத்தைச் சேர்ந்த வபல லட்சம் பேர் வாழ்கின்றனர்.
தலைநகர் தில்லியிலும் மத்திய அரசுப் பணிகளிலும், தொழில்களிலும் ஈடுபட்டு
வரும் இச் சமூகத்தார் "சௌராஷ்டிர சங்கம், தில்லி' என்ற அமைப்பை ஏற்படுத்தி சமூகப் பணிகளையும் ஆற்றி வருகின்றனர்.
""குஜராத்தில் உள்ள அருள்மிகு சோமநாதர் ஆலயத்தில் கஜினி முகம்மது படையெடுத்தபோது அங்கு பூஜைப் பணியில் ஈடுபட்டிருந்த எங்கள் சமூகத்தவர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டது. அங்கிருந்து மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
திப்புசுல்தான் ஆட்சிக் காலத்தில் அவருக்கு அங்க வஸ்திரம் செய்து தரும் நெசவுப் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு அது பற்றி கேள்வியுற்ற திருமலை நாயக்கர் மன்னர் எங்களை மதுரைக்கு அழைத்த பெருமையும் உண்டு.
மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் காலத்தில்தான் எங்களுக்கு காயத்ரி ஜபம் செய்வதற்குரிய பட்டயத்தை அளித்ததாக கூறப்படுவதுண்டு. அதாவது, பிராமணருக்கு அடுத்தபடியாக பூஜை செய்வதற்கான தகுதியாக அந்தப் பட்டயம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது'' என்கிறார் இச் சங்கத்தின் செயலர் கே.எஸ்.கிஷோர் குமார்.
""மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுவதற்காக, எங்கள் சமூக மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தில்லி வந்தனர். 1940-ம் ஆண்டிலேயே சாந்தினி சௌக் பகுதியில் எங்கள் சமூகத்தவரின் துணிக் கடை ஒன்று இருந்துள்ளது.
தொடக்கத்தில் கரோல் பாகில்தான் குடியிருந்துள்ளனர். சமூக மக்களிடையே விவாதிப்பதற்கும், கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் அவ்வப்போது கூடிப் பேசி வந்தனர். 1960 முதல் 1980-ம் ஆண்டு வரை இது தொடர்ந்தது.
எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சிலர் சேர்ந்து 1984-ம் ஆண்டில் "சௌராஷ்டிர அசோசியேஷன், தில்லி' என்ற பதிவு பெற்ற அமைப்பை உருவாக்கினர். இதன் முதல் தலைவராக எம்.வி.குப்புசாமி இருந்தார்.
தில்லி மேம்பாட்டு ஆணையத்திடம் இடம் கோரி விண்ணப்பித்திருந்தோம். தமிழகத்தில் இருந்து தில்லிக்கு படிப்புக்காவும், போட்டித் தேர்வுக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் வருவோருக்கு தாற்காலிகமாகத் தங்குவதற்குரிய வசதியைச் செய்யவும், சமூகக் கலாசார நிகழ்வுகளை நடத்தவும் கட்டடம் கட்டும் நோக்கில் இந்த இடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டோம்.
இந்த முயற்சிக்கு முன்னாள் எம்.பி.க்கள் மதுரை மைந்தர்கள் ஏ.ஜி.எஸ். ராம்பாபு, பி.மோகன் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் மிகுந்த முயற்சி செய்தனர்.
கலாசாரத் துறையில் செயலராக இருந்த கோபாலஸ்வாமி, உதயகுமார் உள்ளிட்டோரும் உதவினர். கடந்த 2000-ம் ஆண்டில் மத்திய அமைச்சராக ஆனந்தகுமார் இருந்தபோது இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
2003-ம் ஆண்டில் ஜனக்புரி பகுதியில் 10 ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கீடு செய்வதற்கான பரிந்துரை கிடைத்தது. வருவாய் துறையின் விசாரணையும் முடிந்தது. எனினும், பல்வேறு நடைமுறைச் சிக்கல்களால் இன்னும் டி.டி.ஏ.விடம் இருந்து "டிமாண்ட் லெட்டர்' கிடைத்தபாடில்லை. ஆனாலும், இடம் பெறுவதற்கான முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இந்த இடம் தமிழர்கள் வந்து செல்லும் இடமாக இருக்கும் என்பதால் அந்த இடத்தைப் பெறுவதற்காக தமிழக எம்.பி.க்களைச் சந்திக்கவும் உள்ளோம்.
பாரதியாருக்குப் பெருமை:
தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மகாகவி பாரதியின் திருவுருவப் படம் இல்லாதது பெரும் குறை இருந்து வந்தது. இதை அறிந்த மறைந்த மதுரை மக்களவை உறுப்பினர் பி.மோகன், நாடாளுமன்ற உருவப்படக் கமிட்டியிடம் இது தொடர்பாக கடிதம் அனுப்பினார்.
அதில், தேசியக் கவியாகப் போற்றப்படும் பாரதிக்கு நாடாளுமன்றத்தில் திருவுருவப்படம் வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது முயற்சியை அறிந்த நாங்கள் திருவுருவப் படம் வரைவதற்கான பணியை மேற்கொள்ள ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தோம். அவரும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து எங்களது சமுதாயத்தைச் சேர்ந்த கே.கே. ஸ்ரீதரன் பாரதியாரின் திருவுருவப் படத்தை அழகுற வரைந்தெடுத்தார். இதற்காக ஒரு விழா நடத்தி பாரதியார் படத்தை பி.மோகனிடம் வழங்கினோம்.
அந்தப் படத்தை பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் திறந்து வைத்தார். நாடாளுமன்றத்தின் அருங்காட்சியகத்தின் மேல் பகுதியில் அந்தப் படம் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
சுதந்திரப் போராட்டத்திலும், இலக்கியத்திலும், ஆன்மிகம்- கல்விப் பணியிலும் சௌராஷ்டிர சமூகம் சீரிய பணிகளை ஆற்றி வந்துள்ளது. அந்த வரிசையில் பாரதியாருக்கு திருவுருவப் படம் நாடாளுமன்றத்தில் வைக்க எங்கள் பங்கும் இருந்ததை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
""சமூகச் சேவையாக பார்வையற்ற இல்லத்தினருக்கு உதவிகள் செய்து வருகிறோம். ஏழைகளுக்கு குளிர்கால ஆடைகளையும் இலவசமாக வழங்கி வருகிறோம். மந்திர் மார்கில் உள்ள டி.டி.இ.ஏ. பள்ளியில் 2006-ம் ஆண்டில் விழா நடத்தி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கினோம். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த கார்வேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியின்போது கிரேட்டர் கைலாஷ் என்கிளேவில் உள்ள பார்வையற்ற மகளிர் அமைப்பு வளாகத்தில், அப்பெண்கள் தயாரிக்கும் பொருள்களை விற்பதற்காக ஒரு மையத்தை எங்கள் சங்கம் அமைத்துத் தந்தது.
இந்த விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சதாசிவம், ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் மல்கோத்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச் சங்கத்தின் தற்போதைய தலைவராக ஆர்.எஸ்.எஸ். நாதன், துணைத் தலைவராக டாக்டர் ஜி.வி. பிரேம்குமார், செயலராக கே.எஸ்.கிஷோர் குமார், பொருளாளராக கே.ஆர். கணேஷ்பாபு, செயற்குழு உறுப்பினராக ஆர். கணேஷ், எஸ்.கே. கிருஷ்ணமூர்த்தி மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...