ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பான ஆவணங்களின் முதல் தொகுதியை இத்தாலியிடம் இருந்து மத்திய அரசு பெற்றுள்ளது.
இத்தாலியின் ஃபின்மெக்கனிக்கா நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு 12 ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தின்போது இந்தியாவில் உள்ளவர்களுக்கு ரூ.360 கோடி லஞ்சமாகக் கொடுக்கப்பட்டது சமீபத்தில் தெரியவந்தது.
இதையடுத்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்டோர் மீது இத்தாலி அரசு கைது நடவடிக்கை எடுத்தது. இந்த ஊழல் விவகாரம் இந்தியாவிலும் பெரிய பிரச்னையானது. இந்தியாவில் லஞ்சம் பெற்றது யார் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்தன. இதில் முன்னாள் விமானப் படை தலைமை தளபதி தியாகி மீது முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி உத்தரவிட்டார். எனினும் உரிய ஆவணங்களைப் பெற முடியாததால் வழக்கை விசாரிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. எனவே இந்த முறைகேடு தொடர்பான ஆவணங்களை தருமாறு மத்திய அரசு இத்தாலி அரசிடம் கேட்டுக் கொண்டது. ஆனால் இத்தாலிய சட்டப்படி அந்நாட்டில் இருந்து முக்கிய ஆவணங்களைத் தர முடியாது என மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இத்தாலி அரசுத் துறை சார்பில் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல்நிலை விசாரணை அறிக்கை மத்திய அரசுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கில் சிபிஐ அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







