அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பீடு நடை போடும் தங்கம் முதலீட்டுக்கு உகந்ததா?

இன்று உலக அளவில் பெரிதும் பேசப்படும் உலோகம் ஒன்று என்றால் அது தங்கத்தைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் விலை விண்ணை நோக்கி மேலும், மேலும் பறந்து செல்வதே இதற்குக் கார

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:35 pm

எம். சடகோபன்

இன்று உலக அளவில் பெரிதும் பேசப்படும் உலோகம் ஒன்று என்றால் அது தங்கத்தைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் விலை விண்ணை நோக்கி மேலும், மேலும் பறந்து செல்வதே இதற்குக் காரணம். ஊடகங்களும் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது கவனிக்கத்தக்கது.

 தங்கத்தின் மீதான காதல் மனிதனுக்கு உயிருள்ளவரை குறையாது. அதன் விலையில் வேண்டுமென்றால் அடிக்கடி மாற்றம் வரலாம். ஆனால், அதை எந்த விலை கொடுத்தும் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் இருக்கிறது என்பது வரலாறு கூறும் உண்மை. குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை ஏராளமான நகைக் கடைகள் வந்த வண்ணம் இருப்பதிலிருந்து இதை அறிய முடியும்.

 மேலும், தேசிய பங்குச் சந்தையின் மூலம் தங்கம் (பேப்பர் கோல்ட்) வாங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது போக கமாடிட்டி மார்க்கெட்டிலும் தங்கம் வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. அமெரிக்காவில் 2007-2008-ல் வீட்டு அடமானக் கடன் சந்தையில் ஏற்பட்ட பெரும் சரிவால், உலகத்தில் பெரும்பாலான நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கின. இதனால், அனைத்து நிதிச் சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்தது. அதன் பின் ஓரளவு மீட்சி பெற்ற நிலையில், துபை நெருக்கடி நிதிச் சந்தையை உலுக்கியது. அதிலிருந்து ஓரளவு மீண்ட நிலையில், இப்போது ஐரோப்பிய யூனியன் நிதி நெருக்கடி கடும் சவாலாக அமைந்துள்ளது.

 இந் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதிச் சந்தையில் ஏற்பட்ட கடும் பாதிப்பு காரணமாக தங்கத்தின் மீதான மோகம் மேலும், மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 தங்கத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு சாதுரியமான ஒன்றுதான். பேசுவதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் தங்கத்தை எப்போது வாங்கலாம் என்பதற்கு சரியான விடை கிடைப்பது கடினம்.விலை உயரும்போது, வாங்குவதற்கு சில்லறை முதலீட்டாளர்கள் பெரிதும் யோசனையில் இருப்பர். விலை குறையும்போது இன்னும் குறையும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பர். எப்போது வாங்குவது என்று புரியாமல் இருக்கும்போது, திடீரென விலை உயர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு உன்னத உலோகம்தான் தங்கம்.

 ஒரு பாதுகாப்பான முதலீடாக மக்கள் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளே கருதும் நிலைக்கு தங்கம் மதிப்புப் பெற்றுள்ளது.

 உலக அளவில் பெரும் முதலீட்டாளர்கள், மத்திய வங்கிகள், மாநில வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அவ்வப்போது தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால், கடந்த சில வருடங்களாக தங்கத்துக்கு என தனி மவுசு வந்துள்ளதை உணரமுடிகிறது.

 தங்கத்தின் விலை அவ்வப்போது சிறிது குறையலாம். ஆனால், பங்குச் சந்தையில் வெகுவாக உயர்ந்து பின்னர் கடும் சரிவைச் சந்திக்கும்போது நிறுவனப் பங்குகள் விலை குறைவது போல் தங்கத்தின் விலை அவ்வளவு எளிதாகக் குறைந்துவிடாது.

 இந் நிலையில், கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வெகுவாக உயரத் தொடங்கியுள்ளது. இனி வரும் நாள்களில் அதன் விலை மேலும் ஏறுமா அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பு சாதாரண மக்களிடம் கூட நிலவுவது உண்மை. பல தரப்பட்ட மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்தக் கேள்விக்கு விடை அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது.

 தங்கத்தின் விலை ஒவ்வொரு முறையும் மேலே சென்றவுடன் படிப்படியாகக் குறைந்து கீழே வந்து மீண்டும் புதிய அதிகபட்ச விலையை நோக்கி வெற்றி நடைபோடுவதைத்தான் வழக்கமாகக் கொண்டுள்ளது.

 சாதனையை நோக்கி: புத்தாண்டில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து இதுவரை கண்டிராத அதிகபட்ச விலையைப் பதிவு செய்யும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

 பண்ட் நிறுவனங்கள், மத்திய வங்கிகள்,மாநில வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவை தங்கத்தை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். குறுகிய கால, நீண்ட கால முதலீட்டுக்கு தங்கத்தை வாங்குவது அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் சந்தை வட்டாரத்தில் நிலவுகிறது.

 முன்பெல்லாம் மத்திய வங்கிகள் ரிஸ்க்கை தவிர்க்கும் பொருட்டு அரசின் கடன் பத்திரங்களில் முதலீடுகளை மேற்கொண்டு வந்தன. ஆனால், இப்போது மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவதை ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பாகக் கருதுகின்றன.

 தங்கத்தின் விலை அவ்வப்போது குறைந்தாலும், திடீரென்று வெகுவாக விண்ணை நோக்கிப் பறக்கிறது. கடந்த செப்டம்பரில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,950 டாலரைக் கடந்து

 புதிய அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதைத் தொடர்ந்து தங்கத்துக்கு மவுசு மேலும் அதிகரித்துள்ளது. உலக அளவில் நிலவும் ஸ்திரமற்ற பொருளாதார சூóழ்நிலைகளும் தங்கத்தின் விலையை மேலே கொண்டு செல்லும் என்று கணித்துள்ளனர் மார்க்கெட் வல்லுநர்கள். 200 ஆண்டுகளுக்கு முன் ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கத்தின் விலை 19 அமெரிக்க டாலராக இருந்தது. இன்று அதன் விலை 2,000 அமெரிக்க டாலரை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

 1921-ல் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.21-ல் இருந்தது. 2000-ல் ரூ.3,300-ஐ கடந்தது. 2008-ல் ரூ.11,000-க்கும் மேல் சென்றது. இப்போது ரூ.21,500-ஐ கடந்துவிட்டது.

 உலக அளவில் தங்கத்துக்கு இப்போது தனி மவுசு ஏற்பட்டுள்ளதால், முதலீட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 மொத்தக் கையிருப்பில் உள்ள பணத்தில் சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்றும் அது மிகவும் பாதுகாப்பானது என்றும் முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவிகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.