வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அதிசயப் பறவைகள்!

'பறவைகள் பலவிதம். அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்....' என்ற திரைப்படப் பாடல் ஒன்றுள்ளது.

News image
Updated On :14 ஜூன் 2026, 4:15 am IST

'பறவைகள் பலவிதம். அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்....' என்ற திரைப்படப் பாடல் ஒன்றுள்ளது. இவ்வாறு பறவைகள் உலகில் தனித்துவத்தோடு வாழ்கின்றன. அதிசயத்தக்க வகையில் அவற்றின் செயல்பாடுகள் இருக்கும். அவ்வாறு அதிசயப் பறவைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

கல்குருவிகள்

மனிதர்களின் பார்வையில் படாமல் ஒதுங்கி வாழும் சில பறவை இனங்களில் ஒன்று 'கல்குருவி' என்று அழைக்கப்படும் சிறிய பறவைகளாகும்.

ஒரு காலத்தில் ஆந்திரத்தில் லங்கமல்லேஸ்வரா வனப் பகுதிகளில் இவை அதிகம் காணப்பட்டன. சிறிய செடிகள் நிறைந்த புதர்களில் வாழும் இந்தக் கல்குருவிகள் ஏறக்குறைய அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது.

இரவு நேர வாழ்க்கைக்கு ஏற்ப பெரிய கண்களுடன் தனித்துவமாகக் காணப்படும் இந்தக் குருவிகள் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாகத் தென்பட்டதாகப் பதிவாகியிருந்தது.

இரவு நேரத்தில் பூச்சிகள், சிறிய நில உயிரினங்களைத் தரையில் தேடித் தின்று வாழும் தன்மை கொண்டவை. மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் இந்தக் கல்குருவிகள் வருவதில்லை. மிகவும் அரிதாகவே மனிதர்களின் பார்வையில் தென்படுகின்றன. இருப்பினும், இந்தக் குருவிகளின் இருப்பை நீண்ட காலமாக உறுதி செய்ய இயலவில்லை.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் கல்குருவிகளின் 'கீச்' என்ற ஒலி லங்கமல்லேஸ்வரா வனச் சரணாலயத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் பதிவானது கல்குருவிகள் இனம் இன்றும் உயிருடன் உள்ளதை நிரூபிக்கும் மிகப் பெரிய சான்றாகும். இந்தியாவில் மட்டுமே காணப்படக்கூடிய இந்தப் பறவைகள் 'இயற்கை பராம்பரியத்தின் ஆத்மா' என்றும், அதன் தொடர் வாழ்வுகள் 'சுற்றுச்சூழல் சமநிலைக்கு பெரிய அடையாளம்' என்றும் கருதப்படுகிறது.

'ஸ்விப்ட்பேர்டு'

வானத்தில் பறந்தாலும், இரை அல்லது தண்ணீர் தேடி பறவைகள் தரைக்குத்தான் வரவேண்டும். ஆனால், இயற்கை விதிகளை மீறி, பல நாள்கள் கூட வானில் பறந்து, தரைக்கு வராமல் இருக்கும் ஒரு பறவை இனம்தான் 'ஸ்விப்ட்பேர்டு'.

பறக்கும்போது கிடைக்கும் பூச்சிகளைச் சாப்பிட்டு விட்டு, அப்படியே தண்ணீரைக் குடித்துவிட்டு மேலெழுந்து செல்லும்.

தங்களின் வாழ்க்கையில் பெரும்பகுதியை வானில் பறந்துகொண்டு செலவிடும் இந்தப் பறவைகள் ஒவ்வொன்றும் ஆண்டு முழுவதும் சுமார் 2 லட்சம் கி.மீ. பயணிப்பதாகத் தெரியவந்துள்ளது.

வானத்தில் பறக்கும்போது அப்படியே கண்களை மூடி உறங்கும் என்பதும் இந்தப் பறவைகளின் இன்னொரு தனித்துவமான இயல்பாகும். தமிழ்நாட்டில் இந்த வகை குடும்பத்தைச் சேர்ந்த பறவைகள் 'உழவாரக் குருவிகள்' எனக் குறிப்பிடப்படுகின்றன. இவற்றைக் கிராமங்களில் காணலாம்.

-கோட்டாறு ஆ.கோலப்பன்

வரிக்குதிரை சிட்டுகள்

குழந்தைகளும், பறவைகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான செயல்முறையின் மூலமே மொழியைக் கற்கின்றன. இதில் ஒரு வேறுபாடு உள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும், 'வரிக்குதிரைச் சிட்டு' போன்ற பறவைகளின் மூளைகள் எண்ண முடியாத அளவுக்கு நரம்பு இணைப்புகளால் நிரம்பியுள்ளன. இவை மூலம் பறவைகள் பாடக் கற்கின்றன.

மனிதர்கள் காதில் உள்வாங்கி, பாடுவது பொதுவானது. ஆனால், சங்கீதத்துக்கோ போதிப்பவர் வேண்டும். பறவைகளைப் பொருத்தவரை இந்த உந்தல் வெளியிலிருந்து வருவதில்லை. சிட்டுகளுடமிருந்தே வருகிறது. அவை கடினமாக இருந்தாலும், இறுதியில் வளர்ந்தவுடன் சிரமமின்றி பாடல்களைப் பாடக் கற்கிறது.

வரிக்குதிரை குருவிகள் பாடல்களில் ஆரம்பத்தில் தேர்ச்சி பெறுவது கடினம். அந்த மெட்டுகளையும் ஒலிகளையும் பல்லாயிரம் முதல் லட்சக்கணக்கான வரை திரும்பத் திரும்ப பாடுவதின் மூலம் பறவைகள் தேர்ச்சி பெறுகின்றன.

சுயமாக உந்துதல் பெறும் பறவைகள் ஒரு மாதத்துக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தடவை பாடுகின்றன. பல மணிநேரம் உற்று நோக்கிய பின்னரே பாட முடிகிறது. அருகிலுள்ள வளர்ந்த பறவைகளை உற்று நோக்குவதின் மூலம் காலப்போக்கில் அவற்றின் கீச்சொலிகளை தெளிவாகப் பிரித்தறியக் கூடிய மெட்டுகளாக மாறுகின்றன. இவை தற்காப்புக்கும் இனப் பெருக்கத்துக்கும் பயன்படுத்துகின்றன.

ஒரே மரத்தில் 150 பறவை இனங்கள்

மும்பை வில்லேபார்லேயின் கிழக்கில் உள்ள சுபாஷ் சாலையில் உள்ள பிரம்மாண்ட அரச மரத்தில் எகிப்திய கழுகுகள், அமூர் வல்லூறுகள், சொர்க்கப் பறவைகள், இருவாச்சிப் பறவைகள், மீன் கொத்திகள், கழுகுகள், கூச்ச சுபாவம் உள்ள நீர்க் கோழிகள் உள்ளிட்ட 150 பறவை இனங்கள் உள்ளன. இதனால் இந்த மரம் பருவ கால சரணாலயமாகவே விளங்குகிறது.

இந்தப் பல்லுயிர்ப்பெருக்க மையமானது அடர்த்தியான மாநகர்ப்புற உள்கட்டமைப்புக்கு மத்தியில் விமான நிலையம், முக்கியச் சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.

இந்தப் பகுதியில் வசிக்கும் பறவைகளை புகைப்படக் கலைஞர் மாதுரி தேஷ்முக் நுணுக்கமாக ஆவணப்படுத்தியுள்ளார். இவ்வாறாக, 150 பறவை இனங்களை தன் காமிராவில் படம் பிடித்துள்ளார்.

'செப்டம்பர், ஏப்ரல் மாதங்களில் ஆயிரம் கி.மீ. பயணிக்கும் மூர் வல்லூறு உள்ளிட்ட பறவைகள் மரத்தில் தங்கிச் செல்கின்றன. அரச மரம் ஒரு தன்னிறைவு பெற்ற சூழல் அமைப்பு போல் செயல்படுகிறது. அதன் பழங்கள் பூச்சிகளையும், வண்ணத்துப் பூச்சிகளையும் ஈர்க்கின்றன. அதிகாலையில் சிறிய பறவைகள் பெரும்பாலும் மரத்துக்குக் கூட்டமாய் வருகின்றன. கழுகு, வல்லூறு போன்றவை நாளின் பிற்பகுதியில் 11 மணிக்கு மேல் வருகின்றன.

சிக்ரா, இம்பீரியல் ஃபால்கன், பிராமினி கைட் , பர்ப்பிள் ரமபெட் , சன் பேர்ட் , கோல்டன்யோல், க்ரோஃபெசண்ட் ரூபஃஸ் டெயல்ட், ஸ்க்ரப் ராபின் ஆகியவை இதில் அடங்கும். இந்த மரம் ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. பறவைகள் பறக்கும் பாதை அல்லது முக்கிய இடப்பெயர்வு வழித்திட்டத்தில் இந்த மரத்தைப் பயன்படுத்துகிறதா என அறிந்துகொள்ள மேலும் ஆய்வு தேவை'' என்கிறார் மாதுரி தேஷ்முக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.