இலங்கையில் 2009-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் கடைசி நாள்களில் தமிழர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இனப்படுகொலையை நிரூபிக்கும் ஆவணப்படம் தில்லியில் அண்மையில் திரையிடப்பட்டது.
சுமார் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய விடியோ மற்றும் புகைப்படங்கள் அடங்கிய இந்த குறும்படத்தை இயக்குநர் கெலம் மெக்ரே, தயாரிப்பாளர் ஜோ செல் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இவர்கள் இலங்கைப் போர்க்களத்தில் செய்தி சேகரித்த "சேனல் 4' தொலைக்காட்சி நிகழ்ச்சிக் குழுவைச் சேர்ந்தவர்கள்.
இலங்கை இனப் படுகொலை தொடர்பான உண்மை நிகழ்வுகளை மக்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் விளக்கும் வகையில், "சேனல் 4' குழுவினருடன் ஜோ செல் இந்தியா வந்துள்ளார்.
இவர்கள் உருவாக்கிய விடியோ குறும்படத்தை தில்லியில் வெளியிட "ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்' அமைப்பு உதவியுள்ளது.
இந்த குறும்படம், தில்லி "கான்ஸ்டிட்யூஷன் கிளப்' அரங்கில் சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.
தில்லித் தமிழ்ச் சங்க பொதுச்செயலர் இரா. முகுந்தன், முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் டி. ராஜா, பெண் உரிமை ஆர்வலர் ஆனி ராஜா, மனித உரிமை ஆர்வலர் மாலதி மைத்ரி உள்ளிட்டோர் இந்த படத்தைப் பார்வையிட்டனர்.
ஆவணப்பட விவரம் வருமாறு:
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற 2009 மே மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் "சண்டை நிறுத்தப் பகுதி' (நோ ஃபயர் úஸான்) என அறிவிக்கப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைகின்றனர்.
அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மறுவாழ்வுப் பிரிவு ஊழியர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்தப் பகுதிகளில் திடீர், திடீரென குண்டு மழை பொழிந்து, அதன் தொடர்ச்சியாக அங்குள்ள மக்கள் பலர் உடல் சிதறி உயிரிழக்கின்றனர்.
மரண ஓலத்துடன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்குமாக ஓடும் மக்கள் மீதும் குண்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் நூற்றுக்கணக்கான பெண்கள் கதறியழும் நிலையில், அவர்கள் ராணுவ லாரிகளில் ஏற்றப்படுவதையும், பின்னர் அவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை என்றும் ஆவணப்படம் கூறுகிறது.
ராணுவத்தினரிடம் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஆடைகள் அகற்றப்பட்டு, கைகள் பின்னுக்குக் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
இசைப்பிரியா: விடுதைலைப் புலிகள் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா என்ற பெண் உள்பட பல பெண்கள் அவ்வாறே கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
"அரசாங்கம் அளிக்கும் சிகிச்சை சரியாக இல்லை' என்று "சேனல் 4' தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்த நபர் மறுநாள் சுட்டுக் கொல்லப்பட்டு முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடப்பதாகவும் ஆவணப்படம் கூறுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், பிஸ்கெட் சாப்பிடுவது போலவும், அப்போது தன்னைச் சுற்றிலும் தெரிந்த முகம் ஏதாவது உள்ளதா என தேடுவது போலவும், பின்னர், உடலில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்டு பாலச்சந்திரன் சரிந்து கிடக்கும் படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
படம் திரையிட்ட பிறகு, "இலங்கைப் போரின்போது மனித உரிமைகளை அந்த நாட்டு ராணுவம் அப்பட்டமாக மீறியுள்ளது' என்பதை படத்தின் கடைசியில் விடியோ கான்பரன்ஸிங் மூலம் இயக்குநர் கெலம் மெக்ரே விளக்கினார்.
"இந்தியா குரல் கொடுக்க வேண்டும்'
இலங்கை இனப்படுகொலையை நிரூபிக்கும் ஆவணப் படத்தைப் பார்வையிட்ட பின் அது குறித்து சமூக ஆர்வலர்கள் பேசியது:
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தலைமை அலுவலர் ஜி. அனந்தபத்மநாபன்:
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்று அந்த நாட்டு அரசு கூறிவருவதை பொய்யாக்கும் வகையில் கெலம் மெக்ரே குழுவினர் ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த விஷயத்தில் பக்கத்து நாட்டில் வாழும் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை தட்டிக்கேட்கும் தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது.
தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார்:
இலங்கை இனப்படுகொலையை நிரூபிக்கும் இந்த விடியோ காட்சிகள் பல விஷயங்களை உணர்த்துகின்றன. மனித உரிமைகள் மீறப்படும்போது நாம் கைகட்டி வேடிக்கை பார்க்கக்கூடாது. தனது பொறுப்பை உணர்ந்து எஞ்சியுள்ள இலங்கை மக்களையாவது இந்தியா காப்பாற்ற வேண்டும்.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சகாதேவன்: இனப்படுகொலையை திட்டமிட்டே நடத்தும் இலங்கை அரசுக்கு, தன்னை இறையாண்மை மிக்க நாடு என கூறிக் கொள்வதற்கான உரிமை கிடையாது. இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் உதவ இந்தியாவால்தான் முடியும். ஆனால், அதன் செயல்பாடுகள் ஏமாற்றத்தை அளிக்கின்றன.
"ஐ.ஏ.என்.எஸ்.' செய்தி ஆசிரியர் எம்.ஆர். நாராயணசாமி:
இலங்கையில் இனப்படுகொலையை நிரூபிக்கும் விடியோ ஆதாரங்கள் இதற்கு முன்பும் வெளி வந்துள்ளன. இதுவரை வெளிவராத பல ஆதாரங்கள் வரும் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். இத்துடன் இலங்கைக்கு எதிரான போராட்டக் குரல்கள் முடிந்து விடவில்லை. இனிதான் அவை ஓங்கி ஒலிக்கப் போகின்றன.
தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் இரா. முகுந்தன்: ஜெனீவா கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும். அதற்கான தீர்மானத்தை இந்தியா கொண்டு வரவேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா: இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றதை நிரூபிக்க இதைவிட ஆதாரங்கள் தேவையில்லை.
இதற்குப் பிறகாவது, இலங்கைக்கு சாதகமான நிலையை எடுப்பதைக் கைவிட்டு, அந்த நாட்டு அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று டி. ராஜா கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால், விமானத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்! சுவாரசியம்

விராலிமலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 149-வது ஆண்டு பெருவிழா!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

