வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வழக்கு விசாரணைகள் காரணமாக முதலீடுகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது: ப.சிதம்பரம்

சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை குறித்த வழக்கு விசாரணைகள் காரணமாக, சட்டபூர்வமான முதலீடுகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்று அமலாக்கத் துறைக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார்.

News image
Updated On :1 மே 2013, 8:21 pm

சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை குறித்த வழக்கு விசாரணைகள் காரணமாக, சட்டபூர்வமான முதலீடுகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்று அமலாக்கத் துறைக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை போன்ற பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பாக புலனாய்வும், நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையும் நடக்கின்றன. ஆனால், இந்தப் புலன்விசாரணையால் பொருளாதார நடவடிக்கைகள் (முதலீடுகள்) பாதிக்கப்படக் கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பணம் தொடர்புடைய குற்றங்கள் குறித்து நாம் விசாரித்து வந்தாலும், அனைத்து சட்டபூர்வமான வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் எந்தெந்த வழக்குகளை விசாரிப்பது என்பதை முடிவு செய்வதில் எச்சரிக்கை அவசியம். இல்லாவிட்டால் நாம் விசாரிக்க வேண்டிய வழக்குகள் ஏராளமான அளவில் குவிந்துவிடும்.

நமது பொருளாதாரம் என்பது, வர்த்தகம் மற்றும் முதலீடுகளால், குறிப்பாக வெளிநாட்டு வர்த்தகத்தால் இயக்கப்படுகிறது. முதலீடுகள் உள்ளிருந்து வெளியிலும், வெளியில் இருந்து உள்ளேயும் மேற்கொள்ளப்படலாம். முதலீடுகளுக்கும், வெளிநாட்டு வர்த்தகத்துக்கும் நாம் வசதி செய்து தர வேண்டும்.

ஆள்கள் கடத்தல் மற்றும் போதைக் கடத்தல், பயங்கரவாதத்துக்கு நிதி தருவது ஆகிய குற்றங்களின் பின்னால் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை உள்ளது. இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க சர்வதேச அளவில் அதிக அளவிலான ஒத்துழைப்பு அவசியம். உலகம் முழுவதும் உள்ள அமைப்புகள் தகவல், தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட வேண்டும்.

அமலாக்கத் துறையை வலுப்படுத்துவதோடு அதில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதும் அவசியம். இந்தக் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்துறையில் 2,064 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால் இப்போது 660 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால், 1404 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன என்றார் ப.சிதம்பரம்.

சொத்துகள் பறிமுதல்: இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் இப்பிரிவின் தலைவர் ராஜன் கடோச் பேசுகையில், ""2012-13ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை ஒட்டுமொத்தமாக ரூ.2,357 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளது.

இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7 மடங்கு அதிகமாகும். எனினும், நாம் விசாரித்து வரும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை, அன்னியச் செலாவணி விதிமீறல் மற்றும் பொருளாதாரக் குற்றங்கள் ஆகியவற்றை பெரிய பனிமலை ஒன்றின் ஒரு துளி மட்டுமே என்றே கருதுகிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.